ஞாயிறு, 5 ஜூன், 2016

நாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்!

நாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்!

*மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு

*விற்பனைக்குப் பிரச்னையில்லை

*இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம்

*முட்டை மூலம் தனி வருமானம்

*ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை

புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க... நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு  போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்...  குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், நாட்டுக்கோழி மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய்ஸா மெர்ஸி.  

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் ஐந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் வலதுபுறம் பிரிகிறது, பித்தளைப்பட்டி பிரிவுச் சாலை. இச்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அனுமந்தராயன் கோட்டை. அதற்கு, அடுத்துள்ள மேலப்பட்டி எனும் கிராமத்தில்தான் கோழிகளை வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.

செவிலியர் பணியிலிருந்து கோழி வளர்ப்புக்கு!

‘பா பா’, பக் பக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே கோழிகளுக்கு தீவனத்தை இட்டுக் கொண்டிருந்த ஜாய்ஸா மெர்ஸியைச் சந்தித்தோம்.

 “இது என்னோட சொந்த ஊர். நான் கல்யாணம் பண்ணிப் போனது, கூலம்பட்டிங்கிற கிராமத்துக்கு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். என் கணவர், சவுதி அரேபியாவுல வேலை செய்துகிட்டு இருக்கார். நான் நர்ஸிங் முடிச்சுட்டு பிரைவேட் நர்ஸிங் ஹோம்ல வேலை செய்துகிட்டு இருந்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள். நானும் வேலைக்குப் போயிட்டு, அவரும் வெளிநாட்டுல இருக்கிறதால குழந்தைகளை சரியா பராமரிக்க முடியலை. அதனால, ‘நைட் டூட்டி இல்லாம எட்டு மணி நேர வேலை மட்டும் கொடுங்க’னு நர்சிங் ஹோம்ல கேட்டேன். நான் வேலை செய்த இடத்துல அதுக்கு ஒப்புக்கலை. அந்த மாதிரி எங்கயும் எனக்கு வேலை கிடைக்காததால வேலைக்கு முழுக்கு போட்டுட்டு... கணவரோட வருமானம் மட்டுமே போதும்னு அப்பா வீட்டுக்கே குழந்தைகளோட வந்துட்டேன். 

2 கோழிகளில் ஆரம்பம்!


இங்க அப்போ 3 ஏக்கர் நிலத்துல ரோஜா பூ விவசாயம் நடந்துகிட்டு இருந்துச்சு. அப்போதான், (2013-ம் வருஷம்) கோழி வளர்க்கலாம்னு ஆசைப்பட்டு உள்ளூர்லயே ஒரு சேவல், ஒரு கோழினு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு நான் போட்ட முதலீடு 550 ரூபாய். எனக்கு கோழி வளர்ப்பு குறித்து எதுவுமே தெரியாது. அப்படியே மேய்ச்சல் முறையில விட்டு வளர்த்தேன். அந்த ரெண்டு மூலமா ஒரு வருஷத்துல ஏகப்பட்ட கோழிகள் பெருகிடுச்சு. தோட்டத்துக்கே நிறைய பேர் வந்து முட்டைகளையும் கோழிகளையும் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்பவே இதுதான் நமக்கான தொழில்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன்” என்று கோழி வளர்ப்புக்கு வந்த முன் கதையைச் சொன்ன ஜாய்ஸா மெர்ஸி தொடர்ந்தார். 

இழப்பு சொல்லிக்கொடுத்த பாடம்!

“பண்ணையில கோழிகள் பெருகப்பெருக ரொம்ப சந்தோஷமா இருந்தது. கோழிகள் பெருகினதால கோழிகள் வெளிய போயிடாம இருக்க, 3 ஏக்கர் நிலத்துக்கும் ‘டைமண்ட் கம்பிவேலி’ போட்டுட்டேன். அந்த சமயத்துல தண்ணீர் பற்றாக்குறையால ரோஸ் செடிகளைக் காப்பாத்த முடியலை. அதனால அவ்வளவையும் அழிச்சுட்டு கோழிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சாச்சு. உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பும் இருந்ததால அப்பப்போ சேவல், பெட்டைகளை மட்டும் விற்பனை செய்துட்டு இருந்தேன். அப்போதான், திடீர்னு நோய் தாக்கி அடுத்தடுத்து 113 கோழிகள் இறந்துடுச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.
அப்பறம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டப்போ, ‘கோழிகளுக்கு தடுப்பூசி போடணும்’னு சொன்னாங்க. உடனே மீதி இருந்த கோழிகளுக்கு தேவையான தடுப்பூசிகளைப் போட்டு காப்பாத்திட்டேன். அடுத்து, 2014-ம் வருஷம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துற நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த தொலைநிலைக் கல்வி படிப்புல சேர்ந்து படிச்சேன். அதுலதான் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் முறையா நாட்டுக் கோழி வளர்ப்புல ஈடுபட ஆரம்பிச்சேன். 

மருத்துவர்களின் ஆலோசனை!

அப்பறம், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக வர்றவங்களை இங்க அழைச்சிட்டு வந்து நேரடிப் பயிற்சியும் கொடுக்கிறாங்க. 

இப்போ, என்கிட்ட விற்பனை செய்ததெல்லாம் போக, 80 கோழிகள், 8 சேவல்கள் இருக்கு. 100 குஞ்சுகள் வளர்ந்துட்டு இருக்கு. இன்னிக்கு (18.05.16) பிறந்த 90 குஞ்சுகள் இருக்கு.  இது எல்லாமே ஆரம்பத்துல நான் வாங்கின கோழியில் இருந்து வந்தவைதான். சேவல்களை அடிக்கடி மாத்தணுங்கிறதால, ஆரம்பத்துல நான் வாங்கின சேவல் இப்போ இல்லை. ஆனா அந்த பெட்டைக் கோழியை மட்டும் இன்னமும் வெச்சிருக்கேன். சமீபத்துல பத்து சேவல்களை மட்டும் வாங்கியிருக்கேன். அதுல ஒரு கடக்நாத் சேவலும் இருக்கு. 

கோழிகளை அடைக்கு வெச்சுதான் முட்டைகள்ல இருந்து குஞ்சு பொரிச்சுட்டு இருந்தேன். அடைக்கு வெக்கிறப்போ கோழிகள் திரும்ப பருவத்துக்கு வர தாமதமாகும். அதனால, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்குபேட்டர் வாங்கிட்டேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி பராமரிப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

மேய்ச்சல் முறை வளர்ப்பு!


“கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு இருக்கேன். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கலை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் இருக்கு. வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சிருக்கேன்.  அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரைத் தடுப்புலயே முட்டைகளை வெச்சுடும். காலையில தானாவே மேய்ச்சலுக்குப் போயிக்கும். மேயவிட்டு வளர்க்கிறப்பதான் அதோட இயல்பான வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அதனால கறியும் சுவையா இருக்குது. அதனாலதான், பண்ணைக்கே தேடி வந்து கோழிகளை வாங்கறாங்க.


தீவனத்துக்குச் செலவில்லை!

மேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெச்சிடுவேன். காலையிலயும் சாயங்காலமும் மட்டும் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுப்பேன். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலவாகுது. காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போட்டுவேன். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கும். அதனால எனக்கு தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடுது.
தினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்திடுவேன். முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெச்சுடுவேன். புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெப்பேன். 

முட்டையிட்ட கோழிகள் அடைக்குப் படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சுடுவேன். அந்தக் கோழிகள்கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.   

மருத்துவம் அவசியம்!

குஞ்சுகளுக்கு, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி கொடுத்து புரூடர் ரூம்ல விடுவேன். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். பிறந்த 3, 4, 5-ம் நாட்கள்ல ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்ல கலந்து கொடுப்பேன். 7-ம் நாளும், 21-ம் நாளும் வெள்ளைக்கழிசலுக்கான தடுப்பு மருந்து கொடுத்துடுவேன். 35-ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போட்டுடுவேன். 55-ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சுடுவேன். 65-ம் நாள் திரும்பவும் வெள்ளைக்கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுத்துடுவேன். மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போட்டுடுவேன். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கிற ‘குஞ்சுகளுக்கான அடர்தீவன’த்தை வாங்கி கொடுப்பேன். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கிடுவேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

மாதம் 750 முட்டைகள்!

இப்போதைக்கு ஒரு நாளைக்கு சராசரியா 25 முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. மாசம் சராசரியா 750 முட்டைகள் கிடைக்குது. அதுல 500 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சுடுவேன். மீதி முட்டைகள்ல கொஞ்சத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுகிட்டு மீதியை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாசம் 200 முட்டைகள் விற்பனை மூலமா 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, இழப்புகள் போக  450 குஞ்சுகள் தேறி வரும். அதுல 300 குஞ்சுகளை ஒரு நாள் வயதுலேயே ஒரு குஞ்சு 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

மீதியிருக்குற குஞ்சுகளை வளர்ப்புக்கு விட்டுடுவேன். அதுல மாசம் 100 குஞ்சுகளை ஒரு மாத வயசுல ஒரு குஞ்சு 100 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

இது போக வாரம் 30 கிலோ அளவுக்கு உயிர் எடைக்கு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில மாசம் 120 கிலோ அளவு கோழிகளை கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்றது மூலமா 28 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும். 

அஞ்சு மாசமா உள்ளுர்ல நானே நாட்டுக்கோழிக் கறிக்கடை நடத்துறேன். வாராவாரம் கிட்டத்தட்ட 15 கிலோ அளவுக்கு கறி விற்பனை செய்றேன். அந்த வகையில மாசத்துக்கு 60 கிலோ கறியை ஒரு கிலோ 280 ரூபாய்னு விற்பனை செய்றதுல 16 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும். 

இந்த கணக்குல மாசத்துக்கு மொத்த வருமானம் 69 ஆயிரத்து 600 ரூபாய். அதுல எல்லா செலவும் போக, 45 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாச மாசம் லாபமா கிடைச்சுகிட்டிருக்கு” என்ற ஜாய்ஸா மெர்ஸி நிறைவாக,115 கோழிகள் மூலம்

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்!

“நான் பண்ணையில வேலைக்கு ஆட்களை வெச்சுக்கலை. எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்துக்குவேன். இப்போ கறிக்கடை, இன்குபேட்டர் பராமரிப்புனு வேலைகள் அதிகமாகிட்டதால கத்தார்ல வேலை செய்துட்டு இருந்த என்னோட தம்பி அந்தோணிராஜையும் இங்க வரவழைச்சுட்டேன். அவன்தான் இப்போ எனக்கு முழு உதவியா இருக்கான். நான் தாய்க்கோழிகளை அதிகளவுல பெருக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சாலும்... பண்ணைக்கு வர்றவங்க இருக்கிற கோழிகளை எல்லாம் வற்புறுத்தி விலைக்கு வாங்கிட்டுப் போயிடுறாங்க. இப்போ கொஞ்ச நாளாத்தான் விற்பனையை நிறுத்தி வெச்சிருக்கேன். 

என் அனுபவத்துல 100 கோழி, 15 சேவல் மட்டும் வெச்சு பண்ணை நடத்தினா வருஷம் 5 லட்ச ரூபாய் நிச்சய லாபம் எடுக்க முடியும். நான் அதையும் தாண்டி லாபம் எடுத்துட்டேன். முறைப்படி கோழிகளை வளர்த்தா கண்டிப்பா லாபம் நிச்சயம்.

அடுத்து புதுசா கொட்டகைகளை அமைச்சு 400 தாய்க்கோழிகளை நிப்பாட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். 400 தாய்க்கோழிகள் மூலமா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார், கண்களில் நம்பிக்கை பொங்க.   
தொடர்புக்கு,
ஜாய்ஸா மெர்ஸி,
செல்போன்: 97861-36570.

‘நாமே தயாரிக்கலாம், அடர்தீவனம்!’

“நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்த்தாலும்... அடர்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தா சீக்கிரம் நல்ல எடை வரும். அடர்தீவனங்களுக்காக வெளியில் அலைய வேண்டியதில்லை நாமே குறைஞ்ச செலவில் தயார் செய்துக்கலாம்” என்று சொல்லும் மருத்துவர் பீர்முகமது அடர்தீவனங்கள் தயாரிப்பு முறை குறித்து சொன்ன தகவல்கள் இதோ...


நல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு!

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.

“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்டையிடும் பருவத்திலிருக்கும் கோழி) வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை. கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.


கட்டுச் சேவலிலும் காசு!

கிராமப்பகுதிகளில் சேவல்கட்டுக்காக சேவல் வளர்க்கும் பழக்கம் இன்னமும் உண்டு. இதற்கான சேவல்கள், கொண்டை, நிறம் ஆகியவற்றைப் பொறுத்து இரண்டாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விலை போகும். 

பண்ணையில் வளர்க்கும் சேவல்களில் சிலவற்றை இதற்காக தயார் செய்து தனியாக வளர்த்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வகையில் 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை போகக்கூடிய சங்ககிரி ரக சேவல் ஒன்றையும் வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக