புதன், 14 அக்டோபர், 2015

செப்பு பாத்திரம் தண்ணீர் பாதுகாப்பு....


செப்பு பாத்திரம் தண்ணீர் பாதுகாப்பு....-11391403_411545802364760_7190824566523645233_n.jpg
குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 


செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 


பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.

* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.

* உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.


Read more: http://www.penmai.com/forums/nature-cure/96831-a.html#ixzz3oXcRZhY6

திங்கள், 12 அக்டோபர், 2015

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

குடிக்க மழை நீர் - 100 வயது இளைஞரின் ரகசியம்!

கவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவியலின் அத்தனை விஷயங்களிலும் அதீத வளர்ச்சியடைந்திருக் கிறோம். ஒருவகையில் மனித வாழ்க்கையில் அது பலப்பல முயற்சிகளுக்கு வித்தாக இருந்தாலும் பாதகமான சில விஷயங்களும் அதில் உண்டு. 

துரித உணவுகள், உடலுழைப்பு குறைந்துபோனது, பரபரப்பான வாழ்க்கைப் பயணம் மற்றும் எதிலும் விரைவை எதிர்பார்க்கும் இயல்பான குணம் இவற்றால் மனிதன் எல்லாவற்றையும் பெற்றாலும், அடிப்படையான  ஆயுட்காலத்தை இழக்கவேண்டிதான் உள்ளது.  மனிதனின் சராசரி வயது குறைந்துவிட்ட இக்காலத்தில், 5வது தலைமுறையுடன் தன் 100வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த எஸ்.ஏ.நடராஜன்.
நூற்றாண்டை சந்திக்கும் பாக்கியம் பெற்ற அவரது 100வது பிறந்தநாள் விழா, உறவினர்கள் புடைசூழ இன்று சிறப்பாக நடந்தது.  நடராஜன்  முன்னாள் கால்பந்தாட்ட வீரரும்கூட. 

பருப்பு வியாபாரியான நடராஜனுக்கு பரமேஸ்வரி (88) என்ற மனைவியும்,  வன்னியராஜன், ஜெயகர், ராம நாதன், தயானந்தன் என 4 மகன்களும்,  தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 5- வது தலைமுறை கண்டுள்ள நடராஜன்- பரமேஸ்வரி குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என 69 பேர் அதிசயிக்க வைக்கின்றனர்.

விருதுநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், நூற்றாண்டைக் கடந்த பூரிப்புடன் இருந்தார் 100 வயது இளைஞர் நடராஜன்.
“ சின்ன வயசிலே கால்பந்தாட்ட வீரனாக இருந்ததால் உடல் மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டேன். சைவ உணவு மட்டுமே அளவாக எடுத்துக்கொள்கிறேன்” என்கிற நடராஜன், தன் மனைவி பரமேஸ்வரியுடன் தனியே வசிக்கிறார். இந்த வயதிலும் மனைவியின் கையால் சமைக்கும் உணவுகளையே உண்கிறார் மனிதர்.

“இப்போதும் தினமும் அதிகாலையில் எழுந்து 3 கி.மீட்டர் துாரம் நடைபயிற்சி செல்கிறேன். மழை நீரை தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னர் அவைகளை செப்புக் குடங்களில் ஊற்றிவைத்து, அதை மட்டுமே எப்போதும் குடிக்கப் பயன்படுத்துவேன்.
வீட்டில் மட்டுமின்றி வெளியூர் சென்றாலும் மழைநீரையே கையோடு எடுத்துச் செல்வேன்” என்கிற நடராஜன், இன்று வரையிலும் அதை விடாமல் கடைபிடிப்பதாகக் கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். 

நூறுக்குள் வயது இருந்தால் நூறாண்டு வாழ்க என வாழ்த்தலாம். நறை தொட்டுவிட்ட நடராஜனை என்ன சொல்லி வாழ்த்த... 

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!

நன்றி - விகடன்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உழவும் பசுவும் ஒழிந்த கதை!

உழவும் பசுவும் ஒழிந்த கதை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான பசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

வியாழன், 8 அக்டோபர், 2015

விஷயங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..