View status

View My Stats

செவ்வாய், 25 அக்டோபர், 2016

'விதைப்பந்து மூலம் காடுகளையே உருவாக்கலாம்!' என்ஜினீயரிங் மாணவரின் நம்பிக்கை.

  
ன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், நாமக்கல்லில் உள்ள ராசிபுரத்தைச் சேர்ந்த ஜனகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். பொறியியல் படிப்பை முடித்தாலும், இயற்கை விவசாயம் மற்றும் விதைகளின்மீதே அதிக ஆர்வம் இருந்தது.  இதற்காக தன்னுடைய வீட்டு மாடியில் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். மாடி தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், அழிந்துவரும் செடிகள் என தன்னால் முடிந்த அளவில் செடிகளைப் பாதுகாத்து வருகிறார்.இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான விதைப்பந்துகளை செய்து தரிசு நிலங்களில் வீசி தரிசு நிலங்களை பசுமையடையச் செய்துள்ளார். விடுமுறை நாட்களில் பள்ளிக் குழந்தைகள், நண்பர்கள் என பலருக்கும் விதைப்பந்து செய்வது பற்றி பாடமும் எடுத்துவருகிறார். தாம்பரம் மக்கள் குழுவின் மூலம் சூழலியலாளர்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை ஒழித்து ஏரிகளைப் பாதுகாக்கும் பணிகளையும் செய்து வருகிறார். விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜனகனை சந்தித்து பேசினோம்.
                  
 "என்னுடைய அப்பா, அம்மா இருவரும் அரசு பணியில் இருந்தாலும், எங்கள் தாத்தா, பாட்டி காலம் வரையிலும் விவசாயம் தான் செய்து வந்தோம். சிறு வயதில் நானும் ஆடு, மாடு என இயற்கை சூழலோடு தான் வளர்ந்து வந்தவன் தான். பள்ளியில் படிக்கும் காலங்களில்   இருந்தே இயற்கையின் மீது ஆர்வம் அதிகம். கடந்த ஓர் ஆண்டாக விதைப்பந்து செய்து வருகிறேன். விதைப்பந்திற்கு வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் ஆகியவை சேர்ந்த கலவைதான். இந்த கலவையில மண் 5 பங்கும், மாட்டுச் சாணம் 3 பங்கும், சிறுதானிய விதையானது ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையில் சேர்க்கப்படும் மண் வயல்களில் இருக்கும் மேல்மண்னே போதும், ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளை செய்து நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். ஈரப்பதத்துடன் நேரடியாக வெயிலில் காய வைத்தால் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும்.
                          
     மண், எரு போன்றவை கலந்து விதைப்பந்து செய்வதால் எலி, எறும்பு, பறவைகள் மற்றும் பூச்சிகளால் உள்ளே இருக்கும் விதைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. விதைகள் முளைப்பதற்கு தேவையான சத்தானது நாம் கலந்து இருக்கும் எருவில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். நாம் வீசிய விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் விதைப்பந்து தட்டையாக உருகி விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்கு செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். விதைப்பந்து வீசிய இடத்தில் இதற்கு என்று நாம் எவ்வித பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. விதைப்பந்து செய்வது ஒன்றும் கடினமான செயல் அல்ல. ஒரு முறை கற்றுக் கொடுத்தால் குழந்தைகளே செய்து விடுவார்கள்.
                     
கைசெலவுக்கு மாடித்தோட்டம்:
     வீட்டு சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து வருகிறேன். இயற்கை முறையில் விளைவிப்பது தான் உடல்நலத்துக்கு ஏற்றது. தற்போது தக்காளி, கத்தரி போன்ற காய்கறி செடிகளும், பல்வேறு கீரை வகைகளும் வளர்த்து வருகிறேன். அரிய வகை செடிகளான முள்ளு சீத்தாப்பழம், மகிழம், வில்வம், பனீர், கொய்யா போன்ற செடிகளை வளர்த்து வருகிறேன். இந்த செடிகளை விரைவில் தன்னுடைய பண்ணை நிலத்தில் நட்டு வளர்க்க நிலங்களைச் சீர் செய்து வருகிறேன். பேய்சுரை, பேய்ப்பீர்க்கன், மகுடி சுரை, பல்வேறு வகையான வெண்டை விதை என அழிந்து வரும் பாரம்பரிய விதைகளையும் சேகரித்து வருகிறேன். அரிய வகை மரங்களின் செடிகளை வளர்த்து வருகிறேன். நான் வளர்த்து வரும் அரிய வகை விதைகளை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

நன்றி: விகடன்
 

வியாழன், 6 அக்டோபர், 2016

சேவல் சண்டை:

சேவல் சண்டை:
===============
(((குறிப்பு: இவ் அறிய செய்தித்தொகுப்பு நம் பெரம்பலூர் சேவல் ஆர்வலர் ஒருவரால் நமக்கு தரப்பட்டது. இதன்மூலம் சேவல் சண்டையினை பற்றி பல அறிய விசயங்களை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது வேறு வலைதளங்களில்  எங்கும் கிடைக்காது. முதல் முறையாக பதிவு செய்கின்றோம். நண்பர்களே இதனை அதிகமாக பகிர்த்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும்  படிக்க செய்யுங்கள்.)))

     தமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை,  என வெவ்வேறு இடத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.

பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.

அதனால் அவற்றை  சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான  உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்கு நன்கு தயாராகிய சேவல்களை பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே ரகசியமாக பண்ணை தோட்டங்களில் வைத்து ஒத்திகை நடத்துவார்கள். அப்போதுதான், காணும் பொங்கலுக்கு எந்த இடத்தில் போட்டி நடத்துவது, எத்தனை சேவல்கள் பங்கேற்கும்  என்பது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும்.

சேவல் சண்டையில் இருவகை உண்டு


1. வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை..  

2. கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை

இவ் இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்துவிடும். (படத்தை பார்க்கவும்)


 வெற்றுகால் சேவல் சண்டை:
-------------------------------------------------

 சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும்
சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை  நிகழ்த்தப்படுகிறது. போனவருடம் வெளியான "ஆடுகளம்" படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்கள் ஆகும். அந்தபடத்தை பார்த்தாலே பல விஷயங்கள் நமக்கு புரியும்.

வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டு மஸ்தான உடல்வாகுடன் இருக்கும். சில சேவல்கள் இரும்பை போன்ற கழுத்துடன் இருக்கும். வெப்போர் சேவல்களை அசில்(Asil அல்லது Aseel) என்று அலைகின்றனர் காரணம் "அசில்" என்ற சொல் "அசல்" என்ற சொல்லின் திரிபே ஆகும். அதற்க்கு "சுத்தமான" அல்லது  "கலப்படம் இல்லாத" என்று அர்த்தம். இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும்தான் சண்டை சரியாக செய்யும்.  வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும்.  இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை "முள்" என்று கூறுகின்றனர். இந்த "முள்" அம்பின்  முனைபோன்று கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முல்லை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும். அடி தலையில் பட்டால் மூளை சிதறிவிடும். கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைத்து சேவல்கள் இறப்பது உண்டு.

வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும்  தாக்கும்.   மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.

சண்டைக்கு பலமாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததில இருந்தே பேணி பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.  6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப்படும். . இதை "டப்னி" என்று கூறுவர். இதில் நல்ல சேவல்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் வேண்டாம் என்று விட்டசேவல்களின் அடுத்த தலைமுறையில் எதிர்பார்த்த பண்புகள் வரலாம். அப் பண்புகள் எதிராளியின் கைகளுக்கு போககூடாது  என்று அதனை கொன்றுவிடுவர்.

    சண்டைக்கு தயார்படுத்தும் வகையில் சேவல்களுக்கு கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்களை அரைத்து அதை சுட வைத்து பின்னர் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உரிமையாளர்கள் கொடுக்கின்றனர். இது தவிர பாதாம், பிஸ்தா, பழங்கள், சாரப்பருப்பு, முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவற்றையும் சேவல்களுக்கு கொடுக்கின்றனர்.

சேவலுக்கு சண்டைக்கு 21 நாட்கள்  முன் சிறப்பு தயார் நடக்கும். அப்போது மிகவும் சத்தான உணவுகளுடன் நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சியளிக்கப்படுகின்றது.  பின்பு சண்டைக்கு களம் இறக்கப்படுகின்றது.

போட்டிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சேவல்கள் உயரம் முதலில் பார்க்கப்படுகின்றன. உயரத்திற்கு ஏற்ப சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன.

ஒரு வெப்போர்  சேவல் சுமார்  ஒன்றேமுக்கால்  மணிநேரம் சண்டை போடா வேண்டி இருக்கும். 15 நிமிடங்கள் போர் செய்தபிறகு 15 நிமிடங்களுக்கு இடைவேளை இருக்கும். இவற்றை தண்ணிக்கு எடுப்பது என்று கூறுகின்றனர். அப்போது காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம் கொடுக்கப்படுகின்றது. பின்னர் க்ளுகோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் புதுதேம்புடன் வந்து நிருதப்படுகின்றது.

சண்டை நேரம்: 15நி(சண்டை)+15நி(1 தண்ணி)+15நி(சண்டை)+15நி(2 தண்ணி)+15நி(சண்டை)+15நி(3 தண்ணி)+15நி(சண்டை)= மொத்தம் 1.45  மணி (முழு சண்டை நேரம்)நேரம் ஒரு சண்டை நடைபெறுகின்றது.

நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும்.  இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.

 வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க நாணயம், பணம், கேடையம், மெடல் போன்றவை பரிசாக வழங்கப்படும்.

ஆடுகளம் படத்திற்கு பிறகு இவ்வகை சேவல்களுக்கு மவுசு கூடிவிட்டன.

இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக
ரேஜா(குள்ளமான சேவல்கள்), கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன.

ஜாவா -  பச்சை வெள்ளை வண்ணம்  மற்றும் கருப்பு வால்.
யாகுத் - சிவப்பு
பீலா - மஞ்சள்
தும்மர்- சாம்பல்
சீதா - வண்ண புள்ளிகள்
நூரி - வெள்ளை
கதிர்/காதர் - கருப்பு

இவை மட்டுமின்றி "பேட்டை மாதிரி(பேட்டை போன்று காட்சியளிக்கும்)" "கல்வா(தாடியுடன் இருக்கும்)"  ஆகிய வகைகளும் உள்ளன.

வெப்போர் சேவல்களுடன்   கத்திகால்  சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால்  வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.

இதில்  கத்தி இல்லாமல் சண்டை நடப்பதால் இதனை ஒலிம்பிக்ஸ விட கெடுபிடி உள்ளது.

------------------------------------------------
கத்தி சேவல் சண்டை:
-----------------------------------
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது.
சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோஷம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர். இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. மோதலில் காயமடையும் சேவல்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் அளித்து, தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலம் அல்லது ஜாக்கிகள் வாயில் தண்ணீரை வைத்து சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போல தண்ணீரை ஊதியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன. தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு. கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன..

கத்தி சேவல்களுக்கு வால் நீளமாக இருக்கும்(படத்தை பார்க்கவும்). இவற்றில் பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை...கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும்.

 கழுத்து  மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

  கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடபடுகிறது.

 போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு நடவு போடுதல் என்று பெயர். நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது.

சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையொன்று பார்க்கும் படி இருக்கும். இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர். அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கும்.

இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையொன்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன் உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்துகின்றன. அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர் தம்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர். அதற்கு தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர். ஈரத்துணியால் காயங்களைத் துடைத்து மருந்திடுவர். மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்து களத்தில் விடுவர்.

கத்திகால் சேவல்கள் பெரும்பாலும் எதிர் சேவலின் நெஞ்சுபகுதியை தாக்கும்.. சில நேரங்களில் எதிர் சேவலின் குடல்  சரிந்து இறக்கும் அளவுக்கு தாக்குதல் இருக்கும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில்  கத்தியை பாய்ச்சும்  சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது.

 போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதற்கு “கோச்சை” என்று பெயர்.

சேவல் சண்டை போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி குத்தி பலர் பலியாவதும் உண்டு. ஆதலால் மிகவும் பாதுகாப்புடன் சண்டை விடுவது அவசியம்.
---------------------------------

திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கத்திகட்டு வெப்போர் இரெண்டுமே நடை பெறுகின்றது.

 திருவிழா காலங்களில்  அதிகமாக சண்டைகள் நடைபெறுவது உண்டு . பெண்கள் பொதுவாக பங்கு பெறுவதில்லை இருப்பினும் விதிவிலக்குகளும் உண்டு .

 பல அரிய இன சேவல்கள் இந்த சேவல் போராளிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இச் சேவல்களை வளர்பதே ஒரு பெரிய கவ்ரவமாக கருதப்படுகின்றது. இன்று உலக மக்களுக்கு புரத பற்றாக்குறையினை சரி செய்யும் "ப்ரைலெர் கோழிகள்" இந்த "சண்டை கோழி"  இனத்தையும் "பிற கோழி" இனத்தையும் கலவை செய்ததால் கிடைத்தன. உலகமே  இச்சேவல்களை ஒரு அறிய பொக்கிசமாக பார்கின்றனர். இதன் மூலமாக பல பயனுள்ள  கோழி வகைகள்(ரோட் ஐலண்ட், கார்னிஷ், ப்ரைலெர் etc) ஆராய்ச்சி முலமாக நமக்கு கிடைத்துள்ளன.

"சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கிறது. கிராமங்களில் பொழுது போக்குக்காக இருக்கிற சேவல் சண்டை, நகரங்களில் சூதாக மாறி விடுகிறது.

நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சேவல் சண்டையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சேவல் சண்டையில் ஜெயித்தவன் மட்டுமே ஆண்மை உள்ளவன் என்றும், தோற்றவன் ஆண்மையற்றவன் என்றும் கருதப்படுவார்கள் என்று, மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்' என்கிறார் சேசவல் சண்டைகள் குறித்து ஆய்வு செய்து வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சேவல் சண்டை தமிழ்நாட்டின் தனி அடையாளம்
 இந்த கோழிகள் தமிழனின்  வீரத்தையும், பாரம்பரியத்தை, பெருமையையும் , வரலாற்றையும்  பறைசாற்றுகின்றன. சேவல் சண்டையை  பற்றியா குறிப்பு  சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

தமிழ்நாடு சேவல் சண்டை 2,000 ஆண்டுகள் பழமையானது . மனு நீதி  சாஸ்திரம் , காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. இது "64 கலைகளுள்"  ஒன்று என ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு அறிய விஷயமான  சண்டை சேவல்களையும், இக்கலையையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.

~ Kumaresh