View status

View My Stats

வியாழன், 10 ஜூலை, 2025

மரக்கன்றுகள் இறப்பு சதவீதத்தை குறைப்பது எப்படி?

 மரக்கன்றுகள் இறப்பு சதவீதத்தை குறைப்பது எப்படி?

மர விவசாயம் செய்பவர்களுக்கு மிக முக்கிய பிரச்சினை மரக்கன்று இறப்பு. தரமான மரக்கன்று, மண்ணுக்கேற்ற மரங்கள் எனத்தேர்ந்தெடுத்து நடவு செய்தாலும் மரக்கன்றுகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இறக்கிறது. மரக்கன்று இறப்பை தவிர்க்க கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்து செயல்படுத்தலாம்.


மரக்கன்று நடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை


மரக்கன்றுகளை வாங்கியவுடன் நடவேண்டாம்

மரக்கன்றுகள் நர்சரிகளில் இருந்து வாங்கிச்செல்லும் விவசாயிகள் உடனடியாக அவற்றை நடக்கூடாது. ஒரு நிழற்பான இடத்தில் கன்றுகளை வைத்து, கன்று தெளிர்ச்சியான பின் மண்ணில் நடவேண்டும்.


மரக்கன்றுகளை மரநிழலில் பராமரிக்கவும்

வாங்கிச் செல்லும் மரக்கன்றுகளை மர நிழலில்தான் வைத்து கன்று தெளியும் வரை பராமரிக்க வேண்டும். நிழல் என்பதற்காக காற்றோட்டம் இல்லாத இடங்களிலோ வெய்யில் நுழைய முடியாத ஷெட் போன்றவற்றிலோ வைத்து பராமரிக்க கூடாது.


மரக்கன்றுகளை வெப்பக் காற்றில் உலர விடவேண்டாம்

கன்றுகளை நர்சரியில் இருந்து விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லும் போது கன்றுகள் காற்றால் வாடி விடாமல் பாதுகாக்க வேண்டும். அதிகமாக வாடிவிட்டால் துளிர் வரும் வரை நிழலில் பாதுகாத்து பின்னர் நடவேண்டும்.


கார் டிக்கியில் மரக்கன்றுகளை அதிக நேரம் வைக்கவேண்டாம்

கார் டிக்கியில் மரக்கன்றுகளை அடுக்கி வைத்து எடுத்துச் செல்பவர்கள், அதிலேயே காலை வரை வைத்திருக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கார் டிக்கியில் இருந்து எடுத்து காற்றோட்டமாக நிழலில் அடுக்கி வைக்க வேண்டும்.


மரக்கன்றுகளை சரியாக அடுக்கி தண்ணீர் ஊற்றவும்

நர்சரியில் இருந்து வாங்கிச் செல்லும் கன்றுகளை சரியாக நேராக அடுக்கி வைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும். பாக்கெட் (கன்று) சாய்ந்திருந்தால் பாக்கெட்டில் விடும் தண்ணீர் கன்றுக்கு கிடைக்காமால் கீழே ஓடி விடும், இதனால் கன்று வாடிவிடும்.


மரக்கன்றுகளுக்கு கவனமாக தண்ணீர் கொடுக்கவும்

பராமரிக்கும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் போது மிகவேகமாக ஹோஸ் மூலமாக நேரடியாக அடிக்கக்கூடாது. ஹோசில் ஷவர் பொறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது பூவாளியால் தண்ணீர் கொடுக்கலாம்.


மரக்கன்று நடும்போது கவனிக்க வேண்டியது


கடும் கோடையில் கன்று நடவேண்டாம்

கோடை காலங்ளில் மரக்கன்று நடும்போது, நீர் பற்றாக்குறை மற்றும் வெப்பக்காற்றால் கன்றுகள் இறந்துவிட அதிக வாய்ப்புள்ளது என்பதால் இறப்பு சதவீதம் அதிகரிக்கும்.


மரக்கன்றுகளை மாலையில் நடுவது உகந்தது

மரக் கன்றுகளை மாலையில் நடுவதே உகந்தது. மாலையில் 4 மணி அளவில் நடவு செய்தால் கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு கடுமையான வெய்யிலில் இருந்து கன்றுகள் காக்கப்படும். நன்றாக வெய்யில் அடிக்கும்போது காலையிலோ அல்லது நன்பகலிலோ நடும்போது வெய்யில் காரணமாக இலைகளில் நீர் வற்றிவிடும். மேகமூட்டமான நாட்களில் காலையிலும் நடலாம்.


மிக ஆழமாக குழி தோண்டக்கூடாது

இயந்திர ஆக்கர் மூலம் குழி தோண்டும் போது தேவைக்கு அதிகமாக குழி தோண்டக்கூடாது. ஆழமாக குழி தோண்டுவதால், குழியின் ஆழத்தில் பொளபொளப்பு தன்மை இருப்பதால் செடிக்கு ஊற்றும் தண்ணீர், உள் மண் அதிக பொள பொளப்பு இருப்பதால் நேராக உள்ளே சென்று தேங்கிவிடும். செடியின் வேருக்கு அருகே தண்ணீர் கிடைக்காது.


கன்றுகளை மிக ஆழமாக நடக்கூடாது

கன்றுகளை ஆழமாக நட்டால் அதற்கேற்ப ஆழமான வட்ட பாத்தி போட வேண்டும். கன்றுகளை ஆழமாக நட்டுவிட்டு வட்டப்பாத்தி இல்லை என்றால் கொடுக்கும் நீர் மேலோட்டமாக நிற்கும், வேருக்கு தண்ணீர் செல்லாமல் கன்று இறந்துவிடும். (மரக்கன்றுகளை சரளை மற்றும் மணற்பாங்கான நிலத்தில் சற்று ஆழமாக நடவு செய்வது பரவாயில்லை, தண்ணீர் தானாகவே இறங்கும்.


அனுபவம் இல்லாதவர்கள் நடக்கூடாது

மரக்கன்றுகளை நடும்போது மிககவனமான நடவேண்டும். மரக்கன்று நடவுசெய்து அனுபவம் உள்ள பணியார்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், அவர்கள் சரியான முறையில் நடுவார்கள். மரங்கள் குறித்து அடிப்படை தெளிவில்லாதவர்கள் நடும்போது கன்றுகளை மேலோட்டமாகவோ அல்லது ஆழத்திலோ நடுவார்கள்.


தாய்மண் உடையக் கூடாது

மரக்கன்றுகளை பாலித்தீன் பையில் இருந்து பிரிக்கும் போது, தாய் மண் உடையாமல் பிரிக்க வேண்டும். தாய் மண் உடைந்தால் வேர்கள் அறுந்துவிடும், வேர் தூவிகளும் அறுந்து விடும் அந்த வேர்கள் மீண்டும் வளர ஒரு வாரம் ஆகும் என்பதால் செடிகள் வெய்யிலில் காய்ந்து விடும்.


வேர் சுருண்டிருந்தால் வெட்டிவிட வேண்டும்

சிறிய பைகளில் உள்ள கன்றுகள் மூன்று அடிக்கு மேல் வளர்ந்து விட்டால் அதன் வேர்கள் வளர இடம் இல்லாமல் சுருண்டு வளரும், எனவே அந்த பையின் அடிப்பகுதியை மென்மையாக கிழித்து சுருண்ட வேரை நீட்டிவிட வேண்டும், வேரை நீட்டிவிட முடியவில்லை என்றால் சுருண்ட வேரை வெட்டி விட வேண்டும்.


உயிர் தண்ணீர் உடனே கொடுக்க வேண்டும்

மரக்கன்று நட்டவுடன் உயிர் தண்ணீர் கொடுப்பது அவசியம். மரக்கன்று நட்டபின் பல மணி நேரம் கழித்து உயிர் தண்ணீர் கொடுப்பது தவறு. மாலையில் நட்டுவிட்டு காலையிலோ, காலையில் நட்டுவிட்டு மாலையிலோ உயிர்தண்ணீர் கொடுப்பது சரியல்ல. எந்த சூழ்நிலையிலும் கன்று நட்டவுடன் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.


தேவைப்பட்டால் நிழல் அமைத்தல்

வெய்யில் தாக்கத்தாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ அதிகமாக வாடிப்போய் உள்ள மரக்கன்றுகளுக்கு தற்காலிக நிழல் கொடுப்பது நல்லது. உதாரணமான ஒரு மூங்கில் கூடையை கவிழ்த்து வைக்கலாம், சணல் சாக்கு மூலம் சிறு பந்தல் அமைக்கலாம்.


கன்று நடவுக்கு பின் கவனிக்க வேண்டியவை


நட்ட கன்றுகளை தொடர்ந்து கவனிக்கவும்

கன்று நட்டு முதல் 15 நாட்களுக்கு ஒவ்வொரு கன்றுகளையும் நேரடியாக சென்று பார்ப்பது அவசியம்.


மண்ணின் நீர் தன்மை அறிந்து தண்ணீர் விடவும்

வெய்யிகாலங்களில் மரக்கன்று நடும்போது கன்றுக்கு ஊற்றும் தண்ணீர், அதிக வெப்பத்தால் வேகமாக நீராவியாகிவிடும் என்பதால் வெய்யில் காலங்களில் மரம் நட்டால் தினந்தோறும் தண்ணீர் கொடுப்பது நல்லது. மழைக்காலத்தில் தண்ணீர் தேவையைப் பொறுத்து வாரம் ஒரு முறை கொடுக்கலாம். 


மேலோட்டமாக தண்ணீர்விடுவதை தவிர்க்கவும்

கன்றுகளை ஆழமாக நடவு செய்துவிட்டு, குறைந்த தண்ணீரை மட்டும் மேலோட்டமாக விடுவது தவறு. கன்று நடவு செய்து 3 வருடங்களுக்கு வாரம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். இதை மண்ணின் தன்மைக்கேற்ப இரண்டாக பிரித்தும் கொடுக்கலாம்.


சரியான நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும்

செடி காயாமல், சரியான நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரப்பதம் பார்த்து கொடுக்க வேண்டும். செடிகள் காய்ந்த பின் நீர் கொடுப்பதால் எந்த பயனுமில்லை. சில நேரம் மேலோட்டமான மழையால் மேல் மண் ஈரமிருக்கும். ஆனால் வேருக்கு நீர் இருக்காது, அப்போது தண்ணீர் கொடுப்பது அவசியம்.


நீர் தேங்கக் கூடாது

கன்றுகளை சுற்றி தொடர்ந்து நீர் தேங்கக்கூடாது. நீர் தேங்கும் நிலத்தில் வடிகால் வசதி அவசியம். டெல்டா பகுதிகளில் மரக்கன்று நடும்போது மேட்டுப்பாத்தி எடுத்து நடவேண்டும்.


காற்றுத் தடுப்பான் இருந்தால் நல்லது

வேகமான காற்று மற்றும் வெப்பக்காற்று நாற்றுகளை வளர விடாது. எனவே அதிகமான காற்று அடிக்கும் பகுதிகளில் வேகமாக வளரக்கூடிய காற்று தடுப்பு மரங்களை நடுவது அவசியம்.


களைகளை கட்டுப்படுத்த வேண்டும்

மரக்கன்று நட்டு அவற்றை சரியாக பராமரிக்காமல், களை சேரவிட்டால், களைகள் மரக்கன்றுகளை அழுத்தி அவற்றை வளரவிடாது. எனவே களைகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.


மேற்கண்ட விஷயங்களை மரவிவசாயிகள் தங்கள் கவனத்தில் கொண்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் போது மரக்கன்று இறப்பு சதவீதத்தை குறைக்க முடியும்.


🌳🌊