சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னது
======================================
ஆசை
=====
Something for nothing என்பது கிடையாது. எதையாவது கொடுக்கவேண்டும். பணம், உழைப்பு, ஆசை இப்படி. ஆசையென்றால் 24 மணி நேரமும் பின்னிப் பின்னி அதையே நினையுங்கள். ரெண்டு நாள் நினையுங்கள். மூன்றாவது நாள் உங்கள் மனசு டான்ஸ் ஆடும். அவ்வளவு சக்தி நம்மிடம் உள்ளது. 
இரவில் படுக்கப்போகும்போது உள்ள நினைப்பு விழித்தவுடன் முதல் எண்ணமாக வரவேண்டும். அப்போதுதான் நீங்கள் ஆசைப்படுவதாக அர்த்தம். 
24 மணி நேரமும் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்ப உடல் கெட்டுப்போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசையின் தரத்தைப் பொறுத்து சீக்கிரமாகவோ தாமதமாகவோ கிடைக்கும். 
உங்கள் ஆசை பலமாக இருந்தால் தனக்குத்தானாகவே எல்லாம் நடக்கும். நேர்மையாக ஆசைப்பட்டால் உங்கள் பக்குவத்திற்கேற்ப குரு வந்து சேர்வார். 
முயற்சி என்றால் என்ன? ஆசைப்படுவது. ஆனால் ஆசை உங்களுக்கு நன்மை செய்வதாகவும், அடுத்தவனுக்கு கெடுதல் செய்யாததாகவும் இருக்கவேண்டும். 
எந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் அடைய ஆசை கொடுக்கிறதோ, அந்தப் பொருளில் தெய்வீகத்தன்மை கலந்துள்ளது என்று அர்த்தம். 
ஆசை specific-ஆக இல்லாதவரை வளராது. அதாவது இன்னதுதான் வேண்டும் என்று தெளிவாகத் தெரியாத வரையில் அது வளராது. 
மனிதனுக்கு வருகின்ற ஆசையெல்லாம் ஆண்டவனிடமிருந்து வருவதுதான். மலத்தைத் தின்னவேண்டும் என்று யாருக்காவது ஆசை வருகிறதா? 
அப்படியானால், எதில் ஆசை வருகிறதோ அது முடியும் என்று அர்த்தம். 
ஆனால் அதற்கான விலையை எப்படிக் கொடுப்பது என்று நமக்குத் தெரியவில்லை. 
நாம் பௌதீக உடலில் இருப்பதனால் சிலவற்றுக்கு விலை அதிகமாகவும், சிலவற்றுக்கு விலை குறைவாகவும் கொடுக்க வேண்டியுள்ளது. 
நாம் வளர வளர கொடுக்க வேண்டிய விலையும் குறைந்துகொண்டே போகும். 
நமக்கு ஆசை இருப்பதால், நமக்கு எந்த மனப்பான்மை தேவையோ அது நமக்கு வருவது மட்டுமல்லாமல், அந்த மனப்பான்மை உள்ளவர்களோடு நட்பு ஏற்படும்.  
எந்த மனப்பான்மை நம்மைக் கெடுக்குமோ, அது நமக்கு வராமலிருப்பதோடு, அது உள்ளவர்மீது வெறுப்பு ஏற்படும். 
இதெல்லாம் ரியாலத் (ஆன்மிகப் பயிற்சி) செய்வதனால் வரும். 
ஆசையை வளர்ப்பது எப்படி? எது வேண்டுமோ, அதை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் கற்பனை செய்யுங்கள். 
எதைப்பற்றிப் பேசுகிறீர்களோ அதில் ஆசை உள்ளது என்று அர்த்தம். 
கஷ்டப்பட்டதைச் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தால் கஷ்டப்படுவதில் ஆசை உள்ளது என்றுதான் அர்த்தம். 
நீ நானாக மாறும் வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல என்பது நிஜமாக ஆசை அவசியம். ஆசை இல்லாமல் அது முடியாது. 
ஆசைதான் துஆ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக