பளபளக்கும் தரை, உயர்தர மேஜைகள், கணினிகள், சுத்தமான குடிநீர்க் குழாய், குளிர்சாதனப் பெட்டி, நவீன ஒலிபெருக்கிகள், டி.வி.டி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பான், நவீன கழிப்பறை, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட சுவர்கள்...
இது ஏதோ பன்னாட்டு அலுவலகம்பற்றிய வர்ணனை இல்லை. இவை அனைத்தும் இருப்பது, ஓர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில். தனியார் பள்ளிகளுக்கே சவால்விடும் கட்டமைப்புகளைக்கொண்ட அந்தப் பள்ளி, கோவை மாவட்டம், ஜடயம்பாளையம் ஊராட்சி - ராமாம்பாளையம் கிராமத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளியின் மாணவர் சேர்க்கை வெறும் 27. இந்த ஆண்டு 60-ஐ தொட்டதற்கான ரகசியம்... நவீன வசதிகள்கொண்ட அந்த பள்ளியின் வகுப்பறைகளே. இந்தப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் பள்ளியின், தலைமை ஆசிரியை சரஸ்வதி மற்றும் ஆசிரியர் ஃபிராங்க்ளின்.
இது குறித்து பேசிய ஆசிரியர் ஃபிராங்க்ளின் ''அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. போதிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே போகிறது. அதை மாற்றும் நோக்கத்தில்தான் இந்தப் பள்ளியைப் புதுப்பித்தோம்.
இந்தக் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உள்ளோம். அதற்காக இன்டர்நெட் வசதிகளுடன்கூடிய 11 கம்ப்யூட்டர்கள் வாங்கி, தனி லேப் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இப்படி ஒவ்வோர் அரசு பள்ளிகளையும் மாற்றுவதற்கு, அரசு நினைத்தால் நிச்சயம் முடியும். ஒரு வகுப்பறையை நவீனப்படுத்த ஆகும் செலவு 3 லட்சம் ரூபாய்தான். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதியை ஒதுக்கி செயல்படுத்தினால், கல்வியில் நம் நாடு முன்னேறும்'' என்றார் நம்பிக்கையுடன்.
இந்தப் பள்ளியில் யோகா, நடனம், விளையாட்டு போன்ற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கே படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
''எங்கள் மாணவர்கள் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அதில் கிடைத்த 2,000 ரூபாயை 'தானே’ நிவாரண நிதிக்காக விகடனுக்கு வழங்கினார்கள்.'' என்று பெருமிதத்தோடு சொன்னார், தலைமை ஆசிரியை சரஸ்வதி.
இந்தப் பள்ளியின் சிறப்பு குறித்து ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் பழனிசாமி கூறுகையில், ''எங்கள் ஊரின் ஒற்றுமைச் சின்னமாகவே இந்தப் பள்ளியைப் பார்க்கிறோம். மக்களிடம் இருந்து திரட்டிய நிதியைவைத்து ஒரு வகுப்பறையைக் கட்டினோம். இதை அறிந்த கலெக்டர், மற்றொரு வகுப்பறை கட்டச் சொல்லி நிதி வழங்கினார். இது, 1930-ல் தொடங்கப்பட்ட பள்ளி. இதுவரை ஆண்டு விழா கொண்டாடவில்லை. இந்த ஆண்டு மிகச் சிறப்பானமுறையில் விழா நடத்த முடிவு செய்திருக்கிறோம். விரைவில், நடுநிலைப் பள்ளியாக இந்தப் பள்ளி உயரும் என்று நம்புகிறோம்'' என்றார்.
ஆசிரியர் ஃபிராங்க்ளினின் பணியைப் பார்த்த, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், அவருக்கு 1,500 ரூபாய் போக்குவரத்து உதவித் தொகை அளித்தார். அந்தப் பணத்தையும் பள்ளியின் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கவே அவர் செலவு செய்திருக்கிறார்.
ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் நல்ல கல்வியை அளிக்கும் தலைமை ஆசிரியர் சரஸ்வதியும், ஆசிரியர் ஃபிராங்க்ளினும் நம் கனவு ஆசிரியர்களே!
இந்தப் பள்ளியின் வலைப்பதிவு முகவரி http://rmpschool.blogspot.in/
- கி.விக்னேஷ்வரி
படங்கள் : சி.யமுனைச் செல்வன்
சுட்டி விகடன் - 'கனவு ஆசிரியர்' பகுதியில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக