திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பிணி நீக்கும் பிராணாயாமம்

 
மது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹதயோகம் உதவுகிறது. ஆரோக்கியமான உடலில் இருக்கும் உள்ளமும் உறுதியாக இருக்கிறது. யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.
நாம் பார்க்கும் காட்சிகளும், காதால் கேட்பவைகளும் நமது சிந்தனையைக் கவனமாக ஊன்ற விடாமல் தடுக்கின்றன. மற்ற புலன்களும் இப்படி கவனத்தைக் கலைக்கத் தூண்டுகின்றன. மனம் இப்படி அலைபாயாமல் தடுப்பதற்கு உதவும் ஹதயோகம் ,பிராணாயாமத்தையும் அதை ஒட்டிய மூச்சுப் பயிற்சிகளையும் குறிப்பிடுகிறது.
ஓர் அலாரம் கடிகாரத்தை எடுத்து உங்கள் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற சிந்தனை எதுவும் இன்றி, 'டிக் டிக்' என்ற அதன் சப்தத்தைக் கவனமாகக் கேளுங்கள். இப்படி நீங்கள் முயலும்போதே, பிற சிந்தனைகள் வந்து உங்கள் மனதை அலைக்கழிக்கக்கூடும். பிடிவாதமாக மனதைக் கட்டுப்படுத்தி இந்தப் பயிற்சியைத் தொடருங்கள். முதலில் சில நிமிடங்களுக்கு இப்படி இருக்க முடியும். பிறகு தொடர்ந்து இவ்வாறு இருக்கவும் பழகி விடுவீர்கள்.
இப்படி நீங்கள் கவனிக்க முயலும்போது என்ன நடக்கிறது? உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மூச்சைக் கட்டுப்படுத்துகிறீர்கள். மிக மெதுவாகவும், அடக்கியும், ஆழ்ந்தும் மூச்சு விடுகிறீர்கள். இது எதைக் காட்டுகிறது? மனம் கவனமாக ஊன்றும்போது மூச்சு விடுவதின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
பிராணன் மனதில் அமர்ந்திருக்கிறது. ஆகையால் பிராணன் அசையும்போது மனம் இயங்குகிறது' என்று சிவ கீதை கூறுகிறது. "பிராணன் நீங்கும்போது மனம் செயலற்றுப் போகிறது. மனதைத் தேர் என்று சொன்னால், பிராணனை அதன் சாரதி என்று சொல்லலாம். இரண்டும் சேர்ந்து இயங்கும்போது உயிரோட்டம் தேர் போலச் சீராக ஓடுகிறது" என்று வசிஷ்ட முனிவர் ' யோக வாசிஷ்டத்' தில் கூறுகிறார்.
ஹதயோகத்தின் இரண்டு எழுத்துக்கள் 'ஹ' என்பதும், 'த' என்பதும் ஆகும். இவை சூரியனையும், சந்திரனையும் குறிக்கின்றன. பிராணவாயு சூரியனாகவும், அபானவாயு சந்திரனாகவும் இதில் குறிப்பிடப்படுகின்றன. உடலில் ஓடும் இந்தக் காற்றைக் கட்டுப்படுத்துவதும், வெளி உலகில் பரவி நிற்கும் காற்றுடன் இணைய வைப்பதும் பிராணாயாமத்தின் அடிப்படையாகும்.
பிராணன் என்பது உயிர்ச்சக்தி. அது உலகெங்கும் காற்றாகவும், நீராகவும், உணவாகவும் பரவிக் கிடக்கிறது. இப்படி வெவ்வேறு பொருட்களில் பரவி நிற்கும் பிராணசக்தியை, பிராணாயாமத்தின் மூலம் நாம் உடல் முழுவதும், எல்லா நரம்புகளிலும் நாடிகளிலும் இயங்க வைக்கிறோம். சிந்தனையிலிருந்து சாதாரண உடல் அசைவு வரை ஒவ்வொன்றையும் இது கவனித்துக் கொள்ளுகிறது. அதனாலேயே பிராணாயாமம் நம்முடைய உடலைப் பிணிகள் பீடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லுகிறோம்.
கடலில் அசைவு இருக்கும்போது அலைகள் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். பிராணனின் அசைவும் இவ்வாறே மூச்சாக வெளிப்படுகிறது. இதை அளவாக உள்ளே இழுப்பதும், சற்று தங்க வைத்து நிறுத்துவதும், பின் வெளியிடுவதும், இந்த அசைவைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படிப் பிராணாயாமம் செய்யும்போது, உடல் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. மூச்சுவிடுதல், ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவைகளுடன் தொடர்பு உள்ள நோய்களும் தாமாகவே நீங்கி விடுகின்றன.
மனித உடலில் பிராணன் செய்யும் மிக நுட்பமான இயக்கம், மனதைச் செயற்பட வைப்பதுதான். இதைப் பிராணாயாமம் சிறப்பாக ஆக்குகிறது. மனித உடலில் மிக முக்கியமான இயக்கம், சுவாசத்துக்கு உதவும் சுவாசப் பைகள்தாம். அது சரியாக இல்லாவிட்டால் இதயம் உட்பட எல்லாமே சீர்கெட்டுப் போகும். பிராணாயாமம் சுவாசத்தை கட்டுப்படுத்துகிறது. அதன் மூலம் உடல் முழுவதையுமே பிராண சக்தியினால் கட்டுப்படுத்துகிறது. இதனால் நோய்நொடியில்லாத வாழ்க்கையை நாம் பெற முடிகிறது. இப்படி உள்ளமும், உடலும் வலுவடைந்த ஒருவர், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்திப் பிறரையும் குணப்படுத்த முடியும். 'தொட்டுக் குணப்படுத்துவது' ( Healing Therapy ) என்ற மருத்துவ முறையின் அடிப்படை இதுதான்.
பிராணசக்தியை, பேட்டரியில் 'பவர்' சேகரிக்கப்படுவதைப் போல், உடலின் நாபிப் பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். இப்படிச் செய்யக்கூடிய மகான்கள், அதைப் பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார்கள். மீண்டும் பிராணாயாமத்தின் மூலம் உடல்நலம் பெறுகிற சக்தியும் அவர்களுக்கு உண்டு. நாபியிலிருந்து எழும் சக்தி, அந்த யோகிகளின் மூளையையும் பிரகாசமாக்குகிறது.
இவ்விதம் அருள்வலிமை பெற்ற யோகிகளுக்கு முகத்திலேயே தனியான பிரகாசம் சுடர்விடுகிறது. அவர்களுடைய பார்வையிலேயே அந்தச் சக்தி ததும்புகிறது. அவர்களுக்கு எதிரே உட்கார்ந்திருப்பவர்களால் அதன் வலிமையை உணரமுடிகிறது. பார்வையினாலேயே மற்றவர்களுடைய கவலையைப் போக்கி அருள்புரியும் சக்தியையும் அந்த மகான்கள் பெறுகிறார்கள். தொடுதல் மூலமாக காந்த சக்தியை செலுத்தி குணப்படுத்துவது, பார்வையால் குணப்படுத்துவது, நம்பிக்கையூட்டிக் குணப்படுத்துவது போன்ற நற்காரியங்களுக்கு அவர்கள் இந்த அரிய சக்தியை பயன்படுத்துகிறார்கள். சுயநலமின்றி இவ்வாறு அவர்கள் செய்யும்போது அது மேலும் மேம்பாடு அடைகிறது.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் சிறுகாரியங்களில் பிராண சக்தியைப் பயன்படுத்தி ஆறுதல் அடைகிறோம். கனமான ஒரு பொருளை தூக்கும்போது, மூச்சைப் பிடித்துக் கொண்டு தூக்குகிறோம். வேகவேகமாக ஓட முயலும்போது, மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம். ஆழ்ந்த கவலையில் ஈடுபடும்போது, பெருமூச்சு விடுகிறோம். அப்போதெல்லாம் நாம் பிராண சக்தியைத்தான் பயன்படுத்துகிறோம்.
நாம் புத்தகத்தில் படிக்கும் வாசகங்கள் நம்முடைய மனதில் படிவதில்லை. ஆனால் அதையே அருளாளர்கள் உரையாக எடுத்து சொல்லும்போது அது மனத்தில் படிகிறது. பல சமயங்களில் மனதை மாற்றிக் கனியவும் வைக்கிறது. இதற்கு அவர்களிடம் சேர்ந்துள்ள பிராணசக்தியே காரணம். ஆயிரக்கணக்கான மக்களைக் கவரும் சக்தியும், அவர்களைத் தனது போதனையின்படி செயற்பட வைக்கும் திறனும், மகான்களுக்கு இருப்பதற்கு இது முக்கியமான காரணம்.]
பிராணாயாமப் பயிற்சியின் மூலம், நம் உடலில் பிராணசக்தி இயங்குவதையும் நாம் நுட்பமாக உணரமுடியும். உடலில் ஒரு பகுதியில் அது அதிகமாகவும், இன்னொரு பகுதியில் குறைவாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். குறைவாக உள்ள பகுதிக்கு, அதிகமாக உள்ள பகுதியிலிருந்து திருப்பிவிடும் ஆற்றலையும் நாம் பெறமுடியும். இப்படி பிராணசக்தி சமச்சீராகப் பரவும்போது, உடம்பின் எல்லாப் பகுதிகளும் வலுப்பெறுகின்றன; சிந்தனையும் கூர்மையாக ஆகிறது.
பிராணசக்தி இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கிறது. அதன் பலனை எல்லோருமே பெறமுடியும். ஆனால் அதை அடையும் வல்லமை பிராணாயாமத்தை முறைப்படி செய்து மனவலிமை பெறும் யோகியருக்கே உரியதாக ஆகிறது. அவர்களிடம் ஒரு சமூகத்தையே வழிப்படுத்தக்கூடிய அளவுக்கு மனோபலம் சேருகிறது. தன்னலமின்றி அவர்கள் அதைப் பயன்படுத்தும்போது, அதனால் உடல்நலம் பெறுவோர் பலர், மனம் திருந்துவோர் பலர், பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர் பலர். நாம் ஓர் ஆயுட்காலத்தில் செய்யமுடியாத காரியத்தை சில நொடிகளில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது.
முதலில் உடல்வலிமையைப் பெறுவதற்காகவும், ரத்தஓட்டம் - உடல் நரம்புகளின் இயக்கம் ஆகியவற்றைச் சீராக்குவதற்காகவும்தான் பிராணாயாமப் பயிற்சியைத் தொடங்குகிறோம். ஆனால் போகப்போக அதுவே நமது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தவும், சிந்தனையை வளப்படுத்தவும், ஆன்மிக முன்னேற்றத்தை நாடவும் வழி செய்து கொடுக்கிறது. தன்னை உணருவதற்கும், தன்னை மறந்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கவும் அது பயன்படுகிறது. உடல்வலிமைக்காகச் செய்யும்போது ஹதயோகமாக இருந்தது. பின் மனவலிமைக்காகப் பயன்படும்போது ராஜயோகமாக மாறிவிடுகிறது. இவை இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவைதாம்.
பெரும்பாலான மக்கள் பிராணாயாமத்தை, ஹதயோகம் குறிப்பிடும் அளவுக்கு உடற்பயிற்சியாகவே செய்து முடித்து விடுகிறார்கள். அப்போது அது உடற்பிணிகள் தீருவதற்கு மட்டும் வழிகாட்டுகிறது. ஆனால் அவர்களில் சிலர் பிராணாயாமத்தை ராஜயோக அடிப்படையிலும் செய்கிறார்கள். அப்போது அது மனதின் வலிமையையும் கூர்மையையும் உணர்த்துகிறது. அந்த நிலையில் பக்திமார்க்கத்தில் ஈடுபடவும், ஆன்மிக முன்னேற்றம் பெறவும் அவர்களால் முடிகிறது.
இப்படி இருவிதமாகவும் பலன் தரும் பிராணாயாமத்தை முறைப்படி கற்க வேண்டும். தன்னலமில்லாத ஞானாசிரியரிடம் அதைக் கற்கும்போது அது நமக்கு மேலும் மேன்மை பெற வழிகாட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக