ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

புத்தகம் அறிமுகம்


''நோய்கள் நீங்க எனிமா'' 
என்னும் மிகவும் பயனுள்ள ஒரு நூல்.

இந்த நூலை எழுதியவர் திரு. Dr. R. சுப்பிரமணியன், இயற்கை மருத்துவர், மருதமலை, கோவை. இவர் 1978 முதல் இயற்கை நலவாழ்வியலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தற்போது பவித்ரா இயற்கை மருத்துவமனை என்ற ஒரு நிறுவனத்தை மருதமலையில் வெற்றிகரமாக நடத்திவருகிறார். நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறைகளை இந்த மருத்துவமனை பல நோயாளிகளுக்கு தந்துள்ளது.

"ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் எனிமாவுக்கும்,இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்றுள்ள எனிமா முறைக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உண்டு. இது முற்றிலும் அகிம்சை முறையில் அமைந்த சிகிச்சை வழி. இதனைப் பல வழிகளில் அன்பர் ஆர். சுப்பிரமணியம் தமது பட்டறிவின் மூலம் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளார். (இந்த கையேடு) இயற்கை நலவாழ்வியல் வாழ்வு வாழ விரும்பும் அன்பர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய ஒன்று. செயற்கை வழி சென்று தனது உடல் நலனைக் கெடுத்துக் கொண்டவர்கள் இயற்கைவழி திரும்ப விரும்பும் போது இது (அஹிம்சை எனிமா முறை) துணை நிற்கும் என்பது உறுதி" என்று இந்நூலின் அணிந்துரையில் மகரிஷி டாக்டர் க.அருணாசலம், (முன்னாள் எம்.எல்.சி, மதுரையில் உள்ள அகில இந்திய காந்தி நினைவு நிதி நிறுவனம் மற்றும் தமிழ் நாடு இயற்கை மருத்துவ சங்கம் தலைவர்) கூறுகிறார். 
பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு. அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது என்பதை உணர்ந்து, மலிவான விலையில் அதற்கான கருவியை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு "எனிமா கேன்" ஒன்றை உருவாக்கிப் பலருக்கும் தந்து உதவி வருகிறார் டாக்டர் திரு. ஆர்.சுப்பிரமணியன்.

"குடலைக் கழுவி உடலை வளர்" என்னும் முதுமொழியை முழு விளக்கத்துடன், அறிவியல் காரணங்களுடனும், படங்களுடனும், நோயாளிகள் வாயினாலயே அவர்கள் எவ்வாறு இந்த எளிமையான முறையை பயன்படுத்தி முழு நலம் பெற்றார்கள் என்பதனையும் இப்புத்தகம் அருமையாக விளக்குகிறது.

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும். சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும். சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும். வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட  முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம். 

இந்த முறையால் பயன் பெற்ற பல ஆயிரக்கணக்கான அன்பர்களில் ஒருவரான திரு வி.தாண்டவராயர் (அட்வகேட், திருவண்ணாமலை), ''கடந்த பதின்மூன்று வருடங்களாக இம்முறையை உபயோகித்து என் எண்பத்தாறாவது வயதில் நோய் நொடியின்றி சுகமாக வாழ்ந்து வருகிறேன். மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து"என்கிறார். கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும் என்கிறார் இந்த அட்வகேட்.

எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள். அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.


வெவ்வேறு மருத்துவ நிபுணர்களால் இம்முறை உலகெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், 1913-ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆச்சார்யா லட்சுமண சர்மா அவர்களால் அஹிம்சா எனிமா என்ற பெயரில் எளிய கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த எனிமா கருவி. இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளராகிய லட்சுமண சர்மா அவர்கள் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பரவச் செய்தவர். இயற்கை மருத்துவம் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் தனது 86 (1965) வயதிலும் இந்தத் துறையில் தளராது உழைத்தவர்.

நோய்கள் நீங்க எனிமா என்னும் டாக்டர் ஆர்.சுப்பிரமணியனின் புத்தகத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் அஹிம்சா எனிமா முறை விளக்கப்படுகிறது.
இயற்கையின் இனிமை.
(மலச்)சிக்கலுக்குச் சில காரணங்கள்.
மலம் செய்யும் மாற்றங்கள்.
எனிமா விளக்கம்.
ஒரே உடனடி நிவாரணி.
எனிமா எடுத்துக் கொள்ளும் முறைகள்.
கிடைக்கும் பலன்கள்.
உடற்கூறு இயலும், எனிமாவும்.
எனிமா வகைகள்.
Vaginal douche.
எனிமா தீர்க்கும் நோய்கள். 
அனுபவங்கள் ஆயிரம் ஆயிரம்.
மேலும் கண்கழுவுதல், மூக்குக் கழுவ்தல் பற்றிய விவரங்களையும், அருகம்புல்லின் மகிமையைப் பற்றியும் இந்நூலின் பிற்சேர்க்கையாக மருத்துவர் ஆர்.சுப்பிரமணியன் அழகாகத் தொகுத்துள்ளார்.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் நாடாமல் இருக்க வேண்டுவோர் பயன்படுத்தவேண்டிய முறைகளைப் பற்றிய இந்த நூல் இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான நல்வாழ்க்கைத் துணைவன்  என்பதில் சற்றும் ஐயமில்லை.

நன்றி: வாழி நலம் சூழ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக