*குறைந்த இடம் போதும்.
*மொட்டைமாடியிலேயே வளர்க்கலாம்.
*கிளிமூக்கு விசிறிவால் சேவல்களுக்கு நல்ல கிராக்கி
*அதிகபட்ச விலை இரண்டு லட்ச ரூபாய்
வீட்டுப் பிராணிகளில் எப்போதும் கோழிகளுக்கு முக்கிய இடம் உண்டு. குஞ்சு உற்பத்தி, முட்டை உற்பத்திக்காக கோழிகள் வளர்ப்பதோடு, ‘சேவற்கட்டு’ எனப்படும் சேவல் சண்டைக்காக கோழிகள் வளர்க்கும் பழக்கமும் உண்டு. கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டு போல வெகு விமரிசையான நிகழ்ச்சி சேவற்கட்டு. கௌரவத்துக்காக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பது போல... சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. தற்போது சட்டங்களின் கெடுபிடியால்... சேவல் சண்டைகள் வெகுவாகக் குறைந்து விட்டாலும், சேவல் வளர்ப்பு குறையவில்லை. இப்படி அழகுக்காகவும், கௌரவத்துக்காகவும் வளர்க்கப்படும் சேவல்களில் முக்கியமானது, கிளிமூக்கு விசிறிவால் சேவல். கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ள இந்த ரகம், தமிழ்நாட்டின் பாரம்பர்ய அடையாளம்.
மயிலைப் போல நீளமான வாலுடன் இரண்டு அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் உள்ள இந்த ரக சேவல்கள், பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்கின்றன. இந்த ரக சேவல்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. பல; ஆண்டுகளாக இந்த ரக கோழிகளை வளர்த்து வருகிறார், திண்டுக்கல் நகர், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்.
கோழி வளர்ப்பு ரொம்ப சுலபம்!
ஒரு காலை வேளையில் சேவல்களுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த அபுபக்கர் சித்திக்கைச் சந்தித்தோம். “ஆடு, மாடு, முயல்...னு மத்த எந்த பிராணி வளர்ப்பை விடவும் கோழி வளர்க்குறது ரொம்ப சுலபம். பராமரிப்பு செலவும், ரொம்பக் குறைச்சல். எனக்குச் சின்ன வயசுல இருந்தே, கோழி வளர்ப்புல ஆர்வம் அதிகம். குறிப்பா, கிளிமூக்கு விசிறிவால் சேவல் வளர்ப்புல ஆர்வம் அதிகமா இருந்ததால, அதுல இறங்கிட்டேன்.
இடையில் வேலைக்காக சவுதி போனதால, சேவல் வளர்ப்பைக் கைவிட வேண்டியதாகிடுச்சு. திருமணத்துக்காக ஊர் திரும்பினேன். அதுக்கப்பறம் இங்கேயே சிப்ஸ் தயாரிக்கிற தொழில்ல இறங்கிட்டேன். தொழில் ஓரளவு நல்லா போக ஆரம்பிக்கவும், மீண்டும் சேவல் வளர்ப்புல இறங்கிட்டேன். வீட்டு காம்பவுண்ட் ஓரமா பஞ்சாரம் வெச்சு ரெண்டு கோழி, ஒரு சேவல்னு வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச கோழி சேவல்னு ஏகப்பட்ட உருப்படிகளை இதுவரைக்கும் விற்பனை செஞ்சிருக்கேன். கிளிமூக்கு விசிறிவால் சேவல்களுக்கு சந்தையில நல்ல கிராக்கி இருக்கு. நிறைய பேர் இந்த ரக குஞ்சு, கோழி, சேவல்களை கேட்டு வர்றாங்க. அதனால, குஞ்சு உற்பத்தி செஞ்சு, வளர்த்து விற்பனை செய்றதையே தொழிலாக்கிட்டேன். இப்ப, சிப்ஸ் தொழிலை விட, கோழிகள் மூலமா அதிக வருமானம் கிடைக்குது” என்று முன்னுரை கொடுத்த அபுபக்கர் சித்திக், கிளிமூக்கு விசிறிவால் சேவல் குறித்துச் சொன்னார்.
முன்பு சண்டைக்கு... இப்போ அழகுக்கு!
முன்பு சண்டைக்கு... இப்போ அழகுக்கு!
“கோழிகள்ல கிளிமூக்குவிசிறிவால் சேவல்களுக்கு தனிச்சிறப்பு இருக்கு. இது, தமிழ்நாட்டின் பிரத்யேக ரகம். இதோட சிறப்புகளை கேள்விப்பட்டு... கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள்ல இருந்து கூட வந்து அதிகமா வாங்கிட்டுப் போறாங்க. இந்த ரகத்துல கோழிகளை விட, சேவல்களுக்குத்தான் கிராக்கி அதிகம். முன்னாடி இதை சண்டைக்குதான் பயன்படுத்துனாங்க. இப்போ, பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கிறாங்க. இதை வளர்க்கிறதை பெருமையாவும் நினைக்கிறாங்க.
கம்பீரமான தோற்றம்!
இதோட வால்தான் இதனோட சிறப்பு. மயிலுக்கு இருக்கிறது மாதிரியே நீளமா, அழகா கலர் கலரா இருக்கும். நல்லா வளர்த்தா ஒரு சேவல் 10 கிலோவுக்கு மேல எடை வரும். எடைக்கு ஏத்த மாதிரி உயரமும் இருக்கறதுனால பார்க்க கம்பீரமா இருக்கும். இதோட மூக்கு, தலை, அலகு, நிறம், வால் நீளம், தாடை, முதுகு அமைப்பு, கால்னு பல அம்சங்களை வெச்சு, விலை நிர்ணயிப்பாங்க. நல்லா அம்சமா இருக்குற சேவல்கள் ரெண்டு லட்ச ரூபாய் வரைக்கும் கூட விலை போகும். அதனால, இந்த ரகத்தை மட்டும் உற்பத்தி செய்றதை பலர் தொழிலாவே வெச்சிருக்காங்க” என்ற அபுபக்கர் சித்திக் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
மாதம் 20 ஆயிரம் லாபம்!
“இப்ப என்கிட்ட மூணு சேவல், எட்டு கோழிகள் இருக்கு. இது மூலமா மாசம் சராசரியா 10 குஞ்சுகள் கிடைச்சுகிட்டு இருக்கு. அதை வளர்த்து எடுக்கும்போது, எட்டு குஞ்சுகள் தேறும். ரெண்டு மாச குஞ்சுகளாத்தான் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். அப்படியே வாங்கிட்டுப் போறவங்களுக்கு ஒரு ஜோடி குஞ்சு 5 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கிறேன். தரம் பிரிச்சு கேக்குறவங்களுக்கு ஜோடி 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கிறேன். குஞ்சு விற்பனை மூலமா சராசரியா மாசம் 25 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுட்டு இருக்கு. அதுல 5 ஆயிரம் ரூபாய் செலவு போக, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது” என்றார்.
தொடர்புக்கு,
அபுபக்கர் சித்திக்,
செல்போன்: 86087-71359.
அபுபக்கர் சித்திக்,
செல்போன்: 86087-71359.
மொட்டை மாடியிலும் வளர்க்கலாம்!
“ஒரு சேவல், நாலு கோழிகள் இருந்தால் போதும். அது மூலமா முட்டை எடுத்து குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செய்றது மூலமா, மாசம் குறைஞ்சபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதுக்கு அதிகமான இட வசதி கூட தேவையில்லை. வீட்டு மொட்டைமாடியில் கூட வளர்க்க முடியும். எல்லா கோழிகளும் ஒரே நேரத்துல முட்டை வெக்காது. ஒண்ணு முட்டை வெக்கும்போது ஒண்ணு அடையில இருக்கும். இன்னொன்னு குஞ்சுகளோட இருக்கும். அதனால, சுழற்சி முறையில மாசா மாசம் நமக்கு குஞ்சுகள் கிடைச்சுகிட்டே இருக்கும். கோழிக்குப் பொதுவா, முட்டையிடும் காலம் 15 நாள்.
அடைகாக்கும் காலம் 22 நாள். குஞ்சுகளோட ரெண்டு மாசம் இருக்கும். ஆக ஒரு சுத்துக்கு மூணு மாசம் ஆகிடும். நல்லா பராமரிச்சா ஒரு சுத்துல பத்து குஞ்சுகள் வரை எடுத்துடலாம். அதுல எப்படியும் எட்டு குஞ்சுகள் தேறிடும். சராசரியா ஆறு குஞ்சுகள் கண்டிப்பா கிடைச்சுடும்.
குஞ்சுகளை ரெண்டு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம். நிறம், அமைப்பை வெச்சு விலை வைப்பாங்க. எவ்வளவு மோசமா இருந்தாலும், ஜோடி நாலாயிரம் ரூபாய்க்குக் குறையாது.
சேவல் கண்காட்சி!
“கிளிமூக்குவிசிறிவால் சேவல் குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு வர்றதுக்காக, ‘திண்டுக்கல் சேவல் வளர்ப்போர் அமைப்பு’ல இருந்து... ரெண்டு வருஷமா திண்டுக்கல்ல விசிறிவால் சேவல் கண்காட்சி நடத்திட்டு வர்றோம். தமிழ்நாடு மட்டுமில்லாம, மத்த மாநிலங்கள்ல இருந்தும் பலரும் இதுல கலந்துக்கிறாங்க. வெளிநாட்டுல இருந்து கூட பார்வையாளர்கள் வர்றாங்க. போன தடவை என்னோட சேவலை சிறந்த சேவலா தேர்ந்தெடுத்து பரிசும், பதக்கமும் கொடுத்தாங்க. அந்தச் சேவலை இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன்” என்கிறார், சித்திக்.
பராமரிப்பு மற்றும் தீவனம்!
“வெளிய மேய விட வாய்ப்பு இருப்பவர்கள், மேய விட்டு வளர்க்கலாம். அதுக்கு வசதி இல்லாதவங்க, கூண்டுல அடைச்சு, கம்பு, சோளம் மாதிரியான தானியங்களைக் கொடுக்கலாம். சேவலை பெரிசா வளர்த்து விற்பனை செய்ய நினைக்கிறவங்க, கட்டி வெச்சு தீவனம் கொடுத்து வளர்க்கணும். அந்த மாதிரி சேவல்களுக்கு கடலைப்பருப்பு, பாதாம் மாதிரியான சத்தான பொருட்களை வாங்கிக் கொடுக்கணும். தினமும் கழிவுகளை கூட்டி சுத்தப்படுத்திடணும். வெள்ளைக்கழிசல் நோய்க்கு கண்டிப்பா தடுப்பூசி போட்டுடணும். மத்தபடி பெருசா எந்தப் பராமரிப்பும் தேவையில்லை” என்கிறார், அபுபக்கர் சித்திக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக