பணம். இன்றைய அத்தியாவசிய தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லோரிடமும் அது இருக்கிறது. ஆனால் எல்லோரையும் பணக்காரர் என்று சொல்வதில்லையே, ஏன்?
அதோ போறார் பாரு, பெரிய பணக்காரரு...! என்று சொல்லும்போது நாம் ஏன் பணக்காரர் என்று அழைக்கப்படுவதில்லை என்று யோசித்திருக்கிறோமா? இல்லை. அது காலம் காலமாய் யாரோ ஒருவருக்கு எழுதி வைத்தது போல், நாமெல்லாம் எங்கே பணக்காரர் ஆவது என்ற மனநிலையிலேயே எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதை விட முக்கியமாகப் பலருக்கு பணக்காரர்கள் மீதிருக்கும் தவறான புரிதலும் ஒரு காரணம்.
இப்படி நினைக்கும் உங்களைப் பணக்காரராக மாற்றும் அட்டகாசமான சில குணாதிசயங்கள் உள்ளன. இவற்றை வளர்த்துக்கொண்டால் நீங்களும் பெரிய பணக்காரர் ஆகலாம்.
1. காசு... பணம்... துட்டு... மணி
பணம் பற்றி தெளிவான புரிதல் இருந்தாலே போதும், அந்தப் புள்ளியிலேயே நீங்கள் பணக்காரர் ஆகிவிடுவீர்கள். பணம், வாங்க விற்க உதவும் ஒரு ஊடகம். ஆனால் அது பார்க்கப்படும் விதமே அதற்கான மதிப்பாக மாறுகிறது. முதலில் பணம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
2. ஆசையும், விருப்பமும்
அத்தனைக்கும் ஆசைப்படு என்பார்கள். உங்கள் ஆசை பணக்காரனாக வேண்டும் என்றில்லாமல். அது தரும் மதிப்பின் மீதான ஆசையாக இருக்கட்டும். ஒரு விஷயத்தை விரும்பினாலொழிய உங்களால் அதில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. பணக்காரர்கள் பொதுவாக தாங்கள் விரும்பியதையே செய்வார்கள். விரும்பிய ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அதில் கிடைக்கும் சுதந்திரம் மட்டுமல்லாது அதன் மீதான நம்பிக்கையையும் மேலும் வளர்க்கும். பிடிக்காத வேலையையும் செய்பவர்கள் சாமானியர்கள், பிடித்ததை மட்டுமே செய்பவர்கள் பணக்கார்கள்.
3. உழைப்பும் தெளிவான அறிவும்
பணத்தைப் பெருக்க, ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். தாங்கள் இயங்கும் துறையில் தெளிவான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவும், உழைப்பும், வாய்ப்புகளுடன் ஒன்று சேரும்போதே நம்மால் வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்.
4. கையாள்வதும், பெருக்குவதும்:
கடுமையாக உழைத்து கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து விட்டீர்கள்... இப்போது நீங்கள் பணக்காரரா? என்றால், இல்லை. அந்தப் பணத்தைக் கையாளத் தெரிந்திருந்தால் மட்டுமே நீங்கள் பணக்காரர். அதாவது பணத்தை சரியான இடத்தில் சரியான அளவில் முதலீடு செய்யவும் செலவு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் சிறு சேமிப்பும் அவசியம். ஒரு பணக்காரன் சாதாரண சாமான்யனிடமிருந்து இங்குதான் வேறுபடுகிறான்.
5. எண்கள் மட்டுமே இலக்கல்ல:
பணக்காரர்கள் என்றாலே, எப்போதும் பணத்தை எண்ணிக்கொண்டும், தங்கள் நிகர சொத்து மதிப்பில் உள்ள பூஜியங்களைப் பார்த்துக்கொண்டும் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு. எண்களையெல்லாம் தாண்டி சிந்திப்பவர்களால் மட்டுமே வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். இல்லையென்றால் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். அதனால் தொடர்ந்து தங்களுடைய அறிவை, பார்வையை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
6. பயத்தை விட்டு தள்ளுங்கள்
பயம், எல்லோருக்கும் இருக்கும். நாம் என்னதான் வெளியில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்தாலும் நாம் எதற்கு பயப்படுகிறோம் என்பதை நன்கு தெரிந்திருப்போம். அந்தப் பயத்தை மூட்டை கட்டி விட்டு இலட்சிய பயணத்தைத் தொடருங்கள். பயம் ஒருபோதும் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கான தன்னம்பிக்கையை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
7. தெளிவான உறுதியான இலக்கு
இலக்கு தெளிவாக இருந்தால் மட்டுமே அதை நோக்கிய சரியான பாதையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். பணக்காரர்கள் எப்போதும் உறுதியான தெளிவான இலக்குகளை வைத்து கொள்வார்கள். அந்த இலக்கை அடையும் எண்ணம் மட்டுமே அவர்கள் மனதில் ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவார்கள். இலக்கை நிர்ணயித்து விட்டு, அதை மறந்துவிடுபவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
8. கொஞ்சம் சுயநலம்
இலட்சியப் பயணத்தை நோக்கி செல்பவர்கள் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். எல்லோருக்காகவும் கவலைப்பட்டால், இலக்கை அடைவது தாமதமாகலாம். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு தைரியமாக 'நோ' சொல்லி விடுங்கள். உங்களுடைய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். பிறர் கூறுவதையெல்லாம் எண்ணி கவலை படாமல், இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருங்கள்.
9. உதவி செய்யும் முன்
பணம் கையில் இருந்தாலே, கூட்டம் கூடிவிடும். கடன், அன்பளிப்பு, பரிசு என பல வகைகளில் பணத்தைக் கேட்டு வரிசையில் நிற்பார்கள். அவர்களில் எல்லோருமே நியாயமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் வள்ளல் போல வாரி வழங்காமல், கொஞ்சம் யோசித்து சரியான பயனாளியை அடையாளம் கண்டு, அதற்கு பின் உதவி செய்யுங்கள்.
10. ஆரோக்கியம் மிக முக்கியம்
உயிரோடு இருந்தால்தான் பணத்தை சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தை அனுபவிக்கவும் முடியும். பணம், பணம் என்று உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டால் அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். பல பணக்காரர்கள் இதில் தெளிவாக இருப்பார்கள். பீச், பார்க்குகளில் உடற்பயிற்சி செய்யும் பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் தொப்பைக்காக மட்டும் ஓடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கல்விக்கும், ஆரோக்கியத்திற்கும் செலவு செய்ய தயங்கவே கூடாது.
11. குடும்பமும் ஒரு கண்
ஒரு சமூகம் குடும்பத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஆகையால் எவ்வளவு பெரிய பணக்காரர் என்றாலும் பெரிய தொழில் என்றாலும் குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிட வேண்டும். உயிர் வாழ்வாதற்கான ஆதார பலமே நம் அன்புக்குரியவர்களிடம் தான் இருக்கிறது. முன்னேறி செல்வதற்கு அவர்களுடைய அன்பும் ஊக்கமும் மகத்தான ஆற்றலை தரும்.
பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டுகொள்வதில்லை என்பதும் பொய்யான கற்பனை. பல தந்தைகளின் சொத்துக்களையும் தொழில்களையும் அவர்களது பிள்ளைகள் தான் வழிநடத்துகிறார்கள் என்பதை மறுந்து விடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக