உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா?அறிய உதவும் 10 வழிகள்!
உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்!
இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ...
புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்களா?
நீங்கள் வேலையைச் சரியாகச் செய்தாலும் கடைசி ஆறு மாதங்களில் உங்களின் வேலை சம்பந்தமான புதிய திறன்களையும், புதிய விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளீர்களா எனப் பாருங்கள்; அது உங்களை அலுவலகத்தில் அப்டேட்டாகக் காட்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதனை அலுவலக வேலையில் காட்டுங்கள். அது உங்களது பணி உயர்வுக்கும், வேலை பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.
வேலையைத் தாண்டிய வேலைகளைச் செய்கிறீர்களா?
உங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையை மட்டும் செய்யாமல் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான மற்ற வேலைகளிலும் ஆர்வமாகப் பங்கெடுக்கிறீர்களா என்று பாருங்கள். இதுவரை அப்படி எதுவும் இல்லை என்றால் உடனடியாக முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, உங்களுக்கு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கத் தெரியும் எனில், உங்கள் நிறுவனத்தில் உங்கள் பிரிவு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருங்கள். நீங்கள் உற்பத்திப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், ஆனால் சந்தைப்படுத்துதல் உங்களுக்கு நன்றாக வரும் எனில், அந்தப் பிரிவுக்கான ஆலோசனைகளை வழங்கலாம். இதுபோன்ற மல்டி டாஸ்கிங் திறன் உள்ளவர்களுக்கு ஆட்குறைப்பு சமயத்தில் பாதிப்பு ஏற்படாது.
உங்களது செயல்திறன் அதிகரித்துள்ளதா?
உங்களுக்கான வேலை ஒன்றுதான் என்றாலும் அந்த வேலையை நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்கள் என்பதுதான். சென்ற வருடம் நீங்கள் என்ன வேலை செய்துள்ளீர்கள், அதனால் நிறுவனத்துக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கிறது, உங்களது பங்களிப்பு அதிகரித்துள்ளதா எனப் பாருங்கள். அப்படி அதிகரித்துள்ளது எனில், உங்கள் வேலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் உங்கள் பொறுப்புகளும், உங்களது வேலைப்பளுவும் அதிகரித்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களது வேலைத்திறன் மேம்படும்.
நிறுவன வளர்ச்சிக்கு பரிந்துரை செய்வீர்களா?
நீங்கள் உங்கள் நிறுவனத்தில் எந்த நிலையில் இருந்தாலும் நிறுவனம் எடுக்கும் முக்கிய முடிவுகள் என்பது அனைவரது கருத்துகளுக்கும் உட்பட்டதாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது உங்கள் நிறுவனம், வளர்ச்சிக்காக எடுக்கும் முடிவுகள் துவங்கி உங்கள் பிரிவின் வேலை வரை அனைத்து முடிவுகளிலும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்களா என்பதைப் பாருங்கள். உங்கள் முடிவுகள் தெளிவாக இருந்து, அது ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும். அது உங்கள் வேலையைப் பாதுகாக்கும் காரணியாக அமையும்.
மற்றவர்களின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
உங்கள் குழுவில் ஒருவர் ஒரு நல்ல கருத்தை முன்வைக்கும்போது இது நடைமுறை சாத்தியமல்ல; உங்களால் இது முடியாது என்பது போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்து கிறீர்களா? இல்லை என்றால் நல்லது. ஏனெனில் ஒரு குழுவில் அடுத்தத் தலைமைப் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என நிறுவனம் யோசிக்கும்போது மற்றவர்களின் கருத்தை கேட்டு அதில் உள்ள நிறை, குறைகளை அலசுபவரைத்தான் நிறுவனம் விரும்பும். ஆரம்பிக்கும்போதே முடியாது என்று கூறாமல் இருப்பது உங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.
சக பணியாளருடனான அலுவலகச் சூழல் எப்படி உள்ளது?
அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர் உங்களுடன் எப்படிப் பழகுகிறார் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சக ஊழியருடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லையெனில் உங்கள் வேலை சிறப்பாக அமைவதோடு, எந்தவித இடையூறுமின்றி வேலையைத் தொடர முடியும். ஆனால், சக பணியாளருடன் ஏதாவது பிரச்னை எனில் உங்களால் சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் உங்கள் வேலைத்திறன் குறையும். இது உங்கள் வேலை பாதுகாப்பைக் குறைக்கும். அதனால் சக ஊழியர்களுடன் பிணக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
சம்பள உயர்வின் அளவு எப்படி உள்ளது?
சம்பள உயர்வு என்பது அனைவருக்குமே அவரவர் வேலை செய்யும் அளவை பொறுத்ததுதான். உங்கள் சம்பள உயர்வு என்பது உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களின் சராசரி சம்பள உயர்வு அளவுக்கு மேல் இருந்தால், உங்கள் வேலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், மிகக் குறைவாக உள்ளது அல்லது உயர்வே இல்லை எனில் உங்கள் வேலை பாதுகாப்பானதாக இல்லை எனலாம்.
நிறுவனம் vs பணிபுரியும் பிரிவு!
நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்கள் பிரிவு முக்கியமான பிரிவா அல்லது அலுவலக வளர்ச்சிக்கு உதவும் ஒரு சார்பு பிரிவா அல்லது நிறுவனத்தில் அதிகப் பங்களிப்பு அளிக்காத பிரிவா என்பதைப் பாருங்கள். ஒருவேளை உங்கள் பிரிவு இனி இயங்காது என்ற அறிவிப்பு வந்தால், உங்கள் வேலைக்கான ஆதாரம் என்னவாக இருக்கும் என்பதைப் பாருங்கள். உங்கள் நிறுவனத்தில் மற்ற பிரிவுகளில் உங்கள் வேலையின் முக்கியத்துவம் என்ன, அங்கு உங்களது பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறுவனத்தின் நிதி நிலை என்ன?
உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள். உங்கள் நிறுவனம் நல்ல லாபத்தைப் பதிவு செய்கிறதா, தொழில் விரிவாக்கம் சிறப்பாக உள்ளதா எனப்பாருங்கள். இப்படி சிறப்பாக செயல்பட்டு, நிறுவனத்தில் உள்ள செலவுகளையும், பணியாளர்களுக்கு அதிக சம்பளத்தையும் (துறை சாராசரியைவிட அதிக சம்பளம்)கொடுக்கும் அளவுக்கு உள்ளது எனில் உங்கள் வேலை பாதுகாப்பும் அதிகமாக இருக்கும்.
சராசரிகளுக்கு மேல் இருக்கிறீர்களா?
உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவரது வேலை செய்யும் நேரம், வேலை செய்யும் அளவு, வேலையில் நீங்கள் காட்டும் நேர்த்தியில் ஆரம்பித்து, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அப்டேட் ஆகியுள்ளது வரை அனைத்தும் அலுவலக சராசரிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக உங்கள் வேலை உங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக