இந்தக் காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே மன அழுத்தம் ஏற்படும்போது வேலைக்குச் செல்கிறவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. காவல் துறையினர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்கள் என்று பிறரிடம் அதிக நேரம் பேச வேண்டிய பணியில் இருக்கிறவர்களுக்கு ஒப்பீட்டளவில் மன அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 129 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த முடிவு தெரியவந்திருக்கிறது.
தொழில்நுட்ப பிரிவு தவிர தொழிற்சாலைகளில் பணிபுரிகிறவர்களும் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறைவான நேரத்தில் அதிக வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் முக்கியக் காரணமாக இருக்கிறது. டார்கெட் என்று அழைக்கப்படும் வேலைக் கட்டாயத்தால் பலரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நேரக் கெடுபிடி இல்லாத இடங்களில் பலர் அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டியதாக இருக்கிறது. காலை எட்டு முதல் எட்டரை மணிக்குள் தொடங்கும் வேலை சமயங்களில் நள்ளிரவைத் தாண்டியும் நீள்கிறபோது மன அழுத்தம் அதிகரிப்பதோடு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
குழுப் பண்பு அவசியம்
தனியாகப் பணிபுரியும்போது ஒருவகை சிக்கல் என்றால் குழுவாக இணைந்து செயல்படும்போது வேறுவகை சிக்கல்கள் முளைக்கின்றன. அது தகவல் தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் சரி, கட்டுமானப் பணியாக இருந்தாலும் சரி, குழுவாக இணைந்து செயல்படும்போது சிலரது மந்தமான செயல்பாடுகளால் ஒட்டுமொத்தக் குழுவின் செயல்பாடும் பின்னடைவைச் சந்திக்க நேரிடுகிறது. நிர்வாகத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியாதபோதும், குழுவின் தகுதிக்கு மீறிய வேலையை ஏற்றுக்கொள்கிற கட்டாயத்தின்போதும் குழுவில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது.
குழு உறுப்பினர்கள் அல்லது சக பணியாளர்களுடன் இணக்கமான சூழலும் புரிந்துணர்வும் இல்லாதபோதும் வேலையில் பின்னடைவு ஏற்படுகிறது.
ஊதியத்துக்கும் பங்குண்டு
மன அழுத்தத்தை ஏற்படுத்துவதில் ஊதியத்துக்கும் முக்கியப் பங்குண்டு. செய்கிற வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது, ஊக்கத்தொகை, போனஸ், போதுமான ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்காத பட்சத்திலும் பணியாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
சம்பளக் குறைவைக் கருத்தில் கொண்டு அனைவராலும் வேலையை விட்டு விலக முடியாது. தகுந்த வேலை கிடைக்கிறவரை, தற்போதைய வேலையில் நீடித்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மன உளைச்சலுடனேயே பணியைத் தொடர்வது, பணியாளர்களைப் பாதிப்பதுடன் பணியிலும் தேக்கத்தை உருவாக்கக்கூடும்.
இது ஒரு வகை என்றால் வீடு, அலுவலகம் இரண்டையும் முறைப்படி கையாளத் தெரியாதவர்களும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவதாலும் மறுப்பதாலும் வேலைக்குப் போகிற பெண்கள், ஆண்களைவிட அதிக உடலுழைப்பைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
தவிர குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, அவர்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்துவது போன்றவையும் பெண்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கும்பட்சத்தில் உடலாலும் மனதாலும் பெண்கள் சோர்ந்துபோகின்றனர்.
திட்டமிட்டால் ஜெயிக்கலாம்
நேரத்தையும் பணிகளையும் திட்டமிடுவதன் மூலம் தேவையில்லாத மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம். எளிதாகச் செய்யக் கூடிய வேலைகளுக்குக்கூட சிலர் மணிக் கணக்கில் நேரத்தைச் செலவிடுவார்கள்.
ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை மணி நேரம் என அட்டவணை போட்டுச் செயல்பட்டால் கால விரயத்தைக் கட்டுப்படுத்தலாம். குழுவாகச் செயல்படும்போது ஏற்படுகிற சிக்கல்களைத் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்களிடம் எடுத்துச் சொல்லி, சிக்கலுக்குத் தீர்வு காணலாம். கூடுமானவரை அலுவலக நேரத்துக்குள்ளேயே பணிகளை முடித்துவிட வேண்டும்.
வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அலுவலகத்தை நினைத்துக்கொண்டிருப்பது, அலுவலகப் பிரச்சினைகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருப்பது நல்லதல்ல. இதனால் வீட்டின் அமைதியும் பாதிக்கப்படும்.
ஊதியம் சார்ந்த பிரச்சினை என்றால் தகுந்த வேலை கிடைக்கும்வரை பொறுமை காப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர வேண்டும். வேலையில் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டு அதற்கான ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். அப்போதும் உழைப்பு மதிக்கப்படவில்லை என்றால் இருக்கிற வேலையைத் தக்கவைத்துக்கொண்டே வேறு வேலை தேடலாம். எதையும் பொறுமையோடும் தெளிவோடும் அணுகினால் மன அழுத்தம், மன உளைச்சல் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்ன செய்தும் எப்போதும் மனம் அமைதியில்லாமல் இருந்தால் தகுந்த ஆலோசகர்களை அணுகுவதில் தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக