திங்கள், 20 ஜூலை, 2015

ரூ.300 முதலீட்டில் ரூ.30 லட்சம் வருமானம்: அசத்தும் 'வத்தல் தாத்தா'!

'வத்தல் தாத்தா' யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அளவுக்கு மதுரை, செல்லூர் வட்டாரத்தில் டி.பி.ராஜேந்திரன் மிகவும் பிரபலம். காரணம், இவரது திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி.

78 வயதான ராஜேந்திரன் இந்த வயதிலும், இளைஞர்களைப் போன்று சுறுசுறுப்பாக உழைத்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு காய்கறி சந்தைகளில் ஆரம்பமாகும் இவரது வேலைகள், இரவு கம்பெனி வரையிலும் தொடர்கிறது. வத்தல் போடுவதற்கான சுண்டைக்காய் வாங்குவதற்காக, ஆந்திரா, பென்னாகரம், சத்தியமங்கலம், மிதுக்கங்காய்க்கு விளாத்திகுளம், மாங்காய்க்கு பெரியகுளம், மற்ற காய்கறிகளுக்கு மாட்டுத்தாவணி, பரவை என பம்பரமாய் சுற்றுகிறார்.
இன்று ஆண்டுக்கு கிட்டதட்ட ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கும் இவரது இளமை காலம் அவ்வளவு இனியதாக அமைந்து விடவில்லை. ஐந்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, விருதுநகர் தால் மில்லில் மாதம் 25 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வந்திருக்கிறார். அந்த காலக் கட்டங்களில் தான் இவருக்கு வியாபரத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அந்த எண்னமே திருமணம் ஆன பிறகு அவரை குடும்பத்தோடு மதுரைக்கு வழி அனுப்பி வைத்திருக்கிறது. மதுரைக்கு வந்த சில வாரங்களில் 300 ரூபாய் முதலீட்டில் செல்லூரில் சிறிய மளிகைக்கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
இவரது கடுமையான உழைப்பின் காரணமாக, வியாபரம் ஒருகட்டத்தில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, காய்கறிகளும் விற்பணை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதில் சில காய்கள் விற்காமல் மிச்சமாகவே, அவற்றை என்ன செய்யலாம் என அவர் யோசித்ததின் விளைவு தான் இந்த வத்தல் கம்பெனி.

தனது கடையில் மிச்சமாகும் காய்கறிகளை காய வைத்து, அவற்றை வத்தல்களாக உருவாக்கி, 1 பாக்கெட் 10 காசுகள் என விற்பனை செய்ய ஆரம்பித்திரக்கிறார். வத்தல் தயாரிப்பில் இவரது மனைவியும், இவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். இருவரின் கடுமையான உழைப்பின் காரணமாக, மளிகைக்கடை வியாபாரத்தை விட வத்தல் வியாபாரம் நல்ல இலாபத்தை ஈட்டி தர ஆரம்பித்திருக்கிறது.
1965ல் வத்தல் தயாரிக்கும் கம்பெனியாக ஆரம்பிக்கபட்ட 'திருப்பதி விலாஸ்'க்கு இப்போது பொன் விழா ஆண்டு. 80களில் இவரும் இவரது மனைவியும் புது வகையான வத்தல்கள் மற்றும் வடகங்களை உருவாக்கினர். இவர்களது வத்தல் தயாரிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்கையில் தான், இந்த துறையில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகம் என்பதை உணர்ந்துள்ளார். நம் மாநில வியாபாரிகளும் கூட வெளிமாநிலத்த்வர்களிடம் இருந்து வத்தல்கள் வாங்குவதை கண்டு மிகவும் கவலையுற்று, நம்மூர் வியாபாரிகள் மட்டுமல்லாது, வெளி மாநில வியாபாரிகளும் கூட தன்னிடம் தான் வத்தல்கள் வாங்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளார்.
வடமாநிலத்தவர்கள் வத்தல் வியாபாரத்தில் வித்தகர்களாக இருப்பதற்கான காரணம் அவர்களிடம் இருக்கும் மெஷினர்களே என்பதை அறிந்து, 2005ஆம் வருடம் குஜராத்தில் இருந்து மெஷின்கள் வாங்கியிருக்கிறார். வேறு மாநிலம் மட்டுமல்லாது, வேறு நாட்டு வத்தல், வடகம், அப்பள வகைகளையும் உண்டு சுவையறிந்து, பொருளறிந்து செய்முறை அறிந்து தானாகவே தயாரித்திருக்கிறார். இன்று மாங்காய், முந்திரி, கத்திரி, வெண்டை, வெங்காயம் என 30 வகையான வத்தல்களையும், கார்ன், மக்கா, மீல்மேக்கர், மக்ரோனி போன்றவற்றையும் டன் கணக்கில் நம்மூர் வியாபாரிகளும், வட மாநிலத்தவர்களும் வாங்கி செல்கின்றனர்.
'தொழிலார்கள் தான் இந்த கம்பெனியின் உயிர், அவர்கள் இல்லையேல் இந்த கம்பெனி இல்லை' என கூறும் ராஜேந்திரன், ஆண்டுக்கு இருமுறை தனது ஊழியர்களை விமானங்களில் சுற்றுலா அழைத்து செல்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வத்தல், வடகம், அப்பளம் தயாரிக்க பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
''வத்தல் தயாரிப்பு தொழிலுக்கு சுறுசுறுப்பு, பருவநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் சமயோச்சித புத்தி, தயாரிப்பில் சுத்தம் ஆகிய மூன்றும் தான் பிரதான தகுதி'' என்கிறார்.

இன்றைய இளம் தொழில் முனைவோர்களுக்கு வாழும் எடுத்து காட்டாய் திகழும் இந்த இந்த 'வத்தல் தாத்தா' ஓர் 'அசத்தல் தாத்தா' தான்.
நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக