சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
=============================================

(ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் பாசிடிவிட்டி டெவலப் ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (அது) வரும்.

உனக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம் பற்றி தப்பும் தவறுமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருக்க முடியுமா? முடிந்தால் அது self-control-ஆகும். வாயினால் மட்டும்மல்லாமல், இப்படி உளறுகிறார்களே என்று மனசாலும் பேசாமல் இருக்கவேண்டும்.

நினைத்த சூழ்நிலை நடக்காமல் நேரம் விரயமாகும்போது மனம் நெகடிவ்-ஆக யோசிப்பதும், நேரு ஜெயிலில் ’டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ எழுதாமல் ஜெயில் கம்பியை எண்ணிக் கொண்டிருப்பதும் ஒன்றுதான். மனதை ஒரேநிலையில் எப்போதும் வைக்க முடிந்தால்தான் சாதனைகள் செய்வது சாத்தியப்படும்.

நரம்பு சக்தியைத் திரட்டுவது என்றால் ‘ரிலாக்ஸ்’ பண்ணுவது என்று அர்த்தம். நரம்பு சக்தியைச் செலவு செய்வது என்பது focus செய்வதாகும். ஆனால் நாம் பொதுவாக திரட்ட வேண்டிய நேரத்தில்தான் செலவு செய்துகொண்டிருக்கிறோம்.  

(நான் பேசிக்கொண்டிருக்கும்போது) உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. இது first rule. நான் பேசிக்கொண்டு இருக்கும்போது பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.  (உதாரணமாக), நான் மினாராவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு நாகையில் உள்ள லைட் ஹவுஸ் ஞாபகம் வரலாம். அதைப்பற்றி நீங்கள் சொல்லவும் கூடாது, நினைத்துக் கொண்டிருக்கவும் கூடாது.

இதற்கு என்ன அர்த்தம்? இது ஒரு குறையின் வெளிப்பாடு. குறையின் நிழல் அல்லது விளைவு. அது என்ன குறை? (சீடர்கள் பல பதில்களைச் சொல்கிறார்கள்). எந்த சூழ்நிலையில் ஒருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தை கவனித்துக்கொண்டு (இருக்கும்போது மனதில்) மற்ற எது வந்தாலும் தட்டி விட்டுக்கொண்டே இருப்பீர்கள்? எந்தக் குறையினால் நோக்கத்துக்கு மாறுபட்ட சிந்தனை வருகிறது?

1) முதலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை. 
2) ஆசை உறுதியாக இல்லை. 
3) வாழ்க்கைக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நீங்கள் (இன்னும்) நம்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக