செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இவரைப் பற்றி ஆச்சர்யமான தகவல்








உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள் 

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க 
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது 

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை : 

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது 

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் 

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........

திங்கள், 14 செப்டம்பர், 2015

தினசரி வருமானத்துக்கு ‘நாட்டு’ எலுமிச்சை…

திருநெல்வேலிக்கு அல்வா என்றால், புளியங்குடிக்கு ‘எலுமிச்சை’தான் அடையாளம். அந்தளவுக்கு இந்த ஊரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதிகளில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை எலுமிச்சை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. கரும்பு, நெல் ஆகியவையும் இப்பகுதிகளில் விளைந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையையே இங்கு பணப்பயிராகக் கருதுகிறார்கள். எலுமிச்சைக் கன்றுகளை குழந்தைகளைப் போல பராமரிக்கும் இப்பகுதி விவசாயிகள், எலுமிச்சைத் தோப்புக்குள் செருப்புகூட அணிந்து செல்வதில்லை. அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விரத நாட்களில் எலுமிச்சைத் தோப்புக்கு சாம்பிராணி காட்டும் அளவுக்கு, தெய்வமாகவும் போற்றுகிறார்கள்!
லெமன் சிட்டி!
இப்பகுதியின் ‘முன்னோடி இயற்கை விவசாயி’ அந்தோணிசாமியிடம் எலுமிச்சை பற்றிப் பேசினோம். ”இந்த ஏரியாவுக்கு புளியங்குடிதான் முக்கியமான எலுமிச்சைச் சந்தை. கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் தூரத்துல இருந்துகூட இங்க எலுமிச்சை வரும். ராஜபாளையம், சுரண்டை, கடையம், அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, பண்பொழி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் கோவில்பட்டினு கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் ஏக்கர்ல நாட்டு எலுமிச்சை சாகுபடி நடக்குது. இதுல, புளியங்குடியில் மட்டும் பத்தாயிரம் ஏக்கர்ல நடக்குது. அதனாலதான், இந்த ஊரை ‘லெமன்சிட்டி’ங்கிறாங்க. மத்த ஊர் பழங்களைவிட இந்த ஊர் எலுமிச்சைக்கு நல்ல கிராக்கி இருக்கு. இது, அளவுல பெரிசா இருக்கும். அதிக சாறு வரும். பறிச்சதுல இருந்து 5 நாள் கழிச்சுதான் பழுக்கும். ரொம்ப நாள் வரை தாக்குப் பிடிக்கும். அதனால் போக்குவரத்துக்கும், வெச்சு விக்கிறதுக்கும் ஏதுவா இருக்கும். இதெல்லாம்தான் இத்தனை கிராக்கி இருக்கிறதுக்குக் காரணம்” என்ற அந்தோணிசாமி, சாகுபடி செய்யும் முறையைச் சொன்னார். அது இங்கே பாடமாக…
20 அடி இடைவெளி!
”20 அடி இடைவெளியில் 3 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் தோண்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 90 முதல் 100 குழிகள் வரை தோண்டலாம். ஒவ்வொரு குழியிலும்
15 கிலோ திருகுக்கள்ளியைப் போட்டு, அதன் மீது 20 கிலோ கொழிஞ்சி, ஆவாரை இலைகளைப் போட வேண்டும். பிறகு, 30 கிலோ தொழுவுரம், 2 கிலோ வேப்பங்கொட்டை, 1 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு, 25 நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும் (கொழிஞ்சி, ஆவாரை, திருகுக்கள்ளி போடமுடியாதவர்கள்… தொழுவுரம், மண்புழு உரம் மட்டும் போடலாம்). பிறகு, குழியின் நடுவில் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டி எலுமிச்சை நாற்றை நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தால், மகசூல் சீராக இருக்கும். கன்று நடவு செய்த 10 நாட்கள் வரை, கன்றின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்துவிட வேண்டும். போதுமான அளவுக்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
15 ஆண்டுகள் வருமானம்!
40 முதல் 45 நாட்களில் புதுத் தளிர்கள் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கலாம். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளிப்பான் மூலமோ அல்லது வேப்பிலை மூலமோ செடிகளின் மீது தெளித்தால், வண்ணத் துப்பூச்சிகள் வராது. 20 நாட்கள் இடைவெளியில் இக்கரைசலைத் தொடர்ந்து தெளிக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை மரத்தின் மூட்டில் இருந்து, ஓர் அடி தள்ளி 20 கிலோ ஆடு அல்லது மாட்டு எரு, 1 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து வைக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. இரண்டாம் ஆண்டில் இருந்து காய்கள் காய்க்கத் தொடங்கும். தொடர்ந்து, 15 ஆண்டுகள் வரை காய்க்கும்.’
சாகுபடிப் பாடம் முடித்த அந்தோணிசாமி, ”ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு சராசரியா 300 காய் வரை கிடைக்கும். எங்க ஊர்லயே சந்தை இருக்கிறதால, விற்பனைக்குப் பிரச்னையில்லை. சொல்லப்போனா, எலுமிச்சைக்குனு தனி மார்க்கெட் இங்கதான் இருக்கு. தமிழ்நாடு மட்டுமில்லாம ஆந்திரா, கர்நாடகா, கேரளானு இங்கிருந்து எலுமிச்சை போகுது. திருவனந்தபுரத்துல இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. பழத்தோட அடிப்படையில மூன்று ரகமா பிரிச்சு விலை வெப்பாங்க” என்றவர், நம்மை எலுமிச்சைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
சைக்கிள், பைக், தள்ளுவண்டி என மூட்டை, மூட்டையாக எலுமிச்சை வந்து இறங்கிக்கொண்டே இருக்க… திரும்பியப் பக்கமெல்லாம் எலுமிச்சை ஏலம் நடந்து கொண்டேயிருக்க… எலுமிச்சை மார்க்கெட் துணைத்தலைவர் திருமலைசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம்.
”முப்பது வருஷத்துக்கு முன்ன எல்லாரோட வீட்டுலயும், தோட்டத்துலயும் எலுமிச்சை காய்க்கும். வீடு வீடா போயி, ‘எலுமிச்சை இருக்கா?’னு கேட்டு, பேரம் பேசி மூடை போடுவோம். அதுல நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. அப்பறம்தான், புளியங்குடி மெயின் பஜார்ல எலுமிச்சைக்காக சந்தை ஏற்படுத்தலாம்னு விவசாயிகள் கேட்டாங்க. 89-ம் வருஷம், சின்ன அளவுல கூரை செட் போட்டு ஆரம்பிச்சோம். அப்பறம் 30 கடைகள் வந்துருச்சு. இங்க திறந்தவெளி ஏலம்தான்.
மூடை கட்டி வர்ற எலுமிச்சைகளைக் கொட்டி பரப்பி ஏலம் விடுவோம். பருமன், நிறத்தை வெச்சு விலை கேப்பாங்க. நூத்துக்கு பத்து காய் சேர்த்து மூடை பிடிக்கணும். அப்பதான், பொட்டுக்காய், சொத்தைக்காய், வெம்பியக்காய்னு கழிக் கிறப்போ சரியா இருக்கும். ஏலம் விட்டதும் காய்களை எண்ணித்தான் மூடை போடுவோம். எடை கணக்குலயும் காய் ஏலம் விடலாம்.
சனிக்கிழமை தவிர, வாரம் முழுக்க சந்தை உண்டு. சாதாரணமா காலையில 11 மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் 3 மணிக்கு ஏலம் முடியும். சீசன் சமயங்கள்ல சாயங்காலம் 5 மணி வரைக்கும்கூட நடக்கும். ஜனவரி மாசத்துல இருந்து ஜூன் மாசம் வரைக்கும் சீசன். இதுல, ஏப்ரல் கடைசியில இருந்து, ஜூன் வரைக்கும் உச்சக்கட்ட சீசன். இந்த சமயத்துல, ஒரு நாளைக்கு 80 லாரி லோடு வரை (8 லட்சம் கிலோ அளவு) வரும். மத்த சமயங்கள்ல தினமும் 20 ஆயிரம் கிலோ வரத்து இருக்கும்” என்றார்.
புளியங்குடி, முகைதீன் அப்துல் காதர், ”30 வருசமா 6 ஏக்கர்ல எலுமிச்சை விவசாயம் செய்றேன். மொத்தம் 600 மரம் இருக்குது. சராசரியா ஒரு நாளைக்கு 120 கிலோவுல இருந்து 180 கிலோ வரை சந்தைக்குக் கொண்டு வருவேன். ஒரு கிலோ 50 ரூபாய்ல இருந்து, 60 ரூபாய் வரை விலை போகுது. தினமும் குறைஞ்சது 6 ஆயிரம் ரூபாய்க்குக் காய் போடுவேன். இதுல பத்து சதவிகிதம் கமிஷன் போக 5 ஆயிரத்து 400 ரூபாய் கையில கிடைக்கும்” என்றார்.
திருவேட்டைநல்லூர், பெருமாள், ”நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே எலுமிச்சை சாகுபடிதான். 4 ஏக்கர்ல எலுமிச்சை இருக்கு. நான், எண்ணிக்கை முறையிலதான் விற்பனை செய்றேன். சாதாரண சமயத்துல 1 ரூபாய்ல இருந்து, 1 ரூபாய் 50 காசு வரைக்கும் ஒரு பழத்துக்கு விலை கிடைக்கும். சீசன் சமயத்துல 3 ரூபாய்ல இருந்து, 5 ரூபாய் வரை கிடைக்கும். போன சீசன்ல 7 ரூபாய் அளவுக்கு விலை கிடைச்சுது. எடையைவிட எண்ணிக்கை முறைதான் லாபமா இருக்கு. தினசரி வருமானம், உடனடிப் பணம், திறந்தவெளி ஏலம், அதனால விக்கிறவர், வாங்குறவர் ரெண்டு பேருக்குமே நஷ்டம் இல்லை” என்றார்.
தொடர்புக்கு,
திருமலைச்சாமி, செல்போன்: 94435-55936, அந்தோணிசாமி, செல்போன்: 99429-79141 முகைதீன் அப்துல்காதர், செல்போன்: 99409-26911 பெருமாள், செல்போன்: 94424-90253

சேதி கேட்டீங்களா!
சொட்டு நீர்க்குழாய் அடைப்புக்குத் தீர்வு!
சொட்டு நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை சொட்டு நீர்க் குழாய்களில் உப்பு அடைப்பு. இதை சரி செய்வதற்கு சொட்டு நீர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் ‘சல்பியூரிக் ஆசிட்’டைதான் பயன்படுத்தச் சொல்கின்றனர். அந்த ஆசிட் பயிர்களில் படும்போது, பயிர் கருகி போய்விடுகிறது. இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ…ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கும் சொட்டு நீர்க் குழாய்களுக்கு 20 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரைக் கலந்துகொள்ள வேண்டும். பாசனம் செய்து முடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, உரம் செலுத்தும் குழாய் வழியாக இந்தக் கரைசலைச் செலுத்தி, ஐந்து நிமிடம் மட்டும் ஓடவிட்டு மோட்டரை நிறுத்திவிட வேண்டும். மீண்டும் 24 மணி நேர இடைவெளி கொடுத்து, எல்லா கேட் வால்வுகளையும்  திறந்துவிட்டு பாசனம் செய்தால், சொட்டு நீர்க் குழாயில் இருக்கும் அடைப்புகள்  முழுக்க வெளியேறிவிடும்.

வியாழன், 3 செப்டம்பர், 2015

இதெல்லாம் இருந்தா... நீங்களும் பணக்காரர்தான்..!


ணம். இன்றைய அத்தியாவசிய தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.  எல்லோரிடமும் அது இருக்கிறது. ஆனால் எல்லோரையும் பணக்காரர் என்று சொல்வதில்லையே, ஏன்?

அதோ போறார் பாரு, பெரிய பணக்காரரு...! என்று சொல்லும்போது நாம் ஏன் பணக்காரர் என்று அழைக்கப்படுவதில்லை என்று யோசித்திருக்கிறோமா? இல்லை. அது காலம் காலமாய் யாரோ ஒருவருக்கு எழுதி வைத்தது போல், நாமெல்லாம் எங்கே பணக்காரர் ஆவது என்ற மனநிலையிலேயே எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதை விட முக்கியமாகப் பலருக்கு பணக்காரர்கள் மீதிருக்கும் தவறான புரிதலும் ஒரு காரணம்.

இப்படி நினைக்கும்  உங்களைப் பணக்காரராக மாற்றும் அட்டகாசமான சில குணாதிசயங்கள் உள்ளன. இவற்றை வளர்த்துக்கொண்டால் நீங்களும் பெரிய பணக்காரர் ஆகலாம்.

1. காசு... பணம்... துட்டு... மணி

பணம் பற்றி தெளிவான புரிதல் இருந்தாலே போதும், அந்தப் புள்ளியிலேயே நீங்கள் பணக்காரர் ஆகிவிடுவீர்கள். பணம், வாங்க விற்க உதவும் ஒரு ஊடகம். ஆனால் அது பார்க்கப்படும் விதமே அதற்கான மதிப்பாக மாறுகிறது. முதலில் பணம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.  
 
2. ஆசையும், விருப்பமும்

அத்தனைக்கும் ஆசைப்படு என்பார்கள். உங்கள் ஆசை பணக்காரனாக வேண்டும் என்றில்லாமல். அது தரும் மதிப்பின் மீதான ஆசையாக இருக்கட்டும். ஒரு விஷயத்தை விரும்பினாலொழிய உங்களால் அதில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. பணக்காரர்கள் பொதுவாக தாங்கள் விரும்பியதையே செய்வார்கள். விரும்பிய ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அதில் கிடைக்கும் சுதந்திரம் மட்டுமல்லாது அதன் மீதான நம்பிக்கையையும் மேலும் வளர்க்கும். பிடிக்காத வேலையையும் செய்பவர்கள் சாமானியர்கள், பிடித்ததை மட்டுமே செய்பவர்கள் பணக்கார்கள்.
 
3. உழைப்பும் தெளிவான அறிவும்

பணத்தைப் பெருக்க, ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். தாங்கள் இயங்கும் துறையில் தெளிவான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவும், உழைப்பும், வாய்ப்புகளுடன் ஒன்று சேரும்போதே நம்மால் வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்.
 
4. கையாள்வதும், பெருக்குவதும்:

கடுமையாக உழைத்து கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து விட்டீர்கள்... இப்போது நீங்கள் பணக்காரரா? என்றால், இல்லை. அந்தப் பணத்தைக் கையாளத் தெரிந்திருந்தால் மட்டுமே நீங்கள் பணக்காரர். அதாவது பணத்தை சரியான இடத்தில் சரியான அளவில் முதலீடு செய்யவும் செலவு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் சிறு சேமிப்பும் அவசியம். ஒரு பணக்காரன் சாதாரண சாமான்யனிடமிருந்து இங்குதான் வேறுபடுகிறான். 

5. எண்கள் மட்டுமே இலக்கல்ல:

பணக்காரர்கள் என்றாலே, எப்போதும் பணத்தை எண்ணிக்கொண்டும், தங்கள் நிகர சொத்து மதிப்பில் உள்ள பூஜியங்களைப் பார்த்துக்கொண்டும் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு. எண்களையெல்லாம் தாண்டி சிந்திப்பவர்களால் மட்டுமே வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். இல்லையென்றால் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். அதனால் தொடர்ந்து தங்களுடைய அறிவை, பார்வையை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

6. பயத்தை விட்டு தள்ளுங்கள்

பயம், எல்லோருக்கும் இருக்கும். நாம் என்னதான் வெளியில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்தாலும் நாம் எதற்கு பயப்படுகிறோம் என்பதை நன்கு தெரிந்திருப்போம். அந்தப் பயத்தை மூட்டை கட்டி விட்டு இலட்சிய பயணத்தைத் தொடருங்கள். பயம் ஒருபோதும் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கான தன்னம்பிக்கையை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
 
7. தெளிவான உறுதியான இலக்கு

இலக்கு தெளிவாக இருந்தால் மட்டுமே அதை நோக்கிய சரியான பாதையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். பணக்காரர்கள் எப்போதும் உறுதியான தெளிவான இலக்குகளை வைத்து கொள்வார்கள். அந்த இலக்கை அடையும் எண்ணம் மட்டுமே அவர்கள் மனதில் ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவார்கள். இலக்கை நிர்ணயித்து விட்டு, அதை மறந்துவிடுபவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
 
8. கொஞ்சம் சுயநலம்

இலட்சியப் பயணத்தை நோக்கி செல்பவர்கள் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். எல்லோருக்காகவும் கவலைப்பட்டால், இலக்கை அடைவது தாமதமாகலாம். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு தைரியமாக 'நோ' சொல்லி விடுங்கள். உங்களுடைய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். பிறர் கூறுவதையெல்லாம் எண்ணி கவலை படாமல், இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருங்கள். 
 
9. உதவி செய்யும் முன்

பணம் கையில் இருந்தாலே, கூட்டம் கூடிவிடும். கடன், அன்பளிப்பு, பரிசு என பல வகைகளில் பணத்தைக் கேட்டு வரிசையில் நிற்பார்கள். அவர்களில் எல்லோருமே நியாயமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் வள்ளல் போல வாரி வழங்காமல், கொஞ்சம் யோசித்து சரியான பயனாளியை அடையாளம் கண்டு, அதற்கு பின் உதவி செய்யுங்கள். 
 
10. ஆரோக்கியம் மிக முக்கியம்

உயிரோடு இருந்தால்தான் பணத்தை சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தை அனுபவிக்கவும் முடியும். பணம், பணம் என்று உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டால் அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். பல பணக்காரர்கள் இதில் தெளிவாக இருப்பார்கள். பீச், பார்க்குகளில் உடற்பயிற்சி செய்யும் பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் தொப்பைக்காக மட்டும் ஓடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கல்விக்கும், ஆரோக்கியத்திற்கும் செலவு செய்ய தயங்கவே கூடாது.

11. குடும்பமும் ஒரு கண்

ஒரு சமூகம் குடும்பத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஆகையால் எவ்வளவு பெரிய பணக்காரர் என்றாலும் பெரிய தொழில் என்றாலும் குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிட வேண்டும். உயிர் வாழ்வாதற்கான ஆதார பலமே நம் அன்புக்குரியவர்களிடம் தான் இருக்கிறது. முன்னேறி செல்வதற்கு அவர்களுடைய அன்பும் ஊக்கமும் மகத்தான ஆற்றலை தரும். 
பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டுகொள்வதில்லை என்பதும் பொய்யான கற்பனை. பல தந்தைகளின் சொத்துக்களையும் தொழில்களையும் அவர்களது பிள்ளைகள் தான் வழிநடத்துகிறார்கள் என்பதை மறுந்து விடாதீர்கள்.