திங்கள், 2 டிசம்பர், 2013

''விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம்'' தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி சாதித்த கரூர் இளைஞர் -



                     தமிழில் படித்து, நேர்முகத் தேர்வையும் எதிர் கொண்டு ஐஏஎஸ் தேர்வில் 359வது ரேங்க் பெற்று, கரூரை சேர்ந்த விவசாயி மகன் தினேஷ்குமார் சாதனை படைத்துள்ளார். கரூர் மாவட்டம் சோமூரை சேர்ந்த அண்ணாவி,அன்னக்கொடி தம்பதி மகன் தினேஷ்குமார் (35). பெற்றோர், விவசாயிகள். பி.இ., பட்டதாரியான தினேஷ்குமார் ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வெழுதி, ஐஆர்எஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது நாக்பூரில் பயிற்சி பெற்று வருகிறார். 

இம்முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் 359வது ரேங்க் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து தினேஷ்குமார் கூறியது: கடந்த 1999ல் ரயில்வே தேர்வு வாரிய தேர்வு எழுதி, Ôகூட்ஸ் கார்டுÕ பணியில் சேர்ந்தேன். டிஎன்பிஎஸ்சி குரூப்,2 தேர்வு எழுதி 2001ல் தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியில் சேர்ந்தேன். பின்னர் குரூப்,1 தேர்விலும் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளராக பணியில் சேர்ந்தேன். 

கடந்த 2011ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் எனக்கு அகில இந்திய அளவில் 809வது ரேங்க் கிடைத்தது. இதனால் ஐஆர்எஸ் பிரிவில்தான் எனக்கு வேலை கிடைத்தது. தற்போது ஐஆர்எஸ் அதிகாரிக்கான பயிற்சியை பெற்று வருகிறேன். மீண்டும் தேர்வு எழுதினேன். எனது 10 ஆண்டுகால விடாமுயற்சியும், கடின உழைப்புக்கும் பலன் இப்போது கிடைத்துவிட்டது. அகில இந்திய அளவில் 359வது ரேங்க் பெற்றுள்ளேன். தற்போது ஐஏஎஸ் பிரிவில் 170 காலியிடங்கள் உள்ளதால் எனக்கு ஐஏஎஸ் பிரிவில் வேலை கிடைத்து விடும் என நம்புகிறேன். 

என் அப்பாவும், அப்துல்கலாமும்தான் எனக்கு ''ரோல் மாடல்''. எழுத்துத்தேர்வை தமிழிலேயே எழுதினேன். நேர்முகத்தேர்வில் 5 பேர் கொண்ட குழுவினர் இலக்கியம், கூட்டுறவு, அறிவியல் துறைகளில் இருந்து ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு நான் பெரும்பாலான கேள்விகளுக்கு தமிழ் மொழியிலேயே பதில் அளித்தேன். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற மொழி ஒரு தடையே அல்ல. மனம் விரும்பும்போது படித்தாலே போதுமானது. விடாமுயற்சியுடன் உழைத்தாலே போதும் இலக்கை அடைந்து விட முடியும். இவ்வாறு தினேஷ்குமார் கூறினார். தினேஷ்குமாருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், 3 வயதில் அனுஷ்ணவி யாழினி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

1 கருத்து: