View status

View My Stats

சனி, 6 செப்டம்பர், 2014

நேர மேலாண்மை (Time Management in Tamil)

நேர மேலாண்மை - நேரம் ஏன் போதவில்லை ?

இந்த அத்தியாயத்தையும் ஒரு புதிரோடு ஆரம்பிப்போமா? நீங்கள், நான், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், அமெரிக்க ஜனாதிபதி. இத்தனை பேருக்கும் பொதுவானது ஓர் எண் 86400. அது என்ன? புதிருக்கு விடை கடைசியில். அவசரப்படுபவர்கள் உடனே பார்க்கலாம். நிதானமான வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கலாம்.
உலகத்தில் மனிதர்கள் ஆட்சி செய்யத் துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரை ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால், சமீபகாலமாகத்தான் ‘எனக்கு நேரமில்லை’. ‘நான் ரொம்ப பிஸி’, ‘பிறகு பார்க்கலாம்’ என்கிற வார்த்தைகள் நமது காதுகளில் விழுகிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், நமது தாத்தா என்றாவது எனக்கு நேரமில்லை என்று சொல்லியிருக்கிறாரா?
இன்னும் சொல்லப்போனால், இன்றைய கால கட்டத்தில்தான் நமது நேரத்தை குறைக்கும் சாதனங்கள், கருவிகள், தொழிற்நுட்பங்கள் வந்திருக்கின்றன. நமது பணியை அவை மிகச் சுலபமாக்கி நம் நேரத்தை மிச்சமாக்குகின்றன. அப்படியானால், இப்பொழுது நமக்கு அதிக நேரம்தானே இருக்க வேண்டும்? ஏன் நமக்கு நேரமே இல்லை? நேரம் ஏன் போதவில்லை? உண்மையில் இதை நாம் யோசிப்பதில்லை.
ஒரு காலத்தில், சென்னை டூ கோவை என்பது நான்கு நாள் பயணம். பிறகு அது இரண்டு நாள் ஆனது. பிரிட்டிஷ்காரர்கள் புண்ணியத்தில் ரயில்கள் ஓட, அது ஒரு நாள் பயணமாக மாறியது. இப்பொழுது ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் கோவைக்குச் சென்று விடலாம். ஆனாலும் நமக்கு நேரமில்லை.
அப்போதைய பம்பாய் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் டிரங்க் கால் புக் செய்ய வேண்டும். பிறகு அழைப்பு கிடைக்க வேண்டும். இப்போது, விரல் நுனி விசையில் விரிகிறது உலகம் என்றாலும் நமக்கு நேரமில்லை. ஆக, உண்மையில் நேரமின்மை என்பது ஒரு மாயை. அதை உடைத்தெறிந்து விட்டோமெனில், 24 மணி நேரமும் நமக்கு அமுத சுரபிதான்.
உங்கள் விடுமுறையில் ஒரே ஒரு நாள் வீட்டின் மின்சாரத்தை நிறுத்திவிடுங்கள். கைபேசியையும் கையில் எடுக்காதீர்கள். நோ டி.வி, நோ ஹோம் தியேட்டர், நோ லேப் டாப், நோ ஃபேஸ்புக், நோ எஸ்.எம்.எஸ். என்ன ஆகும்?
நீங்கள் பலநாட்களாக, செய்யத் திட்டமிட்டிருந்த பல பணிகள் உங்கள் நினைவிற்கு வரும். அவை பக்கத்து தெருவில் இருக்கும் உங்களது நெருங்கிய உறவினர் சந்திப்பு, வயதான அம்மாவுடன் சூடான ஒரு காஃபி, பிள்ளைகளுடன் அரட்டை, கார்டனில் கொஞ்சம் வேலை, வியாபார மேம்பாட்டிற்கான புதிய திட்டங்களின் உருவாக்கம் என எல்லாமே சாத்தியப்படும். இவ்வளவு பணிகளைச் செய்த பிறகும் உங்களுக்கு நிறைய நேரமிருக்கும். இப்பொழுது தெரிகிறதா? நாம் நேரத்தை எதில் எல்லாம் செலவிடுகிறோம் என்று? ‘நேரத்தை நான் கொஞ்சம் கூட வீணாக செலவழிப்பதில்லை. இருந்தும், எனக்கு நேரம் போதவில்லை. ஏனெனில், எனக்கு நிஜமாகவே நிறைய பணிகள் உள்ளன’ என சொல்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த முழு அத்தியாயம்.
நேரமில்லை என்று யார் வேண்டுமானாலும் அலுத்துக் கொள்ளட்டும். ஆனால், ஒரு நிறுவனத்தின் தலைவராக திகழ்பவருக்கு (கட்டுநருக்கு) நேரமின்மை என்பது உடனே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகும். ஏனெனில், உங்களது நேரமின்மை என்பது எதிர்கால செயல்பாடுகளை முடக்கிவிடும். இதனால் பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சிதான். ஆகவே, இதைக் களைவது முக்கியம்.
ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் இரண்டுதான். ஒன்று வழக்க
மான செயல்பாடுகள்(Routine Activities)மற்றொன்று மேம்பாட்டு செயல்பாடுகள் (Business Development Activities). பொதுவாக ஒரு நிறுவனம் வழக்கமான செயல்பாடுகளுக்கு 60 சதவீத நேரத்தையும், மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 சதவீத நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? தவறான நேர ஒதுக்கீட்டுத் திட்டமிடல் காரணமாக, 100 சதவீத நேரத்தையும் வழக்கமான செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டி இருக்கிறது. சில நிறுவன தலைவர்களுக்கு அதுவும் போதவில்லை. பிறகு எப்படி வளர்ச்சியைப் பற்றி தலைவர்கள் யோசிப்பது, திட்டமிடுவது?, செயல்படுவது?
நேர ஒதுக்கீட்டை, இரண்டாக செய்ய முடியும். செயல்பாடுகள் சார்ந்தது மற்றும் நபர்களைச் சார்ந்தது. முதலில் செயல்பாடுளை அடிப்படையாகக் கொண்ட நேர ஒதுக்கீட்டைக் காண்போம். உங்களது அனைத்து செயல்பாடுகளையும் வரிசையாக எண்கள் போட்டு எழுதுங்கள். இருபதானாலும் சரி, இருநூறானாலும் சரி. எழுதிவிட்டீர்களா? இப்போது அதை, கீழே உள்ளது படி வகைப்படுத்துங்கள்.
A. உடனே செய்ய வேண்டியது,
B. பிறகு செய்துகொள்ளலாம்,
C. எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
D. முற்றிலும் நிராகரித்து விடலாம்.
இதன்படி வகைப்படுத்தி விட்டீர்களெனில், உடனே செய்ய வேண்டிய செயல்பாடுகள் அதாவது பு ன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். முற்றிலும் நிராகரித்து விடக்கூடிய பணிகள் நிறைய இருப்பதையும் நீங்கள் உணரலாம். எதை, எப்போது செய்வது, எந்த செயல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, எந்த செயல்களுக்கு முழுக் கவனம் செலுத்துவது என்ற திட்டமிடல் இல்லாதபோதுதான் நமக்கான நேரம் கன்னா பின்னா வென்று செலவாகிறது.
வகைப்படுத்துதல் என்பது நேர ஒதுக்கீட்டிற்கு மட்டுமல்ல அலுவலக பராமரிப்புக்கும் ஏற்றதாகும். சாதாரணமாக உங்கள் அலுவலக மேஜையை எடுத்துக்கொள்ளுங்கள். மேஜை முழுக்க ஃபைல்கள், புத்தகங்கள், பேப்பர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குவிந்திருக்கும். எல்லாமே தேவையானதுதான் என்று எண்ணி எதையுமே நீங்கள் தூக்கிப்போட தயங்குவீர்கள். ஆனால், மேற்
சொன்னபடி இப்பொழுது தேவையானது, எப்போதாவது தேவைப்படும், தேவையேப்படாது என்று வகைப்படுத்தி பிரித்து விட்டீர்கள் எனில், உங்கள் மேஜை சுத்தமாகும். நேரமும் மிச்சமாகும்.
அடுத்ததாக, ஆட்கள் சார்ந்த நேர ஒதுக்கீட்டைக் காண்போம். நாம் முதலிலேயே பார்த்தது போல, யார் யாருக்கு என்ன பணியோ அந்தப் பணியைத்தான் அவரவர் சரியாக செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் நிறுவனத்தில் பர்சேஸ் மேனேஜர் இருக்கிறார். பொதுவாக அவருக்கு என்ன பணிகள் இருக்கும்?
கட்டுமானப் பொருட்கள் கொள்முதல் செய்வது, நல்ல பிராண்டட் பொருட்கள் தெரிந்து வைத்திருப்பது, அவர்களுடன் விலை குறைப்பிற்காக பேரம் பேசுவது, கொள்முதல் செய்த பொருட்களை ஸ்டோர் இன்சார்ஜிடம் ஒப்படைப்பது, வாங்கிய பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை திருப்பி அனுப்புவது, கட்டுமானப் பொருட்களின் கையிருப்பினை அவ்வப்போது ஸ்டோர் இன்சார்ஜிடம் கேட்டறிவது, சப்ளையர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது, இவைதானே இருக்கும்? இவை தவிர வேறு பணிகளை அவருக்கு ஒதுக்கினாலோ அல்லது அவரது சம்பள மதிப்பிற்கு கீழான சிறிய வேலைகளை அவரிடம் செய்யச்சொன்னாலோ, உங்களுக்குத்தான் நஷ்டம்.
நேரத்தின் மதிப்பு என்பது நபருக்கு நபர் வேறுபடும். சாதாரண ஆபீஸ் பியூனின் 1 மணி நேரத்தை விட அதிகாரியின் 1 மணி நேரம் மதிப்பு வாய்ந்தது. அதிகாரியின் 1 மணி நேரத்தை விட மேலாளரின் 1 மணி நேரம் மதிப்பு வாய்ந்தது. அதையும் விட சேர்மனின் நேர மதிப்பு அதிகம். அதாவது, தங்களுக்கு கீழ் நிலையில் உள்ளோரின் வேலையை நாம் செய்வது என்பது முற்றிலும் தவறானது. நிறைய நிறுவனத் தலைவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‘எந்த வேலையும் நான் செய்வேன். சைட் சூப்பர்வைசர் வராவிட்டால் என்ன? நானே ஃபீல்டில் வேலை செய்வேன்’ எனச் சொல்லும் பில்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் இது ஒரு தவறான பணி முறை. பிறகு கடைசி வரை நீங்கள் உங்கள் நிறுவனத்திலேயே சைட் சூப்பர்வைசராகவே பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான முயற்சி ஏதும் அங்கு நடக்காது.
இ மெயில் பார்ப்பது, பதில் அனுப்புவது, தமக்கு வந்த தபால்களை பிரித்துப் படிப்பது போன்ற சிறுசிறு பணிகளை தாமே செய்யும் பில்டர்கள் ரூ.5,000 சம்பளம் வாங்கும் ஒரு +2 பையனின் பணியைத்தான் தாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாலே, ஒரு நாளின் நேரம் உபரியாக இருக்கும். தங்களுடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர்களுடைய சம்பள மதிப்பிற்கு கீழான வேலைகளைச் செய்யச் சொல்வது, தானாகவே அதுபோன்ற வேலைகளை எடுத்துச் செய்வது. இவை இரண்டுமே, நேர மேலாண்மைப்படி தவறானதாகும்.
சமீபத்தில் எனது பில்டர் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த சமயம் அவரது சைட்டில் உள்ள புல்வெளியில் தொலைந்து போன அவரது பேனாவைத் தேடிக்கொண்டிருந்தார். ராசியான பேனா என்பதால் அரைமணி நேரமாக தேடிக்கொண்டிருக்
கிறாராம். நான் சென்ற பிறகும் அவர் தேடிக்கொண்டிருந்தார். இன்னும் அரை மணிநேரம் சென்றது. அவர் தேடுவதை நிறுத்தக்காணோம். பொறுமை இழந்த நான் அவரிடம், ‘அந்தப் பேனா என்ன விலை?’ என்றேன். ‘20 ரூபாய்’ என்றார். ‘இப்போது நடைபெறும் புராஜெக்டின் மதிப்பு என்ன?’ என்றேன். ‘2 கோடி’ என்றார். நான் வந்துவிட்டேன். நான் வந்த பிறகு, எனது செல்போனுக்கு அவர் ‘Thanks.You have opened my Eyes " என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.
வளரத்துடிக்கும் ஆர்வமிக்க நிறைய கட்டுநர் நண்பர்கள் இப்படித்தான் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விக்ஷயம். திட்டமிடாத பேச்சுக்கூட கட்டுநர்களின் நேரத்தை செலவழித்துவிடும். அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், சப்ளையர்கள் இவர்களுடனான அலுவலக சந்திப்பில் என்ன பேச வேண்டும்? எதைப்பற்றி பேச வேண்டும்? எவ்வளவு நேரம் பேச வேண்டும்? என்கிற தெளிவான திட்டமிடுதலுக்குப் பிறகு பேசும்போது, நமக்கு நேரம் மிச்சமாகும். இல்லையென்றால், அது மீட்டிங்காக இருக்காது, சாட்டிங்காக மாறிவிடும்.
நாம் நேரத்தை சரியாக திட்டமிடாது போகும்போது, அதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதுதான் கடைசி நிமிட பதட்டம். கட்டுநர்கள் மட்டுமன்றி, நம் சமூகத்தில் பலரும் கடைசி நேர மனிதர்களாகவே இருக்கிறார்கள். கடைசி நாளில்தான் வரி கட்டுவது, போன் பில்லை கட்டுவது போன்ற வேலைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். புத்தக கண்காட்சி, கட்டுமான பொருட்கள் கண்காட்சி போன்றவை கடைசி நாளில் கூட்டமாகக் காணப்படுவதற்கும் இதுதான் காரணம்.
இது நமக்கு பள்ளிக் காலத்திலிருந்தே துவங்கி விடுகிறது. பரீட்சை நேரத்தில்தான் புத்தகத்தை ரிவிக்ஷன் செய்வது, மணி டிக்கும்போதுதான் 10 மார்க் விடைக்கு மாய்ந்து மாய்ந்து எழுதுவது, என இப்படித் துவங்கும் நமது நேர மேலாண்மைக் குளறுபடி படிப்படியாக வளர்ந்து நம்மை இன்னலுக்கு ஆளாக்குகிறது.
நேர மேலாண்மை பற்றி இன்னும் ஒரு ரத்தின வார்த்தை இருக்கிறது. இதைச் சொன்னவர், இடுப்பிலேயே எந்நேரத்திலும் கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தவர். அவர் பெயர் காந்தி. சொன்ன வார்த்தை :
“நேரத்தை வீணாக்குவது என்பது வேண்டாத செயலை செய்வது மட்டுமல்ல,
வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும்தான்”.
நேர மேலாண்மைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இப்போதைக்கு நேரம் அவ்வளவுதான்.
முதலில் சொன்ன புதிருக்கு விடை : ஒரு நாளுக்கு 86400 வினாடிகள். இது எல்லோருக்கும் சமமானதுதானே

5 கருத்துகள்: