புதன், 25 நவம்பர், 2015

‘அக்ரி’ படிப்பு அள்ளித் தரும் வேலைவாய்ப்புகள்!

மீப வருடங்களாக பி.எஸ்ஸி., அக்ரிகல்சர் படிப்புக்கு பெருகி வரும் வரவேற்பு கண்கூடு. அந்த கோர்ஸ் பற்றிய வழிகாட்டல்கள் வழங்குகிறார், தேனி, வேளாண் தொழில்நுட்ப கல்லூரியின் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் எம்.மணிமாறன்...
‘‘வருடத்துக்கு இரண்டு தனியார் வேளாண் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்படுவதையும்,எல்லா வேளாண் கல்லூரிகளிலும் ஸீட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நிரம்பிவிடுவதையும் பார்க்கிறோம். அந்தளவுக்கு வளமான எதிர்காலத்துக்கான உத்தரவாதப் படிப்பாக விளங்கும் அக்ரி படிப்பின் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்.
தகுதி
அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் ‘அக்ரி குரூப்’ பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த குரூப் எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளில் 10% இடஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பதினொன்றாம் வகுப்பில் பயோ மேத்ஸ் குரூப் எடுத்துப் படித்த மாணவர்களும் பி.எஸ்ஸி., அக்ரிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட் ஆஃப்
அக்ரி படிப்புக்கான கலந்தாய்வுத் தகுதி கட் ஆஃப் மதிப்பெண் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்ற கல்வி ஆண்டு நிலவரப்படி, பிற்படுத்தப்பட்டோர் 195 மற்றும் அதற்கு மேலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர் 190 மற்றும் அதற்கு மேலும் எடுத்திருந்த நிலையிலேயே, அரசுக் கல்லூரிகளில் அக்ரி படிப்பு சாத்தியம் ஆனது. தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் 60 ஸீட்டுக்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகிறது. அதற்கான நன்கொடை, பெரிய தொகை!
சிலபஸ்
விவசாயமும், அதில் பயன்படுத்தவல்ல நவீன தொழில்நுட்பங்களும்தான் சிலபஸ். நான்கு வருட அக்ரி படிப்பில், இறுதியாண்டின் இறுதி செமஸ்டர் முழுக்க களப்பணிதான். அதில் இரண்டு மாதங்கள் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள விவசாயிகளோடு தங்கி அனுபவப் பாடங்கள் கற்க வேண்டும். அவர்களுக்கு உதவியாக விவசாய வேலைகளில் ஈடுபட வேண்டும்.
வேலைவாய்ப்பு
* வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலர் என அரசுப் பணியிடங்கள் காத்துக்கிடக்கின்றன.
* அரசு வேலையைவிட, உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டீ, காபி, ஏலக்காய் எஸ்டேட்கள் என தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணிவாய்ப்புகள் உள்ளன. 
 
* மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளில் அக்ரி படித்தவர்கள் பெரும்பான்மையாக தேர்ச்சி பெறுகிறார்கள்.
* வங்கிப் பணியிடங்களில் அக்ரி படித்தவர்களுக்கு என தனித் தேர்வு உண்டு.
* சுயதொழில் செய்ய சிறந்த படிப்பு அக்ரி என்பதால், அவர்களுக்கு வங்கிகள், நபார்டு அனைத்தும் உதவ முன்னுரிமை அளிக்கின்றன. கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, உயிரி உரம் தயாரிப்பு, உரக்கடை வைக்க, நர்சரி தொடங்க என எண்ணற்ற தொழிற் கடன்கள் வழங்கப்படுகின்றன.
* அக்ரி படித்தவர்கள் ‘அக்ரி க்ளினிக்’ வைத்து, பயிர் நோய்கள், உரம் மேலாண்மை போன்ற ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கலாம். இதற்கும் வங்கிகளில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
* முதுகலை எம்.எஸ்ஸி., அக்ரி முடித்தால், தனியார் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைக்கும். முனைவர் பட்டம் பெற்றால் வேளான் விஞ்ஞானி என உயரலாம்.
* ஆல் இண்டியா ரேடியோ மற்றும் கம்யூனிட்டி ரேடியோக்களில் விவசாயத்தைப் பற்றிப் பேசும் தொகுப்பாளர் வாய்ப்புகளும் உள்ளன.
ஸ்டூடன்ட்ஸ் வாய்ஸ்!
‘‘நாங்க,தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி பி.எஸ்ஸி., அக்ரி ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸ். கிராம தங்கல் திட்டத்துக்காக சின்னமனூர் விவசாயி ராஜா நிலத்துல நடவுக்கு வந்திருக்கோம். விவசாயிகள்கிட்ட இருந்து நாங்க கத்துக்கிறதோட, நாங்களும் அவங்களுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்குறோம். அக்ரி படிச்சிட்டு அரசு, தனியார் பணியையே குறி வைக்காம, மாணவர்கள் விவசாயம் செய்ய முன்வரணும். யார்கிட்டயும் கைகட்டி நிற்கத் தேவையில்ல... நம்ம நெலத்துல நாமதான் முதலாளி, தொழிலாளி எல்லாம்!’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக