வெள்ளி, 12 அக்டோபர், 2012

மீண்டு வா மலாலா!


யங்கரவாதிகளின் குண்டுகள் துளைக்கப்பட்ட பாகிஸ்தானின் 14 வயது போராளிச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ-யின் மீண்டெழுந்து வருவதற்கு பாகிஸ்தான் நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், சிறார்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மலாலாவின் மகத்தான வாழ்க்கைக் குறிப்பு இது... பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சிறுமி மலாலாவுக்கு வயது 11. ஸ்வாத் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது தாலிபான்களின் உத்தரவு.
அந்த இக்கட்டானச் சூழலில், மலலா செய்த காரியம் வியப்புக்கு உரியது. அவர் தான் எழுதிய டயரிக் குறிப்புகளை புனைப் பெயர் ஒன்றில் பிபிசி உருது மொழிப் பிரிவுக்கு அனுப்பினார். அதில், பயங்கரவாதிகளால் தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொன்னார். ஸ்வாத் பகுதியின் உண்மை நிலை உலகுக்குத் தெரிந்தது. விளைவு... அப்பகுதியில் இருந்து தாலிபான் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டனர்.
இவையெல்லாம் நடந்தபின்புதான் தெரியும் அந்த டயரிக் குறிப்புகளை அனுப்பி வந்தது சிறுமி மலாலா என்பது. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. போராளிச் சிறுமிக்குத் தீரச் செயலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. மலாலாவின் பெயர், சிறார்களுக்கான சர்வதேச அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
"பெரியவள் ஆகும்போது சட்டம் படித்து அரசியலுக்கு வரவேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்க வேண்டும்." - இதுவே நம் மலாலாவின் கனவு.
இந்தச் சூழலில்தான் மலாலாவைப் பழிவாங்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகள். சிறுமியைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். அதன்படி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தவரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மலாலா படுகாயம் அடைந்தார்.
இப்போது, மலாலா தன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வருவதற்கு பாகிஸ்தான் தேசம் இன்று(12-10-2012)  நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.
மீண்டு வா மலாலா!

நன்றி: என் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக