ஒருமுறை எங்கள் ஞானாசிரியர் மர்ஹும் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள், “கொஞ்ச நாளைக்கு தொழுதுவிட்டு துஆ கேட்காமல் இருக்கப் பழகுங்கள்” என்று சொன்னார்கள்.
தொழுதுவிட்டு துஆ கேட்காமல் இருப்பதா? கேட்டால் என்ன தவறு என்றெல்லாம் யோசித்தேன். ஆனாலும் குரு சொன்ன வார்த்தையை மீறக்கூடாது. எனவே அப்படியே செய்தேன்.
என்ன ஆச்சரியம்! நான் கேட்காமலேயே என் பிரச்சனைகளெல்லாம் தீர ஆரம்பித்தன! கேட்டிருந்தால்கூட அவை தீர கொஞ்சம் காலமாகியிருக்கும்போல. இது எப்படி என்று யோசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
தொழுவது கடமை. கலிமாவுக்குப் பிறகான உடல் ரீதியான முதல் கடமை. கடமையைச் செய்வதற்கு பிரதிபலனை யாராவது எதிர்ப்பார்ப்பார்களா?!
இரண்டு நிமிஷத்தில் ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு இருபது நிமிஷத்துக்கு எனக்கு இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்டுக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் உள்ளது?
தொழுகை என்ன கொடுக்கல் வாங்கல் வணிகமா? இதோபார் இறைவனே, உனக்கான கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன். எனக்கு இன்னின்ன பிரச்சனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நீ தீர்த்துவைக்க வேண்டும். ஏனெனில் நான் இரண்டு ரக்’அத் தொழுதுவிட்டேன்!
அப்படித்தான் நான் அத்தனை ஆண்டுகளாகச் செய்துகொண்டிந்தேன்! தொழுகையை தொழுகைக்காக மட்டும் செய்ததில்லையே! கேட்டால்தான் அல்லாஹ் கொடுப்பானா? உள்ளத்தில் உள்ளதையெல்லாம் அறிந்தவனல்லவா?
அப்படியானால் இறைவனிடம் எப்போதுதான் கேட்பது? மனம் வேதனையில், பிரச்சனையில் இருக்கும்போது பிரத்தியேகமாகக் குறைந்தது இரண்டு ரக்’அத் தொழுது விட்டுக் கேட்கலாமே! தன்னை நோக்கி உயர்த்தப்பட்ட கைகளை வெறும் கையாக அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிமொழியே உள்ளதே!
இது ரொம்ப நுட்பமான உளவியல் ரீதியானது. நான் சொல்வதுதான் சரி என்று சொல்லமாட்டேன். ஆனால் ஹஸ்ரத்மாமா சொன்னபடி செய்து பலன் அடைந்த என் அனுபவம் இது.
இறைவன் கொடுப்பவன். அவன் கொடுப்பான். அவன் கொடுத்தால் நல்லது. ஒருவேளை கொடுக்காவிட்டால் அது நமக்கு இன்னும் நல்லதாக இருக்கும். ஏனெனில் எதை எப்போது கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கக்கூடாது என்று அவன் அறிவான். எனவே நம் தொழுகை தொழுகையாக மட்டும் இருந்தால் சிறப்பு.