View status

View My Stats

ஞாயிறு, 26 மே, 2013

"கைகொடுக்குமா பேப்பர் கப் பிஸினஸ்..?”

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

Thanks to Aval Vikatan



சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்குபெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...
''பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்ய ஆவலாக உள்ளேன். அதற்கான முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...''



''இன்று பல பெண்கள், உடனடியாக 'டிக்' செய்ய நினைக்கும் சுயதொழில், பேப்பர் கப் தயாரிப்பு. ஆனால், தற்போதுள்ள போட்டிச் சூழல் காரணமாக, இத்தொழிலை வெற்றிகரமாக நடத்த... அயராத உழைப்பும், கூர்மையான சந்தை அறிவும் வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

டீக்கடைகளில் கண்ணாடி குவளைகளுக்குப் பதிலாக ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சன்னமான பிளாஸ்டிக் கப்கள், அப்போது விலை குறைவாக இருந்ததால், டீக்கடைக்காரர்கள் பரவலாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், இந்த பிளாஸ்டிக் கப்கள் சுற்றுச்சூழல் கேடுகளுக்குக் காரணமாக இருப்பதால்... அரசும், தொண்டு நிறுவனங்களும் அதன் பயன்பாட்டை நீக்கப் போராடினார்கள். விளைவு, பேப்பர் கப்கள் சந்தைக்கு அறிமுகம் ஆயின. இதற்கு பெரும் தேவையும் ஏற்பட்டுள்ளது. டீ, காபி, குளிர்பானங்கள் என்று எல்லாவற்றுக்கும் இப்போது பேப்பர் கப் உபயோகப்படுத்தப்படுகிறது.

110 மில்லி, 150 மில்லி, 250 மில்லி என மூன்று முக்கிய அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பேப்பர் கப்கள், ஆரம்ப காலங்களில் செமி ஆட்டோமேட்டிக் எந்திரம் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இதன் மூலம் தரம் குறைவான கப்களையே தயாரிக்க முடிந்தது. அதோடு, குறைந்த அளவே உற்பத்தியும் செய்ய முடிந்ததால், கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால்... செமி ஆட்டோமேட்டிக் எந்திரம் வரவேற்பு இழந்து, ஆட்டோமேட்டிக் எந்திரங்கள் உபயோகத்துக்கு வந்து... நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் ஜெர்மனியில் இருந்து இந்த மெஷினை 
இறக்குமதி செய்து அதை மாடலாக கொண்டு இந்தியாவில் தயார் செய்தனர். ஒரு எந்திரத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இப்போது, சீனத் தயாரிப்பு எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 6 லட்ச ரூபாய் விலையில் விற்பனை ஆகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, சிவகாசி, கோவை என பல ஊர்களிலும் இந்த வகை எந்திரங்கள் கிடைக்கின்றன. இந்த எந்திரம்தான் பேப்பர் கப் தொழிலுக்கான முக்கிய முதலீடு.

அடுத்ததாக, எளிதான பேப்பர் கப் செய்முறை பற்றிப் பார்ப்போம். 
இதற்கான மூலப்பொருட்கள் இரண்டுதான். ஒன்று, கப்பின் மேல் பாகம். இது ஷீட்டுகளாக வரும். கப்பின் அளவுக்கு இதை பஞ்ச் செய்து வெட்டித் தருவார்கள். அடுத்தது, அதன் அடி பாகம். இதற்கான ஷீட், ரோலாக வரும். இவை இரண்டையும் எந்திரத்தில் இணைத்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காக கப்கள் தயாரித்து வெளியேற்றிவிடும். ஒன்றின் பின் ஒன்றாக எந்திரமே தானாக அடுக்கிக் கொடுத்துவிடும். அவற்றை வெளியே எடுத்து பரிசோதித்து, 100 கப்கள் வீதம் பேக் செய்யும் எளிதான வேலைதான் நமக்கு. இதன் எளிமை, அதிக உற்பத்தி, உடனடி தேவை அனைத்தும் இதன் பலம். இருந்தும் இதில் இப்போது சில சந்தை சிக்கல்கள் இருக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக பேப்பர் கப் அறிமுகப்படுத்தப்பட்ட போது 110 மில்லி கப்பின் விலை 32 பைசா முதல் 35 பைசா வரை இருந்தது. மூலப்பொருளான காகிதத்தின் விலை கிலோ 56 ரூபாயாக இருந்தது. இது நல்ல லாபத்தை தந்தது. காகித விலை படிப்படியாக உயரத் தொடங்கி, கிலோ 84 ரூபாய்க்கு வந்துவிட்டது தற்போது. ஆனால், உற்பத்திப் பொருளின் விலை உயரவே இல்லை. சொல்லப்போனால்... 29 பைசா என விலை குறைந்துதான் இருக்கிறது. தேவையைவிட உற்பத்தி அதிகரித்திருப்பது முக்கியமான காரணம். விலை குறைய குறைய கப்பின் அளவும் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 85 மில்லி அளவுகளில் கப் தயாரிக்கின்றனர்.

ஒரு டன் பேப்பர் மற்றும் 300 கிலோ பாட்டம் பேப்பர் ஆகியவற்றின் மூலமாக 4.60 லட்சம் கப் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு நாளில், ஒரு எந்திரம் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கப் வரை தயார் செய்யும். ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் முதல் 15 லட்சம் கப் வரை விற்பனை செய்ய வேண்டும். இரண்டு எந்திரங்கள் என்றால், 25 லட்சம் கப் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த உற்பத்தியை கணக்கில் கொண்டு இதற்கான சந்தையை ஸ்திரமாகப் பிடிக்கக் கூடிய வலு உங்களுக்கு இருந்தால், உடனடியாக தொழிலை ஆரம்பிக்கலாம்.

அப்படி இறங்கும்பட்சத்தில்... பின் வரும் விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவும்.
 இதற்கு 24 மணி நேரமும் எந்திரம் ஓட வேண்டும். அடிக்கடி மின்சாரம் கட் ஆகும் இடம் உதவாது. கிராமப்புறங்களில் கிடைக்கும் குறைந்த அழுத்த மின்சாரத்தை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் உற்பத்தியை செய்வது கடினம். ஜெனரேட்டர் போட்டு ஓட்டலாம் என்றால், அது கட்டுப்படியாகாது. இந்த கப்கள், மிக லேசான எடை உள்ளவை என்பதால், சேமித்து வைக்க கூடுதல் இடம் தேவைப்படுவதோடு... பார்சலில் அனுப்புவதற்கான செலவும் அதிகமாகும். மிக அதிகமான ஆர்டர்களைப் பெற்று மொத்தமாகத்தான் அனுப்ப வேண்டும். இவை எல்லாவற்றையும் சமாளித்து, முதல் தர பேப்பரில் தயாரான கப் என்றால், 32 பைசா விலையில் விற்பதன் மூலமாக நல்ல லாபம் பெற முடியும்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக