ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை






மேலே


லட்சக் களக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி. 30 நாட்களில் வருமானம்!
“ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிற ‘நாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
மாதம் 10 ஆயிரம்!
என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
குறைந்த நாளில் அதிக எடை!
‘நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.
பழைய பண்ணைகளே போதும்!
“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும்.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.
இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!
முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!
காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.
காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.
கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.
விற்பனையில் வில்லங்கமில்லை
அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ‘நாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.
தொடர்புக்கு:
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின அறிவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் – 637002
தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,
அய்யம் பாளையம் கிராமம்,
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

குழந்தை அழுகையின் குவா குவாவிற்கு என்ன அர்த்தம்?

Temple images
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா? என்றது.பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்! என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. க்வா க்வா என்று அழ ஆரம்பித்து விட்டது. க்வா க்வா என்றால், எங்கே எங்கே என்று அர்த்தம். இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே? என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. க்வா க்வா என்பது தான் இப்போது குவா குவா ஆகியிருக்கிறது. மீண்டும் க்வா க்வா போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!

சனி, 1 டிசம்பர், 2012

மின்வெட்டுக்கு டாட்டா... ஜொலிக்க வைக்கும் சோலார்..!


நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 'மூன்று மணி நேர மின்வெட்டு' என ஆரம்பித்தது... தற்போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்பதையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதுமே இத்தகையத் தாறுமாறான மின்வெட்டு நீடிப்பதால்... விவசாயம், வணிக நிறுவனங்கள், வீடுகள் என எந்தப் பயன்பாட்டுக்குமே மின்சாரம் சரிவரக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது! இந்தக் கொடுஞ்சூழலுக்கு நடுவேயும், 'சூரியன் இருக்க... கவலை எதற்கு!' என்றபடி சிலர் தெம்போடு நடைபோடுகிறார்கள்.

ஆம், கொஞ்சம் முன்யோசனையோடு, முன்கூட்டியே 'மாற்று சக்தி'யைப் பற்றி யோசித்த இவர்கள், சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால்... மின்வெட்டைப் பற்றிக் கண்டு கொள்வதுமில்லை. கவலைப்படுவதுமில்லை!
மின் வெட்டு இல்லவே இல்லை!

இப்படி மின்வெட்டு கவலையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் வீடுகள், நிறுவனங்கள் என்றிருப்பவற்றுள்... திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள 'அருணாசலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி'யும் ஒன்று! ஆம்... முழுக்க முழுக்க சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கூடம்!

''இந்தப் பகுதியில இருக்கற குழந்தைகளுக்காக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேந்த 'ஆல்வின் ஜாஸ்வர்’ன்றவர் 99-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கூடத்தை 40 மாணவர்களோட ஆரம்பிச்சார். சில காரணங்களால் அவரால சரிவர நடத்த முடியல. அதனால, 2005-ம் வருஷம் எங்கிட்ட பொறுப்பைக் கொடுத்தார். இப்போ சுத்துப்பட்டு பதினோரு கிராமத்தைச் சேர்ந்த 210 குழந்தைங்க படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லாதவங்க... வறுமை நிலையில் உள்ள பெற்றோரோட குழந்தைகள்,  இப்படிப்பட்ட குழந்தைகள்தான் எல்லாருமே.  அதனால, வெளிநாடுகள்ல இருந்து கிடைக்கற உதவிகளை வெச்சு இலவசமா கல்வி கொடுத்துட்டிருக்கோம்.
பாடங்களுக்கு அடுத்தபடியா கம்ப்யூட்டர், டி.வி. மூலமா நிறைய சொல்லிக் கொடுக்கிறோம். அதுக்கு, 'கரன்ட் கட்’ பெரிய பிரச்னையா இருந்துச்சு. அப்போதான், 'சோலார் பவர் யூனிட்’ போடலாம்னு முடிவு பண்ணி, 2009-ம் வருஷம் அதை அமைச்சோம். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துல கரன்ட் கட் பிரச்னையே இல்லை'' என்று முன்னுரை தந்த பள்ளி நிர்வாகி மதன், தொடர்ந்தார்.

தமிழகத்தில் சாதகமானச் சூழல் !

''தமிழ்நாட்டில் சோலார் பவருக்கு தட்பவெப்ப நிலை சாதகமா இருக்கு. டிசம்பர் மாசத்துல மட்டும்தான் மின் உற்பத்தி பாதியா குறையும். மத்த மாசங்கள்ல முழு உற்பத்தி இருக்கும். இங்க, 28 சோலார் பேனல்கள் வெச்சு, அது மூலமா ஒரு மணி நேரத்துக்கு ரெண்டரை கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி பண்றோம். அதை 'பேட்டரி’யில் சார்ஜ் பண்ணி பயன்படுத்துறோம்.

'லேப்’ல இருக்குற கம்ப்யூட்டர்கள்ல 'சி.ஆர்.டி. மானிட்டர்’கள்தான் இருக்கு. அதனால அதுக்கும், ஜெராக்ஸ் மெஷினுக்கும் மட்டும் அதிக அழுத்தம் உள்ள கரன்ட் தேவைப்படும். அந்த ரெண்டுக்கு மட்டும் மின்வாரியம் கொடுக்குற மின்சாரத்தைப் பயன்படுத்துறோம். மத்த எல்லாத்துக்குமே சோலார் கரன்ட்தான்.

குறைந்த அழுத்த மின் சாதனங்கள் !

சோலார் கரன்டை சிக்கனமா பயன்படுத்தணுங்கிறதுக்காக... 23 வாட்ஸ் டியூப் லைட், 49 வாட்ஸ் ஃபேன்னு குறைஞ்ச அழுத்தத்துல இயங்குற சாதனங்களைத்தான் பயன்படுத்துறோம். மொத்தம் 24 டியூப் லைட், 24 ஃபேன், 6 சி.எப்.எல்.பல்பு, ஒரு ஆர்.ஓ சிஸ்டம், ஒரு மோட்டார் (ஒன்றரை ஹெச்.பி), 3 கம்ப்யூட்டர், 2 பிரிண்டர், ஒரு எலக்டிரிக் பெல்னு மொத்தப் பள்ளிக்கூடமுமே சோலார் கரன்ட்லதான் இயங்குது. 

எப்பவாவது சோலார் கரன்ட் உற்பத்தி குறைஞ்சா... மின் வாரிய மின்சாரம் மூலமா பேட்டரிகளை சார்ஜ் பண்ணிக்குவோம். அதனால கரன்ட் பில் எங்களுக்கு ரொம்பக் குறைவாத்தான் ஆகும். எல்லாத்துக்கும் மேல... தடையில்லா மின்சார சப்ளை இருக்குது. இதுக்கு 'ஜெல்’ பேட்டரிகளைப் பயன்படுத்தினா, பத்து வருஷம் வரைக்கும் தாங்கும். சாதாரண பேட்டரிகளா இருந்தா... 5 வருஷம்தான் தாங்கும். அப்பப்போ பேட்டரிகளை மட்டும்தான் கவனிச்சு பராமரிக்க வேண்டியிருக்கும். வேற எந்த வேலையும் கிடையாது.

குறைவான செலவுதான் !

நாங்க அமைக்கிறப்போ, '80 வாட்ஸ்’ பேனல் ஒண்ணோட விலை 15 ஆயிரம் ரூபாய். அதனால எங்களுக்கு மொத்தம் ரெண்டரை கிலோ வாட் அளவுக்கு சோலார் யூனிட் அமைக்க, ஏழே முக்கால் லட்சம் ரூபாய் செலவாச்சு. இப்போ, 150 வாட்ஸ் பேனலே 7 ஆயிரத்து 500 ரூபாய்தான். அதேமாதிரி பேட்டரிகள்லயும் பல ரகங்கள் இருக்கு. இப்போ, ஆறு லட்ச ரூபாய் செலவுலயே, பத்து வருஷம் தாங்கக்கூடிய ஜெல் பேட்டரிகளை வெச்சு, 3 கிலோ வாட் அளவுக்கு உற்பத்தி பண்ற யூனிட் அமைச்சுடலாம். 65 ஆயிரம் ரூபாய்ல வீடுகளுக்கு அமைச்சுட முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஆனா, நாங்க இதுவரை மானியம் வாங்கறதுக்கு முயற்சிக்கவே இல்லை'' என்று பெருமை பொங்க தகவல்களைத் தந்தார் மதன்!

தொடர்புக்கு, மதன்,
செல்போன்: 99524-33997.

 உபத்திரவம் செய்யும் அரசாங்கம்!

 அரசாங்கமே சூரியசக்தி மின்சாரத்தைப் பற்றி தற்போது பெரிய அளவில் பிரசாரத்தைத் தொடர ஆரம்பித்துள்ளது. ஆனால், அதிகார வர்க்கம் மட்டும் இன்னமும், பழையத் தூக்கத்திலிருந்து விழிக்காமலே இருப்பதுதான் கொடுமை. இதற்கு உதாரணம்... மதனுக்கு நேர்ந்த அவதிதான்.
''ஆரம்பத்துல நாங்க சோலார் யூனிட் போட்டுட்டு, முறையா மின்வாரியத்துக்கு தகவலும் கொடுத்துட்டோம். பயன்பாடு இல்லாததால, தொடர்ந்து அடிப்படைக் கட்டணம் மட்டுமே கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனா, நாங்க கொடுத்த தகவல அவங்க சரியாக கவனிக்காம அசட்டையா இருந்துட்டு, கடைசியில... 'அதெப்படி இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு குறைச்சலா மின் கட்டணம் வரும். சோலார் மின்சாரம்னு சொல்லி யார ஏமாத்தறீங்க. மின்சாரத்தைத் திருடிட்டீங்க’னு எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆயிரம் ரூபாய் 'ஃபைன்’ போட்டு கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க. அப்பறம் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்துச்சு.

மத்த நாடுகள்ல எல்லாம் மின் உற்பத்தி பண்றவங்களுக்கு ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்து அரசாங்கமே உதவி பண்ணுது. இங்க உபத்திரவம்தான் பண்ணுது அரசாங்கம். பேனல்களுக்கும், பேட்டரிகளுக்கும் போடுற வரிகளைக் குறைச்சாலே... சோலார் மின்சார உற்பத்திக்கான சாதனங்கள வாங்கற செலவு கணிசமா குறைஞ்சுடும். மக்களும் அதிக அளவுல ஆர்வம் காட்டி, இதை அமைக்க முன்வருவாங்க'' என்று தன் அனுபவத்தைச் சொன்னார் மதன்.

-காசி. வேம்பையன் 
படங்கள்: க. முரளி

நன்றி: பசுமை விகடன்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!


சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.
சித்தர்கள் யார்?Temple images
அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன். (நூல் - அகத்தியர் பரிபாஷை)
தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.
இடைக்காடர் வாழ்க்கை - அவதாரம் தலம்: இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.
மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே
- போக முனிவர் 7000 நூல்
இடைக்காடர் ஞானஸ்தலம்: தற்பொழுது சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூராகும். பழங்காலத்தில் இவ்வூர் அழகிய பாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. இடைக்காடரின் சித்துகளாலும், அற்புதங்களாலும் இவ்வூரை பொது மக்களாலும், சிஷ்யர்களாலும் இவ்வூரை இடைக்காட்டூர் என்று அவர் பெயரில் அழைக்கப்பட்டது.
இடைக்காடர் பிறவியிலேயே ஞானம் கைவரப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். இடைக்காடர் தனது குல தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்தாலும் அவரது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மாவை நோக்கி விண்வெளியில் ஒன்றர கலந்திருப்பார். இவ்வாறு இவரின் தவக்கோலத்தில் விண்நோக்கி அமர்ந்திருப்பை வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போக மகரிஷி இவரை காணும் ஆர்வத்துடன் இவர் முன்வந்து காட்சியளித்தார். இதனையும் வந்திருப்பவர் போகர் என்பதை அறியாமல் இடைக்காடர் அவரை வணங்கி அங்கிருந்த தர்ப்பை புல்லை சேகரித்து ஆசனமாக செய்து அவரை அமரச் செய்து ஆட்டின் பாலை கறந்து கொடுத்து உபசரித்தார். இவரின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு மகிழ்ந்து போகர் இவரை தனது சீடனாக்கி அவருக்கு ஞானம், மருத்துவம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றை பல நாட்கள் அங்கு தங்கிருந்து உபதேசித்து அருள்பாலித்தார்.
சில காலம் பின்பு போகர் அவரை விட்டு விடைபெறும் நேரம் வந்த பொழுது இடைக்காடர் கண் கலங்கினார். அப்பொழுது இடைக்காடருக்கு கலங்காதே உனக்கு அருளிய ஞானத்தை வைத்து உலகம் உய்ய வாழ்விக்க அருள்வாயாக என்று கூறி மறைந்தார். இவ்வாறு போகரின் அருளால் ஞானம் பெற்ற இடைக்காடர் தனது தவத்தாலும், ஞானத்தாலும் முக்காலத்தை உணர்ந்தார். தனது குருவின் சொல்படி மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டார். அதன் பொருட்டு பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்கள் அடிப்படையாக விளங்குவது மற்றும் நிலைக்களுக்கும் காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கு விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.
இவர் தனது ஞான சிருஷ்டியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் கொடுமையான பருவ மாற்றத்தையும், அதனால் ஏற்படப் போகும் பஞ்சம், பசி மற்றும் பட்டினியை உணர்ந்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எச்சரித்தார். ஆனால், அவர்களோ அதனை பொருட்படுத்தவில்லை. இருப்பினும், அவர் தன் பொருட்டு பட்டினியிலிருந்து தனது ஆடுகளை காக்க, எந்த பருவ மாற்றத்திலும் பாதிப்படையாமல் வளரும் எருக்கஞ் செடியை உணவாக கொடுத்தார். இதனை கண்ட மக்கள் இவருக்கு சித்தம் கலங்கிவிட்டது என்று எள்ளி நகையாடினர். ஆனால் இடைக்காடரோ தனக்கும் உணவு கிடைக்க, குறுந்தானியமான குருவரகு எடுத்து வந்து அதனை மண்ணில் சேற்றோடு கலந்து அவர் குடிலில் மண்சுவர் எழுப்பினார். இதன்மூலம், எருக்கஞ் செடியை உண்ணும் ஆடுகளுக்கு உடலில் தினமும் ஏற்படும் அரிப்பை போக்க மண் சுவர்களில் உடம்பை தேய்க்கும். அதன் மூலம் பஞ்ச காலகட்டத்தில் அதனை உணவாக வைத்து கொள்ளலாம் என எண்ணினார். அவர் எண்ணியபடியே, மக்களும் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் இறக்கத் தொடங்கினர். ஆனால் இடைக்காடரும் அவரது ஆடுகளுடன் எப்பொழுது போல் எவ்வித பாதிப்பின்றி நன்றாக உயிர் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த நவக்கிரக நாயகர்கள் ஆச்சர்யம் அடைந்து அதனை கண்ணூற காண விரும்பி இடைக்காடரின் மண்குடிலுக்கு வந்து சேர்ந்தனர்.
உலகையே ஆட்சி செய்கின்ற நவக்கிரக நாயகர்கள் தனது குடிசைக்கு வந்தமைக்கு இடைக்காடர் பெரும் மகிழ்ச்சியுடன் திகைத்து நின்று அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு ஆட்டுப் பாலுடன், குருவரகு கஞ்சியும் கொடுத்து உபசரித்தார். அவரின் உபசரிப்புக்கு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் அவருக்காக உண்டனர். பின்னர் எருக்கஞ்செடிகளை தின்ற ஆடுகளின் பாலின் காரணமாக அதனை உண்ட அவர்கள் மயக்கமுற்று படுத்துறங்கினர். இதனை கண்ட இடைக்காடருக்கு சற்று ஒரு யோசனை தோன்றியது. நவக்கிரகங்களின் வேறுபட்ட நிலைகளால் தானே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் உறங்கி கொண்டிருந்த நவக்கிரக நாயகர்களை பஞ்சம் நீக்குகின்ற ஒரு நிலையில் இடமாற்றி படுக்க வைத்தார். இதன்மூலம், அடுத்த கணமே, பூமியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்தது பெரும் மழை பெய்தது பூமி குளிர்ந்தது வறட்சி நீங்க நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களும் மலர்ச்சியுடன் உயிர் பெற்றன. பஞ்சம் நீங்கியது.
பூமியில் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சியையும் மாற்றத்தையும் உணர்ந்த நவக்கிரக நாயகர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தனர். இது அனைத்தும் இடைக்காடரின் செயலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து அவர்கள் அவரின் நுட்பத்தினையும், சகல உயிர்கள் மேல் அவர் கொண்ட அன்பையும் நினைத்து நெகிழ்ந்தனர். அதே நேரத்தில் இடைக்காடரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்த அவர்கள் அவரை தொந்தரவு செய்ய மனமின்றி வாழ்த்தி இவரால் பூலோக மக்களுக்கு நன்மைகள் நிகழட்டும் என்று ஆசி வழங்கி மறைந்தனர்.
முக்திஸ்தலம்: இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.
ஆன்மீக பணி : சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.
இருப்பிடம்: மதுரை டூ பரமக்குடி சாலையில் முத்தணேந்தல் என்ற ஊரின் அருகே உள்ளது. (மதுரையிலிருந்து 39 கிலோ மீட்டர்)
வழித்தடம் : மதுரையில் பெரியார் நிலையம் டூ இடைக்காட்டூர். பேருந்து எண் : 99 எப்
குரு வணக்கம்:
ஆதியாம் சப்தரிஷி மார்களோடு அருள் பூண்ட
பதினென்பேர் பாதம் போற்றி!
சேதியாம் மூத்ததொரு முனிவர் மூதோர்
செப்பரிய பெரியோர்கள் சுகந்தாள் போற்றி!
நீதியாம் ரவியோடு மதியும் தேவர் நிலையான
மூவருடன் இணைகள் போற்றி!
ஜோதியென சென்னிமீது உரையும் கலைகள்
ஓதுவித்த குருவடிகள் போற்றி! போற்றி!
ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச் செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைக்களுக்கருளிய கோனார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே! மண்சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
பாடல் : மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்தது என்று எண்ணோடா தாண்டவக்கோனே
விளக்கம் : கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்தி விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.
பாடல் : சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே
விளக்கம் : கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சும்பாம்பை அடக்கி உள்ளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால் சித்தி கிடைக்கும்.
பாடல் : தேவன் உதவியின்றி பசுவே! தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே
விளக்கம் : உயிரே ! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்ட முடியாது. உயிருக்கு உயிராய் இருப்பது பரம்பொருளின் அருள்தான் என்பதை மறவாதே!

வியாழன், 25 அக்டோபர், 2012

ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன ?


ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன ?



ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன ? 


Appendix அதாவது ஒட்டு குடல் / குடல் வால்  என்பது ஒரு வியாதி அல்ல. 
மக்களிடையே அவ்வாறு ஒரு வார்த்தை வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, சமயங்களில் மருத்துவரும் கூட அவ்வாறே உச்சரிப்பதுண்டு - காரணம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக.
அப்படியென்றால் சரியான உச்சரிப்பு முறை?
" ஒட்டுக்குடல் வீக்கம்" என்பது மிகச்சரியானது.
 
எங்கு அமைந்துள்ளது?:

அடிவயிற்றின் வலப்புறத்தில் (Right Lower Abdomen) உள்ளது.  உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில அமைந்துள்ளது இந்த  appendix எனப்படும் இருந்தும்  பயனில்லா (Vestigial organ) உறுப்பு. இதன் அமைப்பு பார்பதற்கு ஒரு குடலை போலவே இருந்தாலும் அளவில் மிகச் சிறியது அதாவது  10 cm நீளமும் 1cm க்கும் குறைவான பருமனும் கொண்ட ஒரு விரல் போன்ற பகுதி.   

ஒட்டுக்குடலில் என்னென்ன வியாதிகள் வரலாம்?
  1.  வீக்கம் 
  2.  சீழ் கட்டி(Abscess )  - மிகவும் ஆபத்தானது, காரணம்  கட்டி வெடித்து உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
  3.  புற்று கட்டி - அரிதாக. 
ஒட்டுக்குடல் வீக்கம்  - எப்படி  கண்டுகொள்வது?

 வயிற்று  வலி, வாந்தி,அதனை  தொடர்ந்து காய்ச்சல் - இந்த வரிசையில் வருவது தான்  இயல்பான ஒன்று ஆனால் இப்படிதான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .(உ.ம்)  மாறாக காய்ச்சல் வந்தபிறகு வயிற்று வலி வரலாம்.





வயிற்று  வலி (Abdominal pain): வலி ஆரம்பத்தில் தொப்புளை சுற்றி இருந்தாலும் விரைவில் அது அடிவயிற்றின் வலப்புறம் (Mc Burney point) சென்றுவிடும்- இது ஒரு மிக முக்கிய அறிகுறியாகும்.

 இந்த நோய் உள்ளவர்கள் வயிற்றில்  கை வைக்க விட மாட்டார்கள் - தொட்டால் சிணுங்கி போல் சினுங்குவார்கள். (சமயத்தில் சிறு குழந்தைகள் சில நடிப்பதும் உண்டு - உ.ம்: பள்ளி செல்ல விரும்பாதவர்கள் )

 டாக்டர் வயிற்றை அழுத்தி பரிசோதிக்கும் பொழுது - ஒரு மரப்பலகை போல் உணர்வார் - காரணம் வலியால் தன்னிச்சையாக வயிற்றின் சதைகள் இருக்கப்ப்டுவதால். வயிற்றை கை வைத்து அழுத்தும் பொழுது இருந்தததை விட கையை எடுக்கும் பொழுது வலி அதிகமாக உணரப்படும்(Rebound Tenderness). 
இருமல் வலியை அதிகரிக்கும்.

எந்த வயதினர் பெறும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்?
விடலைப்பருவத்தினரே (Adolescent age) 10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர். 
மழலையர் மிக அரிதாக பாதிப்புக்குள்ளாவார்கள் எனினும் நோயை கண்டறிய நிறைய சிக்கல்கள் உள்ளன. உ.ம்  குழந்தையால் பெரியவர்கள் போல் நோயின் தன்மையை விவரிக்க தெரியாது அதனால் தாமதமாகத்தான் மருத்துவரை அணுக நேரிடுகிறது.குடல் வால் ஓட்டையும் இவர்களுக்கே அதிகம்   காரணம் நோய் கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம்.
மேலும் குழந்தைகளின் வேறு சில வியாதிகள் இதைபோல் பாவிப்பது.
நோய் கண்டறிய என்னென்ன மருத்துவ ஆய்வுகள் (Investigations - Tests) உள்ளன?

மேல் குறிப்பிட்டுள்ள நோயின் அறிகுறிகளுடன்
  1. ரெத்த பரிசோதனை (Blood  test) - ரெத்த வெள்ளையணுக்களின் (white bloodcells -WBC) எண்ணிக்கை அதிகரிப்பு.
  2. ஸ்கேன்: (Ultrasound Scan (USG) - மீயொலி சோதிப்பான் & CT SCAN- கணினி கதிரியக்க சோதிப்பான்)
  3. சிகிச்சைக்கு பிறகு ஒட்டுக்குடல் திசு பரிசோதனை நுண்ணோக்கி மூலம். - இதன் மூலம் தான்  நாம் சரியான நோயை கண்டறிய முடியும். நீங்கள் கேட்கலாம -அந்த உறுப்பையே உடலிலிருந்து அகற்றிய பிறகு நோயினை கண்டறிய என்ன அவசியம் என்று!!! . ஏனென்றால் ஒருவேளை பரிசோதனையில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் முழு சிகிச்சை அதன் பிறகுதான் ஆரம்பிக்கும். 
 தீர்வுதான் என்ன (Treatment) ?


 அறுவை சிகிச்சைதான் தலைசிறந்ததாக கருதப்படுகிறது.
உடனடியாக வலியையும் காய்ச்சலையும் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும்  சரியான தீர்வு அறுவை சிகிச்சை தான். ஏனெனில் ஆண்டிபயாடிக்ஸ் (நுன்ன்ன்னுயிர்கொல்லி - Antibiotics) கொடுக்கப்பட்டு வந்தாலும் முழுவதும் குணப்படுத்துதல் சந்தேகத்திற்குரியது. மேலும் ஒட்டுகுடலில் ஓட்டை விழும் வாய்ப்பும் அதனால் ஏற்படும் உயிர்சேதமும் இதை ஒரு மருத்துவ  அவசர நிலமை (Medical Emergency) என்று பட்டியலிடுகிறது.

என்ன மாதிரியான அறுவை சிகிச்சைகள் உள்ளன?

(Appendicectomy) - ஒட்டுகுடல் அகற்றுதல்: இரண்டு முறைகள் உள்ளன.





1 ) ஓபன் சர்ஜரி (Open Surgery): மெக் பர்நிஸ் பாயிண்ட் என்ற இடத்தில் அல்லது வலி எங்கு அதிகமாக உணரப்படுகிறதோ அங்கு வயிற்றை  கீரி உள்சென்று ஒட்டுக்குடலை அகற்றுதல்.



2) லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy): அதாவது வயிறு உள்நோக்கி கருவி  (Laprascopy) கொண்டு வயிற்றின்மேல் சிறு கீரல் மூலம் அக்கருவியை உள்செலுத்தி அதில் உள்ள கேமராவை (Video camera) தொலைக்காட்சிபெட்டியில் இணைத்து வயிற்றின் உட்புறம் இருப்பதை காணமுடிகிறது. தேவைப்பட்டால் இன்னும் ஒன்றிரண்டு சிறு கீறல்கள் மூலம் மெல்லிய நீளமான அறுவை சகிச்சை உபகரணங்களை உட்செலுத்தி ஒட்டுக்குடலை அகற்றுதல். 
இது மருத்துவருக்கு வயிற்றின் நல்ல ஒரு உள்தோற்றத்தை வெளிக்கொணர்கிறது அதுவும் சிறு கீரல் மூலம்.










எது சிறந்தது ?

ஓபன் சர்ஜரி: இதில் வயிறு 6 முதல் 8 cm வரை கீரப்படுவதால் திசுக்கள் (Tissues) அதிகமாக நசுக்கப்பட்டு சேதமடைகின்றன ஆகவே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதிக வலி வர வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாள் அதிகமாக மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். தழும்பு பெரிதாக தெரிய வாய்ப்பு உள்ளது. எனினும் கைதேர்ந்த மருத்துவர்கள் செய்யும் பொழுது மேற்கண்ட அனைத்தும் குறைந்து  ஏறத்தாழ ஒரு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை போல் செய்ய முடியும்.

லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy):

மிகச்சிறிய கீறல்கள் அதுவும் தொப்புளுக்கு அருகில் மற்றும் பிறப்பு உறுப்புக்கு சற்று மேலே உள்ள சருமம் நிறைந்த பகுதியில் - இதனால் சிறிய தழும்புகள் அதுவும் மறைவான பகுதியில் அதோடு வலியும் குறைவு - அறுவை சிகிச்சைக்கு பிறகு. குறைவான நாட்கள்  மருத்துவமனையில்  தங்குதல். 

இருப்பினும் ஓபன் சர்ஜறியே சிறந்தது என  சில மருத்துவர்கள்  கருதுகிறார்கள். ஏனெனில் சமயங்களில் ஒட்டுக்குடல் நன்றாக இருப்பதும் தொந்தரவு வயிற்றின் வேறு பகுதியில் இருப்பதும் வயிற்றை கீறிய பிறகு கண்டறியப்படுகிறது. அப்பொழுது ஓபன் சர்ஜரி மிக சிறப்பானதாக அமையும். 

அதிநவீன சிகிச்சை ஏதாவது உண்டா? 

"NOTES" - நோட்ஸ் எனப்படும் அதிநவீன சிகிச்சைஐ  தமிழ் மருத்துவர்கள் சிலர் ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.



இந்த "NOTES" (Natural Orifice Transluminal Endoscopic Surgery) முறையால் உடலின் வெளிப்புறம் எந்த கீறலோ அதனால் தழும்போ ஏற்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு உள்நோக்கி கருவி மூலம் செய்யப்படுகிறது, அதாவது வளைந்துகொடுக்கும் குழாய் ஒன்று வாய் வழியாக செலுத்தப்பட்டு இரைப்பையில் ஒரு சிறு துளையிட்டு ஒட்டுக்குடலை அணுகி அகற்றப்படுகிறது (அதே வழியாக).
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மிகச்சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஒட்டுகுடல் வீக்கம் ஏற்பட காரணம் என்ன?

ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற குடல் - அதாவது ஒருவழிப்பாதை தான். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்வதுண்டு. திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது  வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒட்டுகுடலின்  வாய் மூடப்படும்(அழுத்தப்படும்) நேரத்தில் ரெத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும் அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும், கிருமிகளும்  சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல் வீங்குகிறது(சீழ் பிடிக்கிறது). அப்படியே விட்டால் அது வெடித்து சீழ் முழு வயிற்றுக்கும் பரவி உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கல், திடப்பொருளை விழுங்குதல(Foreign body swallow), நார் சத்து குறைவான உணவை உண்பது, வயிற்றில்  உள்ள சில ஒட்டுண்ணிகள் (Parasites)  இவற்றில் எதாவது ஒன்று தான் ஒட்டுக்குடலின் வாய் மூடவும் அதனால் வீக்கம் ஏற்படவும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 


மருத்துவமனையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டி வரும்?

குறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள் இருக்க வேண்டி வரும். இது ஒவ்வொருவரின் நிலையை பொருது.

ஒட்டுக்குடல் வெடித்திருக்கும் பட்சத்தில் குறைந்தது ஒரு வாரம் இருக்க நேரிடும்.


எப்பொழுது தையல் பிரிப்பார்கள்?

பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள்  பிரிக்கப்பட்டுவிடும். 
சீழ் பிடித்தாலோ அல்லது விடாது இருமல்/ தும்மல் / வாந்தி வரும் பட்சத்தில் சிறிது தாமதம் ஆகலாம்.


என்ன விதமான மயக்க மருந்து கொடுக்கப்படும்?

முழு மயக்கம் என சொல்லப்படும் ஜென்றல் அனஸ்தீசியா (General Anesthesia)கொடுக்கப்படும்.
நாம் முற்றிலுமாக சுயநினைவை இழந்த பிறகு நமது ரெத்த ஓட்டம், சுவாசம் அனைத்தும் மயக்க மருந்தியியல் மருத்துவரால் சீற்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன் நாம் வெறும் வயிற்றில் இருப்பது கட்டாயம. சாப்பாடு, தண்ணீர் என 6  மணி   முதல்  8 மணி நேரம் வரை எதுவும் சாப்பிட கூடாது. 

சமயங்களில் முதுகு தண்டுவடத்தில் (Spinal Cord) மருந்து செலுத்தி வயிறு மற்றும் கால்களை மறுத்து போக வைப்பார்கள். இது பெரும்பாலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அதுவும் வெறும் வயிற்றில் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 


நன்றி : தமிழில் மருத்துவம்