View status

View My Stats

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை






மேலே


லட்சக் களக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி. 30 நாட்களில் வருமானம்!
“ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிற ‘நாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
மாதம் 10 ஆயிரம்!
என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
குறைந்த நாளில் அதிக எடை!
‘நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.
பழைய பண்ணைகளே போதும்!
“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும்.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.
இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!
முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!
காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.
காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.
கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.
விற்பனையில் வில்லங்கமில்லை
அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ‘நாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.
தொடர்புக்கு:
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின அறிவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் – 637002
தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,
அய்யம் பாளையம் கிராமம்,
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

குழந்தை அழுகையின் குவா குவாவிற்கு என்ன அர்த்தம்?

Temple images
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா? என்றது.பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்! என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. க்வா க்வா என்று அழ ஆரம்பித்து விட்டது. க்வா க்வா என்றால், எங்கே எங்கே என்று அர்த்தம். இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே? என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. க்வா க்வா என்பது தான் இப்போது குவா குவா ஆகியிருக்கிறது. மீண்டும் க்வா க்வா போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!

சனி, 1 டிசம்பர், 2012

மின்வெட்டுக்கு டாட்டா... ஜொலிக்க வைக்கும் சோலார்..!


நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 'மூன்று மணி நேர மின்வெட்டு' என ஆரம்பித்தது... தற்போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்பதையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதுமே இத்தகையத் தாறுமாறான மின்வெட்டு நீடிப்பதால்... விவசாயம், வணிக நிறுவனங்கள், வீடுகள் என எந்தப் பயன்பாட்டுக்குமே மின்சாரம் சரிவரக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது! இந்தக் கொடுஞ்சூழலுக்கு நடுவேயும், 'சூரியன் இருக்க... கவலை எதற்கு!' என்றபடி சிலர் தெம்போடு நடைபோடுகிறார்கள்.

ஆம், கொஞ்சம் முன்யோசனையோடு, முன்கூட்டியே 'மாற்று சக்தி'யைப் பற்றி யோசித்த இவர்கள், சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால்... மின்வெட்டைப் பற்றிக் கண்டு கொள்வதுமில்லை. கவலைப்படுவதுமில்லை!
மின் வெட்டு இல்லவே இல்லை!

இப்படி மின்வெட்டு கவலையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் வீடுகள், நிறுவனங்கள் என்றிருப்பவற்றுள்... திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள 'அருணாசலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி'யும் ஒன்று! ஆம்... முழுக்க முழுக்க சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கூடம்!

''இந்தப் பகுதியில இருக்கற குழந்தைகளுக்காக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேந்த 'ஆல்வின் ஜாஸ்வர்’ன்றவர் 99-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கூடத்தை 40 மாணவர்களோட ஆரம்பிச்சார். சில காரணங்களால் அவரால சரிவர நடத்த முடியல. அதனால, 2005-ம் வருஷம் எங்கிட்ட பொறுப்பைக் கொடுத்தார். இப்போ சுத்துப்பட்டு பதினோரு கிராமத்தைச் சேர்ந்த 210 குழந்தைங்க படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லாதவங்க... வறுமை நிலையில் உள்ள பெற்றோரோட குழந்தைகள்,  இப்படிப்பட்ட குழந்தைகள்தான் எல்லாருமே.  அதனால, வெளிநாடுகள்ல இருந்து கிடைக்கற உதவிகளை வெச்சு இலவசமா கல்வி கொடுத்துட்டிருக்கோம்.
பாடங்களுக்கு அடுத்தபடியா கம்ப்யூட்டர், டி.வி. மூலமா நிறைய சொல்லிக் கொடுக்கிறோம். அதுக்கு, 'கரன்ட் கட்’ பெரிய பிரச்னையா இருந்துச்சு. அப்போதான், 'சோலார் பவர் யூனிட்’ போடலாம்னு முடிவு பண்ணி, 2009-ம் வருஷம் அதை அமைச்சோம். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துல கரன்ட் கட் பிரச்னையே இல்லை'' என்று முன்னுரை தந்த பள்ளி நிர்வாகி மதன், தொடர்ந்தார்.

தமிழகத்தில் சாதகமானச் சூழல் !

''தமிழ்நாட்டில் சோலார் பவருக்கு தட்பவெப்ப நிலை சாதகமா இருக்கு. டிசம்பர் மாசத்துல மட்டும்தான் மின் உற்பத்தி பாதியா குறையும். மத்த மாசங்கள்ல முழு உற்பத்தி இருக்கும். இங்க, 28 சோலார் பேனல்கள் வெச்சு, அது மூலமா ஒரு மணி நேரத்துக்கு ரெண்டரை கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி பண்றோம். அதை 'பேட்டரி’யில் சார்ஜ் பண்ணி பயன்படுத்துறோம்.

'லேப்’ல இருக்குற கம்ப்யூட்டர்கள்ல 'சி.ஆர்.டி. மானிட்டர்’கள்தான் இருக்கு. அதனால அதுக்கும், ஜெராக்ஸ் மெஷினுக்கும் மட்டும் அதிக அழுத்தம் உள்ள கரன்ட் தேவைப்படும். அந்த ரெண்டுக்கு மட்டும் மின்வாரியம் கொடுக்குற மின்சாரத்தைப் பயன்படுத்துறோம். மத்த எல்லாத்துக்குமே சோலார் கரன்ட்தான்.

குறைந்த அழுத்த மின் சாதனங்கள் !

சோலார் கரன்டை சிக்கனமா பயன்படுத்தணுங்கிறதுக்காக... 23 வாட்ஸ் டியூப் லைட், 49 வாட்ஸ் ஃபேன்னு குறைஞ்ச அழுத்தத்துல இயங்குற சாதனங்களைத்தான் பயன்படுத்துறோம். மொத்தம் 24 டியூப் லைட், 24 ஃபேன், 6 சி.எப்.எல்.பல்பு, ஒரு ஆர்.ஓ சிஸ்டம், ஒரு மோட்டார் (ஒன்றரை ஹெச்.பி), 3 கம்ப்யூட்டர், 2 பிரிண்டர், ஒரு எலக்டிரிக் பெல்னு மொத்தப் பள்ளிக்கூடமுமே சோலார் கரன்ட்லதான் இயங்குது. 

எப்பவாவது சோலார் கரன்ட் உற்பத்தி குறைஞ்சா... மின் வாரிய மின்சாரம் மூலமா பேட்டரிகளை சார்ஜ் பண்ணிக்குவோம். அதனால கரன்ட் பில் எங்களுக்கு ரொம்பக் குறைவாத்தான் ஆகும். எல்லாத்துக்கும் மேல... தடையில்லா மின்சார சப்ளை இருக்குது. இதுக்கு 'ஜெல்’ பேட்டரிகளைப் பயன்படுத்தினா, பத்து வருஷம் வரைக்கும் தாங்கும். சாதாரண பேட்டரிகளா இருந்தா... 5 வருஷம்தான் தாங்கும். அப்பப்போ பேட்டரிகளை மட்டும்தான் கவனிச்சு பராமரிக்க வேண்டியிருக்கும். வேற எந்த வேலையும் கிடையாது.

குறைவான செலவுதான் !

நாங்க அமைக்கிறப்போ, '80 வாட்ஸ்’ பேனல் ஒண்ணோட விலை 15 ஆயிரம் ரூபாய். அதனால எங்களுக்கு மொத்தம் ரெண்டரை கிலோ வாட் அளவுக்கு சோலார் யூனிட் அமைக்க, ஏழே முக்கால் லட்சம் ரூபாய் செலவாச்சு. இப்போ, 150 வாட்ஸ் பேனலே 7 ஆயிரத்து 500 ரூபாய்தான். அதேமாதிரி பேட்டரிகள்லயும் பல ரகங்கள் இருக்கு. இப்போ, ஆறு லட்ச ரூபாய் செலவுலயே, பத்து வருஷம் தாங்கக்கூடிய ஜெல் பேட்டரிகளை வெச்சு, 3 கிலோ வாட் அளவுக்கு உற்பத்தி பண்ற யூனிட் அமைச்சுடலாம். 65 ஆயிரம் ரூபாய்ல வீடுகளுக்கு அமைச்சுட முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஆனா, நாங்க இதுவரை மானியம் வாங்கறதுக்கு முயற்சிக்கவே இல்லை'' என்று பெருமை பொங்க தகவல்களைத் தந்தார் மதன்!

தொடர்புக்கு, மதன்,
செல்போன்: 99524-33997.

 உபத்திரவம் செய்யும் அரசாங்கம்!

 அரசாங்கமே சூரியசக்தி மின்சாரத்தைப் பற்றி தற்போது பெரிய அளவில் பிரசாரத்தைத் தொடர ஆரம்பித்துள்ளது. ஆனால், அதிகார வர்க்கம் மட்டும் இன்னமும், பழையத் தூக்கத்திலிருந்து விழிக்காமலே இருப்பதுதான் கொடுமை. இதற்கு உதாரணம்... மதனுக்கு நேர்ந்த அவதிதான்.
''ஆரம்பத்துல நாங்க சோலார் யூனிட் போட்டுட்டு, முறையா மின்வாரியத்துக்கு தகவலும் கொடுத்துட்டோம். பயன்பாடு இல்லாததால, தொடர்ந்து அடிப்படைக் கட்டணம் மட்டுமே கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனா, நாங்க கொடுத்த தகவல அவங்க சரியாக கவனிக்காம அசட்டையா இருந்துட்டு, கடைசியில... 'அதெப்படி இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு குறைச்சலா மின் கட்டணம் வரும். சோலார் மின்சாரம்னு சொல்லி யார ஏமாத்தறீங்க. மின்சாரத்தைத் திருடிட்டீங்க’னு எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆயிரம் ரூபாய் 'ஃபைன்’ போட்டு கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க. அப்பறம் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்துச்சு.

மத்த நாடுகள்ல எல்லாம் மின் உற்பத்தி பண்றவங்களுக்கு ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்து அரசாங்கமே உதவி பண்ணுது. இங்க உபத்திரவம்தான் பண்ணுது அரசாங்கம். பேனல்களுக்கும், பேட்டரிகளுக்கும் போடுற வரிகளைக் குறைச்சாலே... சோலார் மின்சார உற்பத்திக்கான சாதனங்கள வாங்கற செலவு கணிசமா குறைஞ்சுடும். மக்களும் அதிக அளவுல ஆர்வம் காட்டி, இதை அமைக்க முன்வருவாங்க'' என்று தன் அனுபவத்தைச் சொன்னார் மதன்.

-காசி. வேம்பையன் 
படங்கள்: க. முரளி

நன்றி: பசுமை விகடன்.