செவ்வாய், 25 அக்டோபர், 2016

'விதைப்பந்து மூலம் காடுகளையே உருவாக்கலாம்!' என்ஜினீயரிங் மாணவரின் நம்பிக்கை.

  
ன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், நாமக்கல்லில் உள்ள ராசிபுரத்தைச் சேர்ந்த ஜனகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். பொறியியல் படிப்பை முடித்தாலும், இயற்கை விவசாயம் மற்றும் விதைகளின்மீதே அதிக ஆர்வம் இருந்தது.  இதற்காக தன்னுடைய வீட்டு மாடியில் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். மாடி தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், அழிந்துவரும் செடிகள் என தன்னால் முடிந்த அளவில் செடிகளைப் பாதுகாத்து வருகிறார்.இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான விதைப்பந்துகளை செய்து தரிசு நிலங்களில் வீசி தரிசு நிலங்களை பசுமையடையச் செய்துள்ளார். விடுமுறை நாட்களில் பள்ளிக் குழந்தைகள், நண்பர்கள் என பலருக்கும் விதைப்பந்து செய்வது பற்றி பாடமும் எடுத்துவருகிறார். தாம்பரம் மக்கள் குழுவின் மூலம் சூழலியலாளர்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை ஒழித்து ஏரிகளைப் பாதுகாக்கும் பணிகளையும் செய்து வருகிறார். விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜனகனை சந்தித்து பேசினோம்.
                  
 "என்னுடைய அப்பா, அம்மா இருவரும் அரசு பணியில் இருந்தாலும், எங்கள் தாத்தா, பாட்டி காலம் வரையிலும் விவசாயம் தான் செய்து வந்தோம். சிறு வயதில் நானும் ஆடு, மாடு என இயற்கை சூழலோடு தான் வளர்ந்து வந்தவன் தான். பள்ளியில் படிக்கும் காலங்களில்   இருந்தே இயற்கையின் மீது ஆர்வம் அதிகம். கடந்த ஓர் ஆண்டாக விதைப்பந்து செய்து வருகிறேன். விதைப்பந்திற்கு வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் ஆகியவை சேர்ந்த கலவைதான். இந்த கலவையில மண் 5 பங்கும், மாட்டுச் சாணம் 3 பங்கும், சிறுதானிய விதையானது ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையில் சேர்க்கப்படும் மண் வயல்களில் இருக்கும் மேல்மண்னே போதும், ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளை செய்து நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். ஈரப்பதத்துடன் நேரடியாக வெயிலில் காய வைத்தால் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும்.
                          
     மண், எரு போன்றவை கலந்து விதைப்பந்து செய்வதால் எலி, எறும்பு, பறவைகள் மற்றும் பூச்சிகளால் உள்ளே இருக்கும் விதைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. விதைகள் முளைப்பதற்கு தேவையான சத்தானது நாம் கலந்து இருக்கும் எருவில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். நாம் வீசிய விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் விதைப்பந்து தட்டையாக உருகி விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்கு செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். விதைப்பந்து வீசிய இடத்தில் இதற்கு என்று நாம் எவ்வித பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. விதைப்பந்து செய்வது ஒன்றும் கடினமான செயல் அல்ல. ஒரு முறை கற்றுக் கொடுத்தால் குழந்தைகளே செய்து விடுவார்கள்.
                     
கைசெலவுக்கு மாடித்தோட்டம்:
     வீட்டு சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து வருகிறேன். இயற்கை முறையில் விளைவிப்பது தான் உடல்நலத்துக்கு ஏற்றது. தற்போது தக்காளி, கத்தரி போன்ற காய்கறி செடிகளும், பல்வேறு கீரை வகைகளும் வளர்த்து வருகிறேன். அரிய வகை செடிகளான முள்ளு சீத்தாப்பழம், மகிழம், வில்வம், பனீர், கொய்யா போன்ற செடிகளை வளர்த்து வருகிறேன். இந்த செடிகளை விரைவில் தன்னுடைய பண்ணை நிலத்தில் நட்டு வளர்க்க நிலங்களைச் சீர் செய்து வருகிறேன். பேய்சுரை, பேய்ப்பீர்க்கன், மகுடி சுரை, பல்வேறு வகையான வெண்டை விதை என அழிந்து வரும் பாரம்பரிய விதைகளையும் சேகரித்து வருகிறேன். அரிய வகை மரங்களின் செடிகளை வளர்த்து வருகிறேன். நான் வளர்த்து வரும் அரிய வகை விதைகளை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

நன்றி: விகடன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக