திங்கள், 25 ஜூலை, 2016

புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...

தள்ளாத வயதிலும், தளராத கால்நடை வளர்ப்பு !மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே... ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள்! இதை உணர்ந்தே... 'கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன்' என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.இது, நூற்றுக்கு நூறு நிஜமே என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி!சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல்... ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.''எனக்கு 71 வயசாச்சு. பூர்வீகம் பாலக்கரை கிராமம். தோட்ட வேலை செஞ்சுதான் பிழைப்பை ஓட்டுறோம். எனக்கு புறா வளர்ப்புல ரொம்ப இஷ்டம். நாப்பத்தஞ்சு வருஷமா புறா வளத்துக்கிட்டிருக்கோம். எந்தத் தோட்டத்துல வேலைக்காக தங்கியிருந்தாலும்... புறாவை மட்டும் விடுறதில்லை. கூடவே கூட்டிட்டுப் போயிடுவோம்.நாலு வருஷமாத்தான் இந்த தென்னந்தோப்புல வேலை செய்றோம். தண்ணி பாய்ச்சுறது, கீழ விழுற தேங்காய்களை எடுத்து குவிக்கிறதுனு வேலைகள முடிச்ச பிறகு, மீதியிருக்கற நேரத்துல புறாவைத்தான் கவனிப்போம். கூடவே ஆடு, கோழிகளையும் வளர்க்க ஆரம்பிச்சோம். பிள்ளைங்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாச்சு. இப்பவும், பிள்ளைங்க தயவில்லாம நாங்களே ஜீவனம் பண்ணிக்கிறதுக்கு புறா, ஆடு, கோழிகதான் உதவிக்கிட்டிருக்கு'' என்று வேலுச்சாமி, இடைவெளிவிட...''இப்போ, எங்ககிட்ட 25 ஜோடி புறா, 15 பெட்டை ஆடு, 3 கிடா ஆடு, 6 நாட்டுக்கோழி, 3 சேவல் இருக்கு. வயசான காலத்துல இந்த அளவுக்கு மட்டும்தான் எங்களால பராமரிக்க முடியும். அதனால எண்ணிக்கையைக் கூட்டுறதில்லை. அப்பப்போ வித்து பணமாக்கிக்குவோம். விக்கறதுக்கும் அலைய வேண்டியதில்லை. இங்கேயே வந்து வாங்கிக்கிறாங்க. சமையல் வேலையை முடிச்சுட்டு... பக்கத்துல இருக்குற காலி நிலத்துக்கு ஆடுகளை ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வந்துடுவேன்'' என்று தன் பங்கை சொன்னார் செல்லம்மாள்.புறாக்களின் பங்கு... 25 ஆயிரம்!தொடர்ந்த வேலுச்சாமி, கால்நடைகளை வளர்த்து வரும் விதம் மற்றும் வருமானம் பற்றி, பேச ஆரம்பித்தார்.'கருப்பு, வெள்ளை, சிவப்பு, ரேவல்ஸ், ரோஸ், ரோமர், சங்கிலினு நிறைய வகை புறாக்கள் இருக்குது. அதை வளர்க்கறது பெரிய வேலையே இல்லை. காலையில கூண்டைத் திறந்து விட்டா... பறந்து போய் தீவனம் எடுத்துக்கும். சாயங்காலம் வந்து அடையும். அந்த நேரத்துல ஏதாவது தானியத்தை விசிறி விட்டா போதும். ஒரு ஜோடிக்கு தினமும் 150 கிராம் தானியம் தேவைப்படும். ராகி, சோளம்னு எதையாவது கொடுப்போம். இதுங்களால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.45 நாளுக்கு ஒரு முறை புறா அடைக்கு உக்காரும். ஒரு தடவை அடை உக்கார்ந்தா 2 முட்டை. வருஷத்துக்கு 16 முட்டை. அதாவது ஒரு ஜோடி மூலமா வருஷத்துக்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். 25 ஜோடி மூலமா, வருஷத்துக்கு 400 குஞ்சு கிடைக்கும். அதுகளை ஒரு மாசம் வரைக்கும் வளர்த்து வித்துடுவோம். பெரும்பாலும் சாப்பிடத்தான் வாங்கிட்டுப் போவாங்க. வளர்ப்புக்கும் கொஞ்ச பேரு வாங்கிட்டுப் போவாங்க. ஒரு மாச வயசுல ஒரு புறா குஞ்சை 100 ரூபாய்க்கு விக்குறோம். தன்னால செத்துப்போனது... சமைக்கறதுக்காக நாங்க எடுத்துகிட்டது இதையெல்லாம் கழிச்சுட்டா... வருஷத்துக்கு 250 குஞ்சுகள விக்க முடியும். இதன் மூலமா 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.கோழிகளின் கொடை... 27 ஆயிரம்!ஒரு கோழியிலருந்து வருஷத்துக்கு 40 முட்டைனு ஆறு கோழியிலருந்து மொத்தம் 240 முட்டை கிடைக்குது. அதுல நாங்க சாப்பிட்டது போக, மிச்சத்தை அடைக்கு வெச்சுடுவோம். சேதாரமெல்லாம் போக, வருஷத்துக்கு 180 குஞ்சு கிடைக்கும். 2 மாசம் வரை வளர்த்து, ஒரு குஞ்சு 150 ரூபாய்னு விக்கிறோம். நல்ல சேவ குஞ்சு கிடைச்சு, அதை ரெண்டு வருஷம் வளர்த்து வித்தோம்னா... ஒரு சேவல் 4 ஆயிரம் ரூபாய்க்குக் கூடப் போகும். எப்படிப் பாத்தாலும் கோழி மூலமா வருஷத்துக்கு 27 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும். தீவனச்செலவும் பெருசா கிடையாது. தோட்டத்துலேயே மேய்ஞ்சு புழு, பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டுக்குங்க. சாயங்காலம் அடையுறப்போ மட்டும் கொஞ்சம் தானியம் போடுவோம்.ஆடுகளின் அன்பளிப்பு... 90 ஆயிரம்!அதே மாதிரிதான் நாட்டு ஆடுகளும். அதுகளுக்குத் தனியா தீவனச் செலவே கிடையாது. மேய்ச்சுட்டு வர்றப்பவே பக்கத்துல இருக்குற செடி, கொடிகள்ல இருந்து தழை ஒடிச்சுட்டு வந்து போட்டுடுவோம். 15 பெட்டை மூலமா, வருஷத்துக்கு 45 குட்டி கிடைக்கும். குட்டிகளை ரெண்டு மாசம் வளர்த்து, ஒரு குட்டி 2 ஆயிரம் ரூபாய்னு வித்துடுவோம். ஆடுக மூலமா வருஷத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆடு, கோழி, புறானு எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். தீவனச் செலவெல்லாம் போக... எப்படியும் வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்ற வேலுச்சாமி,''ஆடு, புறா, கோழி இதையெல்லாம் தனி வேலையா எடுத்துச் செய்யாம, தோட்டத்து வேலை போக கிடைக்கிற இடைவெளியிலதான் செய்றோம். அதனால, இந்த வருமானமே எங்களுக்கு பெரிய வருமானம்தான்- அதுவும் இந்த 71 வயசுல!'' என்று மன நிறைவோடு சொன்னார்!ஜி.பழனிச்சாமிபடங்கள்: தி. விஜய்Source: pasumaivikatan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக