View status

View My Stats

திங்கள், 23 மார்ச், 2015

காலத்தை வென்றவன் லீ...: காவியம் ஆனவன் லீ...




சிங்கப்பூர் : மக்கள் நலனையும், நாட்டின் உயர்வையும், சுகாதாரத்தையும் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் ; நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ. இது போன்ற தலைவர் தங்களுக்கும், தங்கள் நாட்டிற்கும் கிடைக்க மாட்டாரா என உலக மக்களை ஏங்க வைத்தவர். தனது வாழ்நாளில் உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் லீ பேசிய சிறந்த மேடைப் பேச்சுகள் மற்றும் பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட துளிகள்:
" மனிதர்கள் அனைவரும் சமம். அனைத்து மதங்களும், அரசியல் கொள்கையாளர்களும் கூறுவதும் இதனைத் தான். கட்சி பேதங்கள், மதங்கள், கொள்கைகளின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பார்க்காதீர்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அந்நாடு அழிவை சந்திக்கும்.
சிங்கப்பூரில் இருக்கும் அமெரிக்க பத்திரிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம். சிங்கப்பூர் தலைவர்கள் குறித்து அவர்கள் கூறும் கருத்துக்களையும் வரவேற்கிறோம். சிங்கப்பூரைப் பற்றி வெளிநாட்டிவர் என்ன படிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிகைகளையும் நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அமெரிக்க பத்திரிகைகள் சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க பத்திரிகைகள் அமெரிக்காவை ஆளலாம்.
1959 முதல் 7 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளேன். சிங்கப்பூரை சிறப்பாக மாற்ற நான் செய்துள்ள திட்டங்களே, சிங்கப்பூர் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று". இவை பல்வேறு காலகட்டங்களில் அவர் பேசியவை.
லீ ஒரு சர்வாதிகாரி, அடக்குமுறையாளர் என பலரும் விமர்சித்து வந்த வேளையில் அதற்கு அவர் அளித்த பதில்:
''நீங்கள் சிங்கப்பூரில் நல்லாட்சி நடத்த வேண்டுமானால் இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவற்றை தூக்கி எறியுங்கள். இது சீட்டுக்கட்டு விளையாட்டல்ல. இதில் உங்கள் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் அடங்கி உள்ளது. நமது மொத்த வாழ்க்கையும் சேர்ந்து உருவானது தான் இந்த கட்டடம். இதற்கு மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது.
மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரமே எங்களின் முக்கிய நோக்கம். அடுத்தது ஜனநாயக நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள். அதனை காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்ற வேண்டும். மீடியாக்களின் விமர்சனத்திற்கும் மக்களின் எண்ணங்களுக்கும் ஏற்றவாறு நீங்கள் ஆடிக் கொண்டிருந்தால் நல்ல தலைவனாக இருக்க முடியாது. புயல் எந்த திசையில் அடித்தாலும் அதனை சமாளிக்கும் திறன் வேண்டும். அதன் போக்கில் செல்வது திறமையல்ல.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கருத்து சுதந்திரம், கருத்து உரிமை என்ற பெயரில் தங்கள் நாட்டு தலைவர்களை கேலி செய்து கார்ட்டூன்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூரில் அப்படி கிடையாது. தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்கள். தலைவர்களை கேலி செய்வதை அனுமதித்தால் அவர்களின் ஆணைக்கு அங்கு மதிப்பு கிடைப்பது கடினம்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எப்படி பேசுகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், எங்கு பேசுகிறீர்கள், என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள் என்பன போன்ற உள்ளார்ந்த தேடல்களை தீவிரமாக மேற்கொள்ளாவிட்டால், நாம் பொருளாதார வளர்ச்சி காண முடியாது. நாம் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது'' என்றார்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர் லீ. அவரிடம் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்றவை கிடையாது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இது தான் தனது உற்சாகத்தின் ரகசியம் எனவும் அவர் பல முறை கூறி உள்ளார்.
தான் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என கருதுவாரோ அதே அளவிற்கு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பியவர் லீ. அதற்கான நடவடிக்கைகளில் தானே நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டு, இன்றைய தூய்மை நகரமாக சிங்கப்பூரை மாற்றி காட்டி உள்ளார்.
அது குறித்து அவர் ஒருமுறை மேடையில் பேசிய போது, "நான் மரணப்படுக்கையில் இருந்தால் கூட என்னைச் சுற்றி அசுத்தம் இருப்பதை உணர்ந்தால் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் எழுந்து வருவேன்" என சுத்தத்தை உயிர்மூச்சாக எண்ணி முழங்கிய, மகத்தான தலைவர் லீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக