ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நேர்முகத் தேர்வை வெற்றி கொள்ள…




இன்டர்வியூ’ எனப்படும் நேர்முகத் தேர்வு என்பது வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு நிர்வாகம், விண்ணப்பதாரரை மதிப்பீடு செய்வதற்கான ஒரு நேர்முக சந்திப்பு என்று கூறலாம். இது வேலை வாய்ப்பை வழங்குவோர், பெறுவோர் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவான ஒரு வழி. வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனத்திற்குத் தேவை திறமையான நன்னடத்தை கொண்ட நபர். வேலை தேடி வருவோருக்குத் தேவை தன் திறமைக்கு ஈடான சம்பளம் தரக்கூடிய மற்றும் திறமையை மதிக்கும் மனப்பாங்கு கொண்ட நிறுவனம்.
விண்ணப்பதாரர் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்றாலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் அந்த சில நிமிட நேரங்களில் அதனை வெளிப்படுத்துவது அதைவிட முக்கியமானதாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது விண்ணப்பதாரர் பின்பற்றவேண்டிய நுணுக்கமான சில வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டியவை.
அணிந்திருக்கும் ஆடை உடம்பை மிகவும் ஒட்டியோ, கசங்கியோ, கறைபடிந்தோ, உறுத்தும் வண்ணத்திலோ இல்லாமல் சவுகரியமாகவும், அழகாகவும், இதமான வண்ணத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் ‘டக் டக்’ என்று சத்தம் எழுப்பாத காலணிகளை அணிதல் வேண்டும்.
காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற சாதாரண நோய் வந்தாலும் ஒரு வித சோர்வு இருக்கும். அது உங்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்துபவருக்கும் இடையில் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே உடல் நலம் பேணுவது முக்கியம்.
சாதி மதம் சம்பிரதாயங்களை அதாவது திருநீறு, சிலுவை, தாயத்து போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. கொலுசு அணிவதை தவிர்க்கவும். அப்பல் அழும்பல் இல்லாத ஒப்பனை நல்லது. நவநாகரிக உடை அணிவதை விட நாகரிகமான உடை அணிவது நல்லது. தலைவலியை உண்டாக்கும் வகையிலான வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். கைபேசி (மொபைல் போனை) இயக்கத்தை நிறுத்தி விட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்விச் சான்றிதழ்கள், நற்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை தேர்வின் போது பதட்டமின்றி எடுத்துக் காண்பிக்கும் வகையில் முன்னதாக உரிய முறையில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த நிறுவனத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை முடிந்தவரை சேகரித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் நகலையும் கையில் வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது தொடர்பான கேள்விகள் வரும்போது மாற்றிச் சொல்லிவிடாமல் சரியாகச் சொல்ல முடியும்.
நேர்முகத் தேர்வின் போது கவனிக்க வேண்டியவை
அனுமதி பெற்று அறைக்குள் செல்ல வேண்டும். அறைக்குள் செல்லும்போது முகத்தில் உற்சாகள் தைரியம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மென்மையாக புன்னகை இருக்க வேண்டும். அனைவரையும் பார்த்து வணக்கம் கூறி, அமர வேண்டும். தேவையெனில் கைகுலுக்குங்கள். நாற்காலியில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். தைரியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
உங்கள் திறமையை அறிய வல்லுநர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டமில்லாமல் பதிலளிக்க வேண்டும். பதில்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும். ஒரு கேள்விக்கு பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். கவனம் சிதறுவதற்கான சூழல் அங்கிருந்தாலும் கவனம் சிதறாமல் நடந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது சிறிதளவு பயம் இருக்கலாம். தவறில்லை. காரணம் அந்த பயமே நாம் நன்றாக செய்ய வேண்டும் என்றதன் உந்துதலை தரும். அதற்காக வியர்த்து விறுவிறுக்கும்படியான பயம் அனாவசியமானது. தேவையற்றது. ‘பேனல்’ நேர்முகத்தில் மூன்று முதல் 6 பேர் வரை இருப்பார்கள். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு நபரை இன்டர்வியூ செய்வார்கள். மாறாக ‘குரூப்’ நேர்முகத்தில் ஒருவர் பலரை இன்டர்வியூ செய்வார்கள்.
தெரியாததைக் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தெரிந்த கேள்விக்கும் விடையளிக்க இயலாத நிலை ஏற்பட்டு விடக் கூடாது. உங்களைப் பற்றிய, பொது அறிவு சார்ந்த, திறமைகள் குறித்த கேள்விகளே பெரும்பாலும் இடம்பெறும். ‘உங்களைப் பற்றி கூறுஙகள்’ என்றவுடன் பலபேர் தங்கள் பெயர், ஊர், பெற்றோர், குடும்பம் பற்றிய விவரங்களை சொல்ல முற்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது இதை அல்ல. உங்களின் தனித்தன்மை, படிப்பு, அனுபவம், சாதனை, பலம், லட்சியம், ஆளுமை, திறமை, விருப்பம் போன்றவை குறித்த விவரங்களைத்தான்.
சிறப்பான அம்சங்களைச் சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்று இல்லாத ஒன்றைச் சொல்ல முற்படும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். நீங்கள் மிகைப்படுத்தி சொல்கிறீர்கள். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று தேர்வு வல்லுநர்கள் கருதினால் உங்கள் பதிலில் இருந்தே பல கேள்விகளைக் கேட்டு உண்மையைச் சொல்லும்படியும் செய்து விடுவர்.
பதிலைத் தெளிவாக, சுருக்கமாக கூற வேண்டும். எதிர்த்துப் பேசும் விதமாகவோ, கர்வமாகவோ பேசக் கூடாது. உறவுக்காரரே வல்லுநர்களில் ஒருவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. நேர்முகத் தேர்வில் ஒருவரை மட்டுமே தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருக்காமல் அனைவரையும் பார்க்க வேண்டும். நேர்முகம் முடிந்து விடைபெறும் போது நிறுவனத்திடம் நீங்கள் கேட்டறிய வேண்டியது ஏதேனும் இருப்பின் கேட்டு தெரிந்து தெளிவு பெறலாம்.
தொலைபேசி வழி நேர்முகத்தேர்வு(Telephone Interview)
‘டெலிபோன் இன்டர்வியூ’ எனப்படும் தொலைபேசி வழி நேர்முகத் தேர்வு இப்போதைய கால கட்டத்தில் வழக்கமான ஒன்றாகி விட்டது. நேர்முகத் தேர்வைப் போலவே இதனையும் முக்கியமானதாக கருத வேண்டும். இதிலும் கேள்விகள் இடம்பெறும். பிரதான நேர்முகத் தேர்வுக்கு இத்தகைய தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தத் தேர்வை சிறப்பாக கையாளுவதற்கு வழிமுறைகள்…
  • மொபைல் போன் மூலமாக கலந்து கொள்பவர் என்றால் நெட்வொர்க் சிக்னல்கள் நன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
  • பேசுவது போனில்தான் என்றாலும், புன்னகை முகத்தில் இருக்கட்டும். அப்போதுதான் வார்த்தைகளும் இனிமை யாக இருக்கும்.
  • பதற்றம் இன்றி அமைதியாக இருக்க வேண்டும்.
  • பதில்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூற முயலுங்கள்.
  • பதில் தெரியவில்லை என்றால் தெரிய வில்லை என்பதை நிதானமாகவும் அடக்கமாகவும் கூறுங்கள்.
  • நீங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆய்வுகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கும் போது அத்தனைக்கும் உங்களால் மனப்பாடமாக பதில் கூறமுடியாது என்பதால் அந்த விவரங்களை உடனடியாக பார்த்துக் கூறும் வகையில் தயராக வைத்துக் கொள்ளுங்கள்.
  • வட்டார பேச்சு வழக்கில் பதிலளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் பதில் விவாதம் போல் மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பதில்கள் நம்பிக்கையை பிரதிபலிப்ப தாகவும், தோழமையுணர்வோடும் இருப்பது முக்கியம்.
இன்டர்வியூ முடிந்ததும் அதில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு நீங்கள் தந்த பதில்களையும் முடிந்த வரை நினைவுக்கு கொண்டு வந்து ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரியாக பதிலளிக்க முடியாதவற்றிற்கு சரியான பதிலை கண்டறிய வேண்டும். இது உங்களது அடுத்த நேர்முகத் தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மன அழுத்தம் தரக்கூடிய நேர்முகத் தேர்வு (Stress Interview)
சில சமயங்களில் நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் மனதை புண்படுத்துவதாக அமையக் கூடும். இதனை ‘ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ’ என்பர். இத்தகைய தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் வந்திருப்போரின் மனதை காயப்படுத்தும் நோக்கோடு கேட்கப்படுவதில்லை. விண்ணப்ப தாரர் சமநிலை உணர்வு கொண்டவரா (Balanced Emotional) அல்லது மிக உணர்ச்சி வசப்படக்கூடியவரா (Highly Emotional) என்பதை பரிசோதிக்கும் நோக்கில் மட்டுமே கேட்கப்படுகின்றன.
கற்பனையான சம்பவத்தை சொல்லி கேள்விகள் கேட்பர். எடுத்துக் காட்டாக ஒரு கேள்வி. ‘நீங்கள் அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள். முக்கியமான பைல் ஒன்றைஅரை மணி நேரத்திற்குள் நீங்கள் ஆபிசில் ஒப்படைக்க வேண்டும். அச்சமயத்தில் உங்கள் நண்பர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாய் விபத்து ஏற்படுவதை போகும் வழியல் பார்க்கிறீர்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு வேலையை எப்படி கவனிப்பிர்கள்’ என்று கேட்பர். இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க சமயோசித அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
எந்தத் துறையாக இருந்தாலும் பிரச்சனைகள், மன சங்கடங்கள், மன அழுத்தம் போன்றவை இருப்பதென்பது இயல்பே. அத்தகைய தருணங்களில் எவரொருவர் மன உறுதியுடன், புத்திக் கூர்மையுடன் மென்மை யாகச் செயல்படுகிறாரோ அவரையே அனைவரும் விரும்புவர். அத்தகையோரை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
நிறைவாக…
நல்ல மதிப்பெண் வாங்கியவனுக்கு வேலை கிடைப்பதில்லை. தோல்வியுற்று தேர்ச்சி பெற்றவன் ஆணையுடன் வருகிறான். இதற்கு என்ன காரணம்…
நன்றாக படிக்கும் மாணவர்கள் சில பேர் பெரும்பான்மையுடன் நேரத்தை பாடப் புத்தகம் படிப்பதிலேயே செலவிடுகின்றனர். பிறருடன் பேசிப் பழகுவதை நேர விரயம் என்று நினைக்கின்றனர். தனிமை விரும்பியாக மாறி விடுகின்றனர். இதனால் இவர்கள் இழப்பது நண்பர்கள் வட்டத்தை மட்டுமல்ல பல்வேறுபட்ட தகவல்களையும்தான்.
நேர்முகத் தேர்வில் பாடம் தொடர்பான கேள்விக்கு வேகமாகவும் சரியாகவும் பதிலளிக்கும் இவர்களால் நாட்டு நடப்பு கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவதில்லை. ஆகையால் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அடுத்த கேள்விக்கு விடை தெரிந்திருந்த போதிலும் படபடப்பால் பதில் சொல்ல இயலாமல் போய்விடுகிறது. இவர்கள் கூச்ச சுபாவம் உடையோராகவும், சமூகத்தில் சகஜமாக பழகாதவர்களாகவும் இருப்பார்கள்.
ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் வெற்றி அடைந்து விடுகின்றனர். அத்தகையோர் தங்களுக்கு விடை தெரியாவிட்டாலும் தெரியவில்லை என்பதை தைரியமாக ஒப்புக் கொள்வதோடு மட்டுமல்லாது அதற்கான விடையை அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். ஆகவே படிப்பில் மட்டுமல்லாது சமூக உறவிலும் நாட்டம் கொள்வது அத்தியாவசிய தேவை ஆகும்.
இன்று முதலே உங்களை தயார் படுத்திக் கொள்ள துவங்குங்கள் நேர்முகத் தேர்வை வெற்றி கொள்ள!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக