வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பிரதோஷ வரலாறு!

பிரதோஷ வரலாறு!

(சக்தி விகடன்: 29.01.2006)
நற்பலன்கள் அள்ளித்தரும் நந்திதேவர் வழிபாடு!
பிரதோஷ வேளையில்  சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம்! வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.
ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். 'ஓம் நமசிவாய...’, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள்.
சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்?  
கேட்டால், ''இது செவிட்டு சாமிங்க! அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம்!'' என்றும், ''இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்!'' என்றும் சொல்வார்கள். உண்மைதான்! நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும்! - இதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட தவறான அணுகுமுறைகள். இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே!
ஒருவரிடம் நாம் மந்திர உபதேசம் பெற்றால், அந்த மந்திரத்தை தினந்தோறும் இவ்வளவு தடவை (குருநாதர் சொன்னபடி) சொல்லி உருவேற்ற வேண்டும். அப்படி நம்மால் செய்ய முடியாதபோது, நமக்கு விபரீத பலன்கள் விளைய வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரு பசு மாட்டின் காதில் ஓத வேண்டும். இதனால் மந்திரத்தைச் சொல்லாததால் உண்டாகும் விபரீதப் பலன்கள் நம்மைத் தீண்டாது. மிகவும் நுட்பமான தகவல் இது.
இந்த உண்மை தெரியாமல் யாரோ - எப்படியோ ஆரம்பித்து வைத்த (கோயிலில் நந்தியின் காதுகளில் சொல்லும்) பழக்கம் இன்று மக்களிடையே பரவி விட்டது. உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது! கோயிலில் உள்ள நந்தியின் உருவத்தை நாம், நம் கைகளால் தொடக் கூடாது. அதற்கென உரியவர்கள் (குருக்கள்) மட்டுமே தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்ய வேண்டும். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கு, மந்திர உபதேசம் பெறுவது பற்றி சில முக்கியமான தகவல்கள்:
ஒரு குருவிடம் இருந்து ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் பெற வேண்டும். மந்திர உபதேசம் செய்யும் குருவுக்கு அந்த மந்திரம் ஸித்தியாகி இருக்க வேண்டும்.
''எனக்கு ஏழு தடவை மந்திர உபதேசம் ஆகியிருக்கு!'' என்பது போல, பலரிடம் இருந்து பல விதமான மந்திரங்களை உபதேசம் பெறக் கூடாது!
நாம் பெற்ற மந்திர உபதேசத்தைத் தினந்தோறும் உரிய முறைப்படி உச்சரித்து வந்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மந்திரம் நமக்கு ஸித்தியாகும். பலன் அளிக்கும். 'மந்திர ஸித்தி கிடைத்து விட்டதே!’ என்று அடுத்த மந்திர உபதேசத்துக்குத் தாவக் கூடாது.
ஆனால், நம் மனம் சும்மா இருக்காது. அடுத்த மந்திரத்தை நோக்கித் தாவவே செய்யும். அப்போது, நமக்கு மந்திர உபதேசம் செய்த குருவை நாடி, அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்பதே நல்லது.
எந்த மந்திரமாக இருந்தாலும் அது, விடாமுயற்சியோடு பரிபக்குவமாகத் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு மட்டுமே ஸித்தி அளிக்கும்.
இனி பிரதோஷ வரலாறு.
பிரதோஷம் வந்த விதம்
தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.
தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ''பிடி, சாபம்!'' என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.
தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.
யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.
வெடித்தார் துர்வாசர். ''தேவேந்திரா! அவ்வளவு ஆணவமா உனக்கு? வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்!'' என சாபம் கொடுத்தார்.
உத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.
திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.
சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.
''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! உமையருபாகா! கங்காதரா! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்!'' என்று வேண்டினர்.
சிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ''கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.
இந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், '''சுந்தரா! அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா!’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்!'' என அழகாக நயம்படக் கூறுவார்.
விஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆல(க)£ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், 'ஆல(க)£ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு '(திரு)நீலகண்டர்’, 'ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.
(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, 'அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது!’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)
அனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.
மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே 'பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.
ரஜனீ-பிரதோஷம்
பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரதோஷங்கள் ஐந்து!
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.
பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 'சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.
நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்?
குழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.
''சிலாதா! என்ன வேண்டும் கேள்!'' என்றார் சிவபெருமான்.
''தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!'' _ சிலாதர்.
''என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு!'' என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.
இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே 'நந்தி’.
சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.
தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).
ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.
அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ''ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார்.
உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!'' என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து,  ''இதை முகர்ந்து பார்!'' என்றார்.
நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.
உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ''ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!'' என வேண்டினாள்.
''உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான்.
அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.
அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

Undo sending your mail


If you make a typo or regret sending a message, you can undo the action by enabling the "Undo send" lab. This lab will give you the option to take back a message you just sent.
To enable the lab:
  1. Click the  gear in the top right.
  2. Select Settings.
  3. Click the Labs tab.
  4. Find the "Undo Send" lab and select the Enable radio button.
  5. Click Save Changes at the bottom of the page.
Select the amount of time you have to undo sending a message by clicking the gear icon , and finding the "Undo Send:" section in the General tab of your Settings.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஒரு ஏக்கர்... 100 நாள்... 2,00,000

நல்வருமானம் தரும் நன்னீர் இறால்!
கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்.
இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.
100 நாட்களில் வருமானம்!
''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சூரிய வெளிச்சம் அவசியம்!
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது,  1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.
நான்கு வேளைகளில் தீவனம்!
குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,
5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.
தீவனம்... கவனம்!  
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.
38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.
ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன் நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.

 ஆலோசனை தேவையா?
தஞ்சாவூரில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இறால் வளர்ப்புப் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தேவைப்படுவோர் இந்த மையத்தை அணுகலாம். தொடர்புக்கு, தொலைபேசி: 04362-291625, செல்போன்: 99441-61466
 நெற்பயிரைக் காப்பாற்றிய இறால் தண்ணீர்!
கடந்த ஆண்டின் கடும் வறட்சியிலும்கூட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பலருடைய நிலங்களில் நெற்பயிர் செழித்து வளர்ந்து, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இதற்கும் கைகொடுத்திருக்கிறது... இறால் பண்ணை. இதைப் பற்றி பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ''போன சம்பா பருவத்துல 7 ஏக்கர் நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். கடுமையான வறட்சியால பயிர்கள் கருக ஆரம்பிச்சிடுச்சு. அப்போ, இந்த இறால் குட்டையில் இருந்து கொடுத்த தண்ணீரைப் பாய்ச்சித்தான் என்னோட பயிரைக் காப்பாத்தினேன். இறாலோட கழிவும், சத்தான தீவனமும் தண்ணீர்ல இருந்ததால, பயிர்கள் நல்லா செழிப்பாகி, கதிர்களும் நல்லா வாளிப்பா வந்துச்சு. இந்த கிராமத்துல நிறைய பேரோட பயிரை இந்த இறால் குட்டை தண்ணிதான் காப்பாத்திக் கொடுத்துச்சு'' என நெகிழ்ச்சியோடு சொன்னார்.  
 தொடர்புக்கு, 
கடல் பொருள் ஏற்றுமதி வாரியம் சென்னை.
தொலைபேசி: 044-26269192.சீனிவாசன்
செல்போன்: 90434-11312