மிகவும் இக்கட்டான சூழலில், இனியும் ஈடுகொடுக்க முடியாது எனும் நிலை வரும்போது வெளிப்படும் பல அறிகுறிகள்தான் மன அழுத்தம். பெற்றோர்களிடம் ஏற்படும் பிரச்சினைகள், குழப்பமான சூழ்நிலைகள், வாக்குவாதங்கள், சின்னச் சின்னத் தோல்விகள், பள்ளிகளில் வெளியிடங்களில் பிற குழந்தைகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகுதல், பெற்றோர்களிடமிருந்து தேவையான அன்பு கிடைக்காதது, தாங்கள் ஆசைப்படும் பொருட்கள் கிடைக்காதது, செல்லப்பிராணிகளின் இறப்பு, பெரிதாக அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள், இன்றைய கல்வி நிலை என்று பல சம்பவங்கள் குழந்தைகள் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் தாங்கள் அடைய முடியாத லட்சியங்களைக் குழந்தைகள் மூலம் நிறைவேற்ற அவர்களை ஸ்பெஷல் கிளாஸ், பெயிண்டிங், ஆங்கில வகுப்பு, பாட்டு-நடன வகுப்புகள் என்று அவர்களை வற்புறுத்துவது மற்றொரு காரணம். ஒவ்வொருவரின் விருப்பமும், கிரகித்துக்கொள்ளும் சக்தியும் மிகவும் முக்கியமானவை.
தோல்வியும் வெற்றியும் சமம்
பள்ளி-கல்லூரிக்குச் செல்லப் பயப்படுதல், படிப்பில் கவனம் குறைதல், அதிகக் கோபம் கொள்ளுதல், எரிச்சல் அடைதல், கீழ்ப்படியாமை, பிடிவாதம் போன்ற சிக்கல்கள் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் காணப்படும். குறிப்பாகப் பதின் வயதை எட்டும்போது நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். தோல்வியும் வெற்றியும் சமம் என்ற மனோநிலையைக் குழந்தைகளிடம் ஏற்படு்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. இல்லையென்றால் எதிர்காலத்தில் தோல்விகளைச் சந்திக்கும்போது உடைந்துபோக வாய்ப்பு உண்டு.
சோம்பல், அவநம்பிக்கை, அறியாமை, படிப்பில் ஆர்வமின்மை, பயம், அலட்சியம், கவனமின்மை, முயற்சியின்மை, தோல்வியைக் கண்டு துவண்டுவிடுதல், தேவையே இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் (டிவி, மொபைல் ஆர்வம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவை), வீண் அரட்டை, வீண் விவாதம், அறிவார்ந்த மற்றவர்களிடம் பொறாமை, தீய பழக்கங்கள், குறுக்கு வழிகளை யோசித்தல் என்று பலவற்றை கைவிட இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும். சிறிய தவறுகளைச் சரிசெய்யாமல் விட்டுவிடுவது பெரிய இழப்புகளை ஏற்படுத்தும்.
மிதமான உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். கவனம் குவியும். பள்ளியில் நடத்தும் பாடங்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். தேவையான குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். புரிந்ததை மனப்பாடம் செய்து, முழுமையாக எழுதிப் பார்த்துவிட வேண்டும். புரியாததை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுப் புரிந்துகொள்ள வேண்டும். பாடங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும். இச்செயல் சந்தேகங்கள் தீரவும், புதிய பார்வைகள், சிந்தனைகள் கிடைக்கவும் உதவும். புத்தகம் முழுவதையும் படிப்பது நன்மை பயக்கும். கடைகளில் கிடைக்கும் நோட்ஸ் தேர்ச்சி பெற மட்டுமே உதவும். அதிக மதிப்பெண்கள் பெற உதவாது.
நீண்ட நேரம் தொடர்ந்து படிக்காது, சிறிது இடைவெளி விட்டுப் படிக்க வேண்டும். இடைவெளி நேரத்தில் கண்களை மூடித் தியானத்தில் இருத்தல், நீர் அருந்துவது, பசுமையான இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தல், மெல்லிய இசை கேட்டல், உடல் அல்லது மூளைக்கு வேலை தரும் பயனுள்ள விளையாட்டுகளைச் சிறிது நேரம் விளையாடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.
தேர்வு பயத்தைப் போக்க
முதலில் சாதாரணமாகப் படித்தல், படித்ததைக் கண்ணை மூடி யோசித்தல், யோசித்து நினைவுக்கு வருவதை ஒரு நோட்டில் எழுதுதல், எழுதியதை முதலில் படித்த பாடப் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தல், தவறுகளைத் திருத்துதல், திருத்தியதை மீண்டும் படித்தல் இவ்வாறு செய்தால் நம் தவறு நமக்கே புரியும். மீண்டும் மீண்டும் பழகும்போது எதுவும் மறக்காது. தேர்வு என்றால் பயமும் இருக்காது.
தேர்வு என்று வந்துவிட்டால், தேர்வுக்கு முதல் நாளே தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் எதையாவது தேடுவதும், பாடங்களைப் படிப்பதும் வீண் மன உளைச்சலை ஏற்படுத்தும். எதிலும் பொறுமையாகவும், பதற்றப்படாமலும் இருப்பது அவசியம். போட்டி உலகம் என்று நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்தால் வெற்றி நிச்சயம். நெருக்கடிகளை வென்று சந்தோஷமாக வாழவும், சாதனைகள் செய்யவும் மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆற்றல், திறமை, முன்னேறக்கூடிய வாய்ப்புகள், குடும்ப, பொருளாதார, சமூகச் சூழலுக்கு ஏற்ற முடிவுகள் என்று ஆராய்ந்து விடைகொடுப்போம் மன அழுத்தத்துக்கு..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக